பலவீனமே பலமாய் மாறிய கதை!

Karate image
Karate imageImage credit - vecteezy.com
Published on

-தா சரவணா, வேலுார்.

ப்பானில் பத்து வயது சிறுவன் ஒருவனுக்கு, ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது இலட்சியமாக இருந்தது. ஆனால், அவன் ஒரு மாற்றுத்திறனாளி. அவனுக்கு இடது கை கிடையாது. கை களும், கால்களும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது என்பது பெரும் சவால். ஒரு கையில்லாத சிறுவன் என்ன செய்வான்? விளக்குகிறது இந்த பதிவு.

அச்சிறுவன் பல பயிற்சியாளர்களிடம் சென்றான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பினார்கள். சிறுவன் மனம்தளரவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தான்.

இறுதியில் ஒரு பயிற்சியாளர் அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். பயிற்சி வகுப்பு தொடங்கியது. பயிற்சியாளர் ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் பல ஓடின. பயிற்சியாளர் வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. சிறுவன் சோர்ந்து போனான்.

பின்னர் ஒருநாள், "பயிற்சியாளரே, நான் ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் கற்றுத் தருவீர்களா?" என்றான். இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும் என்றார் பயிற்சியாளர். பயிற்சியாளர் சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? சிறுவனும் பயிற்சியைத் தொடர்ந்தான். ஒரே ஒரு தாக்குதில் மட்டும் நன்றாக கற்று தேர்ந்தான்.

சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது. முதல் போட்டி, அனைத்தும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தச் சிறுவன். போட்டி ஆரம்பமானது. பார்வையாளர்கள் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக சிறுவன் வெற்றிப் பெற்றான்.

இரண்டாவது போட்டி, அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப்போட்டி வரை சென்றான். அதிலும் கொஞ்சம் போராடி வென்று விட்டான்.

தற்போது இறுதிப்போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும் ஏற்பட்டது. ஆனால் சிறுவன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் சிறுவனை அடித்து வீழ்த்தினான் எதிராளி. சிறுவனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா..? என்கின்றனர் போட்டியை நடத்துபவர்கள். "வேண்டாம், பையன் சண்டையிடட்டும்" என்கிறார் பயிற்சியாளர்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வெற்றிக்கு உதவும் 8 சிறந்த நண்பர்கள் யார் தெரியுமா?
Karate image

இந்தச் சிறுவனோடு சண்டையிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். சிறுவன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். சிறுவன் சாம்பியன் ஆனான்.

பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள். போட்டியாளர்களுக்கோ ஆச்சரியம். அந்த சிறுவனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை பயிற்சியாளரிடம் கேட்டான். பயிற்சியாளரே, "நான் எப்படி இந்த போட்டியில் வெற்றிப் பெற்றேன்? அதுவும் ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே" என்றான்.

புன்னகைத்தபடியே பயிற்சியாளர் சொன்னார் "உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத்தான் இடது கை கிடையாதே. உன்னுடைய அந்த பலவீனமதான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது" என பயிற்சியாளர் சொல்லச் சொல்ல சிறுவன் வியந்தான். தனது பலவீனமே, பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருப்பான். அதை கண்டுபிடித்து செயல் படுத்துவதில் நமது வெற்றி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com