

ஒரு நாள் பீர்பாலிடம் ஒரு பெரியவர் வந்து, "என் பணம், நகை எல்லாம் கொள்ளை போய்விட்டது. நீங்கள் அவனைக் கண்டுபிடித்துத் தண்டனை வாங்கிக் கொடுத்து, எனது பொருள்களை மீட்டுத் தாருங்கள்" என்றார்.
உடனே பீர்பால், "உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உள்ளதா?" எனக் கேட்டார்.
பெரியவர், "என் வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் மேல் தான் சந்தேகமாக இருக்கிறது" என்றார்.
மறுநாள், பீர்பால் அனைவரையும் அழைத்து ஒரு கைத்தடியைக் கொடுத்து, "இது ஒரு மந்திரக் கைத்தடி. ஒவ்வொருவருக்கும் ஒரு கைத்தடியைக் கொடுத்துள்ளேன். யார் திருடினீர்களோ, அவர்கள் கைத்தடி நாளை காலை அரை அங்குலம் வளர்ந்திருக்கும்" என்று கூறினார்.
அடுத்த நாள் அவர்களைத் தனித் தனியாக வைத்திருந்துவிட்டு, ஒவ்வொருவரையும் தனியாக வெளியே வரச் செய்தார்.
அதில் ஒருவருடைய கைத்தடி மட்டும் அரை அங்குலம் குறைந்திருந்தது.
உடனே பீர்பால், அவனிடம், "நீதானே திருடினாய்?" எனக் கேட்டார்.
திருடிய நபர், "ஐயா! என்னை மன்னித்துவிடுங்கள்" எனக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.
பணத்தைப் பறிகொடுத்த பெரியவர், பீர்பாலிடம், "எப்படி ஐயா கண்டுபிடித்தீர்கள்?" எனக் கேட்டார்.
உடனே பீர்பால், "பெரியவரே! இது மந்திரக் கைத்தடி அல்ல; இது வளரவும் செய்யாது! திருடியவன் தடி அரை அங்குலம் வளர்ந்து தன்னைக் காட்டிவிட்டுவிடும் என்று பயந்து தன் கைத்தடியை அரை அங்குலம் வெட்டிவிட்டான். அதனால்தான் மாட்டிக்கொண்டான்" என்று பதிலளித்தார்.
திருடியவனிடமிருந்து பொருள்களை வாங்கிக் கொடுத்தார்.
உடனே பெரியவர், பீர்பாலைப் பாராட்டி, அந்த வேலையாளை வேலையை விட்டு நீக்கினார்.
குட்டீஸ்! எப்போதும் யாரிடமும் எந்தப் பொருளையும் திருடக் கூடாது. நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.