

ஒரு மலையின் அடிவாரத்தில், பெரிய ஏரி ஒன்றும், அதன் அருகே சிறிய நீரோடை ஒன்றும் இருந்தன. மலையில் உள்ள சுனையில் உருவாகி வரும் அந்தச் சிற்றோடை, ஆடு தாண்டிவிடக் கூடிய அளவுக்குச் சிறியது.
ஏரி சிற்றோடையைப் பார்த்து, "பார்த்தாயா, நான் எவ்வளவு பெரிதாக இருக்கிறேன். வெகு தூரத்திலிருந்தும், மலை உச்சியிலிருந்தும் பார்க்கும்போது கூட நான் தெரிவேன். ஆனால் நீயோ, ஆடு தாண்டும் அகலம்தான் இருக்கிறாய். மேலும், கோடைகாலத் துவக்கத்திலேயே நீ வறண்டுவிடுவாய். நீ ஒரு நோஞ்சான்" என்றது ஏளனமாக.
சிற்றோடையும், "ஆமாம், நீ மிகப் பெரியவன்தான். நீ கடல் போல் இருப்பதாக மனிதர்கள் பேசிக்கொள்வதை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால், நானோ, மற்றவர்களுக்குத் தெரியாத அளவுக்கு மிகச் சிறியவன்" என்றது கழிவிரக்கத்தோடு.
அந்த ஏரி பெரிதாக இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அதற்குத் துளிகூடக் கிடையாது.
ஒரு மலையாடு ஏரியிடம் வந்து, "எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. நான் உன்னிடமிருந்து கொஞ்சம் நீர் பருகிக் கொள்ளட்டுமா?" என்று கேட்டது.
"உனது குளம்புகள் அழுக்கடைந்துள்ளன. உனக்கு நான் நீர் தர மாட்டேன்.”
மலையாடு தாகத்தோடு திரும்பிச் சென்று, வேறு எங்காவது குளம் - குட்டையோ, சுனையோ, நதியோ தென்படுகிறதா என்று மலையில் தேடித் திரிந்தது. அதன் கண்ணுக்கு எதுவும் தட்டுப்படவில்லை.
அப்போது சிற்றோடையின் அழைப்பு கேட்டது. "மலையாடே, மலையாடே! இங்கே வா! நீ மிகவும் தாகத்தோடு இருக்கிறாய் என்றும், நீர் தேடி அலைந்துகொண்டிருக்கிறாய் என்றும் எனக்குத் தெரியும். நான் மிகச் சிறியவன்தான். ஆனாலும் என்னால் உன் தாகத்தைத் தணிக்க இயலும். நான் உனக்கு நீர் தருகிறேன். என்னிடம் வந்து வேண்டிய அளவு பருகிக்கொள்!"
மலையாடு சிற்றோடையிடம் சென்று தனது தாகம் தீர நீர் பருகியது. ஓடைக்கு நன்றி சொல்லிவிட்டு, உற்சாகமாக ஒரு தாவலில் அதைத் தாண்டிச் சென்றது.
பனிக்காலத்தில் சீனா, ரஷ்யா, கனடா, எகிப்து, பர்மா, பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பல வகைப் பறவைகள், பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டி, வேடந்தாங்கலுக்கு வலசை வரும்.
அவை அங்கே தங்கியிருந்து, குஞ்சுகள் பொரித்து, அவை வளர்ந்த பிறகு அவற்றோடு சேர்ந்து இளவேனிற்காலத்தில் தமது தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லும். அப்படி சைபீரியாவிலிருந்து வந்த சைபீரிய நாரைகள் கூட்டம், அந்த ஏரியின் மீது பறந்து சென்றுகொண்டிருந்தது.
ஏரியிடம் அப்பறவைகள், "நாங்கள் தொலைதூர தேசத்திலிருந்து வருகிறோம். மிகவும் களைத்திருக்கிறோம். எங்களுக்கு உன்னுடைய நீரைப் பருகத் தருவாயா?" என்று கேட்டன.
"உங்களுடைய இறக்கைகளில் அழுக்கு. உங்களுக்கு நான் நீர் தர மாட்டேன்."
இப்படித்தான் அதனிடம் வந்து நீர் கேட்கும் விலங்குகள், பிராணிகள், பறவைகள் எதற்கும் அது நீர் தராது.
ஒரு முறை முள்ளெலி ஒன்று ஏரியிடம் வந்து, "காட்டுக்குள் முயல் ஒன்று காலில் அடிபட்டு, நடக்க இயலாமல் படுத்திருக்கிறது. அதற்குத் தாகமாக இருக்கிறதாம். அதனால் இங்கு நடந்து வர இயலாது. எனவே, உன்னுடைய நீரைக் கொஞ்சம் அந்தப் பக்கமாகத் திருப்பிவிட்டால், முயல் அதைப் பருகி உயிர் பிழைத்துக் கொள்ளும்" என்று இறைஞ்சிக் கேட்டது.
"போ, போ! நான் என்னிடம் வந்து கேட்பவர்களுக்கே நீர் தர மாட்டேன்; நான் காட்டுக்குள் சென்று, முயலுக்கு நீர் தர வேண்டுமா? ஓடிப் போய்விடு. இல்லாவிட்டால் உன்னை எனக்குள் அமிழ்த்திக் கொன்றுவிடுவேன்!"
முள்ளெலி பயமும் வருத்தமுமாகத் திரும்பிச் சென்றது.
அப்போது, "முள்ளெலியே, முள்ளெலியே! நான் முயலுக்கு உதவி செய்கிறேன்" என்று சிற்றோடை தன் திசை மாற்றி ஓடி வந்தது.
ஆனால், அதனிடம் இருக்கும் நீர் போதுமானதாக இல்லாததால், முயல் இருக்கும் இடம் வரை அதனால் சென்றடைய இயலவில்லை.
ஓடை மலையிடம் வேண்டியது: "மலைத் தாயே! பாவம், அந்த முயல் அடிபட்டு சாகக் கிடக்கிறது. அதற்கு நீர் கொடுக்க வேண்டும். ஆனால், என்னால் முயல் இருக்கும் இடத்தை அடைய இயலவில்லை. எனவே, உனது முகடுகளில் இருக்கும் மேகங்களை மழையாகப் பொழிய வைத்து, என்னைக் கொஞ்சம் பெரிதாக்கு. அப்போது நான் அந்த முயலிடம் சென்று, அதைக் காப்பாற்ற முடியும். தயவு செய்து கருணை காட்டு."
மலைத் தாயான தெய்வம் அந்தச் சிற்றோடையிடம், "நடப்பதை எல்லாம் நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அந்த ஏரி, உருவத்தில் பெரியதாக இருந்தாலும், அதன் மனம் மிகக் குறுகியது. நீ மிகச் சிறியவனாக இருந்தாலும், உனது இதயம் மிகப் பரந்தது. அதனால் உன்னை ஜீவநதியாக ஆக்குகிறேன்" என்று கூறி, மேகங்களைத் திரட்டி, பலத்த இடி மின்னலுடன், பெருமழை பொழிவித்தாள்.
சிற்றோடை பெரிதாகி, முயலிடம் சென்று அதன் தாகம் தீர்த்து, உயிர் பிழைக்க வைத்தது.
உயிரினங்கள் பருக நீர் கொடுக்க மறுத்த அந்தப் பெரிய ஏரியின் மீது, வானமே இடிந்துவிட்டது போல் ஒரு பேரிடி வீழ்ந்தது. அதன் விளைவாக அந்த ஏரி நீர் முழுதும் வற்றிவிட்டது. மலைத் தாயின் சாபத்தால்தான் இது நிகழ்ந்தது.
மலைத் தாயின் ஆசீர்வாதத்தால் அந்தச் சிற்றோடை நதியாகி, கோடை காலத்திலும் வற்றாத ஜீவநதியாக ஆயிற்று. அது விலங்குகள், பிராணிகள், பறவைகள், நீர்வாழிகள், நீர் - நில வாழிகள், கரையோரத் தாவரங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் பல வகைகளிலும் பலன் தருவதாகவும், விவசாயத்துக்குப் பேருதவி செய்வதாகவும் ஆகிவிட்டது. மக்கள் அந்த நதியைத் தெய்வமாகப் போற்றி வணங்கினர்.