
ஹே குட்டீஸ்! விலங்குகள் பத்தின சர்ப்ரைஸ் தகவல்கள் தெரிஞ்சுக்க ரெடியா?🧐 வாங்க, இங்க படிக்கலாம்!
நிலத்தில் ஆமையின் வேகம் குறைவு.
ஆனால், தண்ணீரில் ஆமையின் நீச்சல் வேகம் மணிக்கு 30 கிலோமீட்டர் ஆகும். இது மனிதனின் நீச்சல் வேகத்தை (மணிக்கு 15 கிலோ மீட்டர்) விட இரண்டு மடங்கு அதிகம்.
வெட்டுக்கிளிக்குக் காதுகள் அதன் கால்களில் உள்ளன!
வரிக் குதிரைகள் கூட்டமாக நிற்கும் போது ஒரே திசையில்தான் நிற்கும்.
அவற்றில் ஒரே ஒரு வரிக் குதிரை மட்டும் எதிர் திசையில் (பின்னால்) பார்த்துக் கொண்டிருக்கும். ஆபத்து வந்தால் எச்சரிக்கை செய்யவே இந்த ஏற்பாடு.
டால்பின்கள் கொஞ்சம் இரக்கக் குணம் கொண்டவை.
டால்பின்களில் ஒன்றுக்குக் காயம் ஏற்பட்டால், உடனே அங்கு விரைந்து சென்று, அந்தக் காயம்பட்ட டால்பினை மற்ற டால்பின்கள் தண்ணீருக்கு மேல் தூக்கி வந்து, அது எளிதாகச் சுவாசிக்க உதவும்.
சீல்கள் பொதுவாக ஒரு குட்டி மட்டுமே இடும்.
எப்போதாவது இரண்டு குட்டிகள் ஈன்றாலும், தாய் ஒன்றை மட்டுமே வளர்க்கும். இன்னொன்றை மற்றொரு சீல் வளர்க்கும்.
மாடுகள் எப்போதும் மேடுகளில் இறங்கும் வேகத்தைவிட ஏறும் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
அதாவது, ஏற்றத்தில் அதிக வேகத்தையும், இறக்கத்தில் நிதானத்தையும் காட்டும்.
இரவு நேரத்தில் மனிதர்களைவிட ஆறு மடங்கு பார்க்கும் திறன் அதிகம் பெற்றது புலி.
தேங்காயை உடைத்துப் பார்க்காமலேயே அது நல்லதா, அழுகலா என்பதைக் கண்டறியும் சக்தி யானைக்கு உண்டு.
கோலா கரடிகள் தன் வாழ்நாளில் ஒருபோதும் தண்ணீர் அருந்துவதில்லை.
நீலத் திமிங்கலத்தின் நாக்கின் எடை ஒரு குட்டி யானையின் எடைக்குச் சமமாக இருக்குமாம்.
நீர்யானைகள் தண்ணீருக்கு அடியில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை.
நத்தைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும், எத்தனை மாதங்கள் ஆனாலும் வந்த வழியை மறக்காமல் மீண்டும் திரும்பி வந்துவிடும்.
சிம்பன்சி குரங்குக் கூட்டத்துக்கு ஒரு பழக்கம் உண்டு.
அவை ஒரு இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு மாறிச் செல்லும்போது, மனிதர்களைப் போலவே ஒன்றுக்கொன்று கையைக் குலுக்கிக்கொள்ளும் (Handshake).