

அக்பரின் ஆட்சியின்போது ஆக்ராவில் ஒரு சிறந்த கலைஞன் இருந்தான். அவன் அதிசயத்தக்க விதத்தில் ஒரே கல்லால் மூன்று மனிதச் சிலைகளை உருவாக்கி, "இவை மூன்று உண்மைகளை உணர்த்தும் சிற்பங்கள்" என்று கூறி அக்பருக்குப் பரிசளித்தான். கலைநயம் மிக்க அந்தச் சிலைகளை மன்னர் தனது அறையில் வைத்துக் கொண்டார்.
ஒருநாள் பீர்பால் மன்னரைச் சந்திக்க வந்தபோது அந்தச் சிலைகளைக் கண்டார். மன்னர் அவரிடம், "பீர்பால் அவர்களே! ஒரே கல்லில் மூன்று மனிதர்கள் தனித்தனியாகக் கலைநயத்துடன் செதுக்கப்பட்டிருந்தாலும், இது உண்மையை உணர்த்தும் சிலையாகும். தாங்கள் மதிநுட்பம் மிக்கவராயிற்றே! அந்த உண்மை என்னவென்று கூறுங்கள்?" என்றார்.
மன்னனின் விருப்பத்திற்கு இணங்க, அந்த மூன்று சிலைகளின் நயத்தையும் பீர்பால் ஒருமுறை நோட்டமிட்டார்.
முதல் சிலை: சிலையின் ஒரு காதின் வழியே சிறிய கல் ஒன்றைப் போட்டார். அந்தக் கல் மறு காதின் வழியாக வெளியே வந்து விழுந்தது.
இரண்டாவது சிலை: சிலையின் காதில் ஒரு சிறிய கல்லைப் போட்டார். அது வாயின் வழியாக வெளியே வந்து விழுந்தது.
மூன்றாவது சிலை: அந்தச் சிலையின் காதில் ஒரு சிறிய கல்லைப் போட்டார். ஆனால், அந்தக் கல் வெளியே வராமல் உள்ளேயே கீழ்ப்பாகத்திற்குச் சென்றுவிட்டது.
இந்தச் சோதனையை முடித்த பீர்பால், "மன்னரே! இந்த மூன்று சிலைகளில் மூன்று அறிவுரைகள் இருந்தாலும், மூன்றாவது சிலையே மிகச் சிறந்ததாகும்" என்றார்.
"அது எதனால்?" என்று வியப்புடன் கேட்டார் அக்பர்.
பீர்பால் விளக்கத் தொடங்கினார்: "மன்னரே! முதல் சிலையின் காதில் போட்ட கல் மறு காதின் வழியே வெளியே வந்தது. இதன் மூலம் நாம் ஒரு விஷயத்தைக் காதில் கேட்டால், அதை ஒரு காதில் வாங்கி மறு காது வழியாக அப்படியே விட்டுவிடக் கூடாது என்பதை அறியலாம். இது நல்ல பண்பல்ல; தான்தோன்றித்தனமாகும்."
"இரண்டாவது சிலையின் காதில் போட்ட கல் வாயின் வழியாக வெளியே வந்தது. ஒரு விஷயத்தைக் காதில் கேட்டவுடன், அதை யோசிக்காமல் அடுத்தவரிடம் வாயின் வழியாகச் சொல்வது நல்ல நெறியாகாது. ஆதலால் இதுவும் நல்ல பண்பல்ல."
"மூன்றாவது சிலையின் காதில் போட்ட கல் வெளியே வராமல் உள்ளேயே தங்கிவிட்டது. ஒரு ரகசியத்தையோ அல்லது ஒரு செய்தியையோ காதால் கேட்டால், அதை எவரிடமும் சொல்லாது தன்னுள் ஆழமாக வைத்துக்கொள்வதே சிறந்த பண்பாகும். இதையே இந்தச் சிலைகள் உணர்த்துகின்றன," என்றார் பீர்பால்.
பேரறிவு மிக்க பீர்பால், தமது ஆட்சிக்குக் கிடைத்த 'நவரத்தினம்' என்று அக்பர் மகிழ்ந்தார்.
நீதி: எப்பொழுதும் மதிநுட்பமாகச் சிந்தித்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். பீர்பாலின் மதிநுட்பத்தை பார்த்தீர்களா, குட்டீஸ்களா!