சிலந்திகள் பற்றி ஆச்சரியமான தகவல்கள்!

Spiders...
Spiders...
Published on

சிலந்திகள் (Spiders) பொதுவாக பாறை இடுக்குகள், குகைப்பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகள் என பலதரப்பட்ட இடங்களில் வாழும் இயல்புடையவைகளாக உள்ளன. சிலந்திகள் இனத்தில் சில வகையான சிலந்திகள் வளைக்குள் வசிக்கின்றன. உல்ப் சிலந்திகள் வலையைப் பின்னுவதில்லை. இவை பூமியில் குழிகளைத் தோண்டி அதற்குள் வசிக்கின்றன. சிலந்திகளில் சுமார் 35000 வகைகள் உள்ளன.

சிலந்திகளுக்கு எட்டு கண்கள் அமைந்துள்ளன. சிலந்தியின் இதயமானது ஒரு குழாய் வடிவத்தில் அமைந்துள்ளது. சிலந்திகளின் இரத்தமானது நீல நிறத்திலே இருக்கும். நம்முடைய இரத்தத்தில் சிவப்பணுக்கள் காணப்படுகின்றன. ஆனால் சிலந்தியின் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் காணப்படுவதில்லை.

சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் ஆறு நூல் சுரப்பிகள் அமைந்துள்ளன. இதிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமானது நுண்ணிய துளைகளின் வழியாக வெளியேறுகிறது. இந்த திரவமானது காற்று பட்ட உடன் கடினமாகும் தன்மை உடையது. இச்சுரப்பிகளின் மூலம் இவை ஒருவித நூலை உற்பத்தி செய்து வலைகளைப் பின்னுகின்றன. சிலந்திகள் உருவாக்கும் இத்தகைய நூலானது புரோட்டீன்களால் ஆனது.

சிலந்திகளின் கால்களின் முனைகளில் மூன்று கூரிய நகங்கள் அமைந்துள்ளன. இந்த மூன்று நகங்களில் நடுநகத்தில் சிறிய முடிகள் அமைந்துள்ளன. சிலந்திகள் தங்கள் வலைகளில் நகர்ந்து செல்ல நடுவில் உள்ள நகத்தையே பயன்படுத்துகின்றன.

சிலந்திகள், பூச்சிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. சிலந்தி இனத்தில் ஸ்பிட்டிங் சிலந்தி எனும் ஒரு வகை சிலந்தி காணப்படுகிறது. இவை பிசின் போன்ற திரவத்தை சிறுபூச்சிகளின் மேல் துப்பும். இந்த திரவமானது பூச்சிகளை செயலிழக்கச் செய்யும் தன்மை உடையது. இதன் காரணமாக செயலிழக்கும் பூச்சிகளை சிலந்திகள் உணவாக உட்கொள்ளுகின்றன. சிலந்திகள் வலைகளில் இருக்கும்போது தானாக வந்து மாட்டிக் கொள்ளும் பூச்சிகளைப் பிடித்து சாப்பிடுகின்றன. பெரிய வகை சிலந்திகள் எலிகளையும் சாப்பிடுகின்றன. இவை தாங்கள் பிடிக்கும் உணவு வயிற்றுக்குள் சென்றதும் ஒருவித ஜீரண என்சைம்களை உற்பத்தி செய்கின்றன. இந்த எம்சைம்கள் உணவை எளிதில் ஜீரணித்து விடுகின்றன. உல்ப் சிலந்திகள் இறந்து போன உயிரினங்களை சாப்பிட்டு உயிர் வாழும்.

சிலந்திகளின் உடலில் இரண்டு சிறிய கொடுக்குகள் போன்ற அமைப்பு அமைந்துள்ளது. இந்த கொடுக்குகளின் மூலம் இவை விஷத்தை எதிரிகளின் உடலில் செலுத்தி விடுகின்றன. சிலந்தியின் விஷமானது மனிதர்களைப் பொறுத்தவரை பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்து வதில்லை. ஆனால் அமெரிக்க நாடுகளில் வாழும் பிளாக் விடோ எனும் ஒரு வகை சிலந்தி கடித்தால் மரணம் ஏற்படும்.

சிலந்திகளில் மிகப்பெரியது டாரன்டுலாஸ் எனும் வகையே அளவில் மிகப்பெரியச் சிலந்தியாகும். இவ்வகைச் சிலந்திகளின் உடலில் முடிகள் காணப்படுகின்றன. இச்சிலந்திகள் பகல் பொழுதுகளில் வளைக்குள்ளும் இருட்டான பகுதிகளிலும் ஒளிந்து கொள்ளும். இவற்றிற்கு வலையைப் பின்னத் தெரியாது.

இதையும் படியுங்கள்:
நிதானம் தவறேல்!
Spiders...

பொதுவாக சிலந்திகளின் தாடை பக்கவாட்டாகதான் அசையும். ஆனால் டாரன்டுலாஸ் எனும் சிலந்திகளின் தாடைகள் நம்மைப்போல மேலும் கீழும் அசையும் தன்மை உடையனவாக உள்ளன.

நர்சரி வெப் சிலந்திகள் தங்கள் குட்டிகளை பாதுகாப்பதற்காக வலைகளைப் பின்னுகின்றன. இவை தன்னுடைய வலையில் முட்டைகளை இட்டு அவை பொரியும் வரை பாதுகாக்கின்றன. இவ்வகைச் சிலந்திகள் நீரின் மேல் ஓடும் அதிசய ஆற்றலைப் பெற்றுள்ளன. தண்ணீரில் காணப்படும் மிகச்சிறிய மீன்களைப் பிடித்து இவை சாப்பிடுகின்றன.

சிலந்தி இனத்தில் க்ராப் சிலந்தி எனும் ஒரு வகை சிலந்தி உள்ளது. இவ்வகைச் சிலந்தியானது நண்டைப் போல் பக்கவாட்டில் நகரும் தன்மை கொண்டதாக உள்ளது. இவ்வகைச் சிலந்திகள் பூக்களின் மீது அமர்ந்து கொண்டு அந்த பூவின் நிறத்திற்கு தன் உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளும். பூக்களை நாடி வரும் பூச்சிகளை இச்சிலந்திகள் பிடித்து சாப்பிடுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com