
தாவரங்களை உண்ணும் பூச்சிகளைப் பார்த்திருப்போம். ஆனால், பூச்சிகளையே உணவாக உட்கொள்ளும் தாவரத்தைப் பற்றி நீங்கள் அறிந்தது உண்டா? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா குட்டீஸ்! ஆனால் அறிவியல் உலகில் இதுவும் சாத்தியமான உண்மை தான். அந்தத் தாவரத்தின் பெயர் என்ன? அதன் தன்மைகள் என்ன என்பதைப் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.
விவசாயத்தில் புழு, பூச்சிகள் தான் விவசாயிகளுக்குப் பிரதான எதிரியாக உள்ளன. பூச்சிகள் பயிர்களை நாசப்படுத்தி விடுவதால்தான் மகசூல் குறைகிறது. இதன் காரணமாகவே விவசாயிகள் பலரும் செயற்கை உரங்களான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு தாவரம் மட்டும் பூச்சிகளையே உண்கிறது.
இந்த விசித்திரமான தாவரத்தின் பெயர் நெப்பந்தஸ். இத்தாவரத்திற்கு நெப்பந்திசு, கெண்டி, தொங்கும் குடுவைகள் மற்றும் குடுவையுருத் தாவரம் போன்ற பெயர்களும் உண்டு. மேலும் இத்தாவரம் ஜாடிச் செடிகள் என தோட்டக்கலைத் துறையால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Pitcher Plant என்று அழைக்கப்படுகிறது. பள்ளிப் பாடப்புத்தகத்திலும் நெப்பந்தஸ் தாவரம் பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
கெண்டி பேரினத்தில் பல்வேறு காலநிலைகளில் வளரும் தன்மை பெற்ற சுமார் 130 இனங்கள் உள்ளன. இதில் செடி வகைகள் மட்டுமே 70 இனங்கள். இத்தாவரங்கள் ஈரப்பதம் மிக்க இடங்களில் நன்றாக செழித்து வளரும். இன்றைய காலகட்டத்தில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் நெப்பந்தஸ் தாவரம் காணப்படுகிறது.
இவை 1 அடி முதல் 70 அடி உயரம் வரை வளரும் தொற்றுக் கொடிகளைக் கொண்டது. நெப்பந்தஸின் இளம் குடுவைகள் பெரும்பாலும் மூடியே இருக்கும். முதிர்ச்சியடைந்த குடுவைகளின் மேற்புறம் மூடி போன்ற அமைப்புடன் உள்நோக்கி மடங்கி இருக்கும்.
குடுவையின் வாயிற்பகுதியில் எண்ணற்ற தேன் சுரப்பிகள் உள்ளன. மேலும் குடுவையின் உள்ளே மூன்றில் ஒரு பங்கு பெப்சின் என்ற திரவம் உள்ளது. நெப்பந்தஸ் தாவரத்தின் கவர்ச்சிகரமான நிறம், வாசனை, தேன் மற்றும் திட்டுகள் பூச்சிகளை கவர்ந்திழுக்கின்றன. அப்படி பூச்சிகள் குடுவையைத் தொடும் போது, தேன் சுரப்பிகளில் வழுக்கி குடுவையின் உள்ளே விழுந்து விடும். அதன்பிறகு பூச்சிகளால் தப்பித்து மேலே வரவே முடியாது. குடுவையில் இருக்கும் பெப்சின் திரவம், பூச்சிகளை செரிமானம் செய்கிறது. இதன் மூலம் நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் சத்துக் குறைபாட்டை இத்தாவரம் நிவர்த்தி செய்து கொள்ளும்.
குடுவையின் மீதுள்ள மூடி போன்ற அமைப்பு, மழைத்துளிகள் குடுவையில் விழுவதைத் தடுக்கிறது. ஆண் மற்றும் பெண் தாவரம் என இரண்டு வகையாக இருக்கும் நெப்பந்தஸில், ஆண் தாவரத்தின் பூக்கள் 4 முதல் 16 சேகரங்களைக் கொண்டிருக்கும். பெண் தாவரத்தின் பூக்கள் 4 சூலகங்களைக் கொண்டுள்ளன.
கோயம்புத்தூரில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் அருங்காட்சியகம் உள்ளது. இதன் பின்புறம் நெப்பந்தஸ் தாவரங்கள் அதிகளவில் உள்ளன. யார் வேண்டுமானாலும் இத்தாவரங்களைப் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒருசில தாவரவியல் ஆர்வலர்கள் தங்கள் வீடுகளில் நெப்பந்தஸ் தாவரத்தை வளர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.