கிட்டத்தட்ட உலகில் இருக்கும் பல நாடுகளில் 2025 பிறந்து விட்டது... இனி 2024 க்குப் போக முடியவே முடியாது அல்லவா? இல்லை 2024 க்கு இன்னமும் போக முடியும். கற்பனையில் அல்ல... டைம் டிராவல் எனும் ஸ்பெஷல் மிஷின்கள் மூலமாகவும் அல்ல.... உண்மையாகவே போக முடியும். அந்த இடத்தில் இன்னுமும் டிசம்பர் 31,2024 தான் இருக்கிறது.
வியப்பாக இருக்கிறதா?
டியோமிடே தீவுகள் (Diomede islands) என்ற விசித்திர தீவுகள் இருக்கின்றன. ரஷ்யாவின் கிழக்குக் கடைக்கோடி முனை முடியும் புள்ளிக்கும், அமெரிக்காவின் மேற்கு ஆரம்பப் புள்ளி தொடங்கும் முனைக்கும் இடைப்பட்ட பேரிங் ஜலசந்தி கடல்பரப்பில் தான் இந்த இரண்டு டியோமிடே தீவுகள் இருக்கின்றன. இந்த இரண்டில் ஒன்று ரஷ்யாவுக்கும், மற்றொன்று அமெரிக்காவிற்கும் சொந்தமானது. ரஷ்யாவிற்கு சொந்தமானது--பிக் டியோமிடே. அமெரிக்காவிற்கு சொந்தமானது லிட்டில் டியோமிடே. இந்த இரண்டு தீவுகளுக்கும் இடைப்பட்ட தூரம் 3.9 கிமீட்டர்கள். குளிர்காலத்தில் அந்த இடைவெளியும் பனியால் நிரப்பப்பட்டுவிடும்.
"நிஜத்தில்" பத்து நிமிடங்களில் நடந்தே சென்று விடலாம்.
ஆனால் "நிதர்சனத்தில்" இந்த 3.9 கீமி தூரத்தை கடக்க சற்றேறக்குறைய ஒரு நாள் தேவைப்படும்.
அதென்ன-நிஜத்தில் பத்து நிமிடம், நிதர்சனத்தில் ஒரு நாள்?புரியலையே...
2025 ஜனவரி 1 ஆம் தேதி மாலை 7 மணிக்கு பிக் டியோமிடேவில் இருந்து கிளம்பி-இடைப்பட்ட 3.9 கிமீ தூரத்தை நடந்து-லிட்டில் டியோமிடேவை அடையும் போது, உங்கள் வாட்ச்சில் 7:15 என்று காட்டலாம். ஆனால் லிட்டில் டியோமிடேவில் 2024 டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 7 மணி என்று தான் இருக்கும்.
அங்கே இன்னமும் 2025 புத்தாண்டு பிறந்திருக்காது.
பிக் டியோமிடே வுக்கும்-லிட்டில் டியோமிடே வுக்கும் இடைப்பட்ட பேரிங் ஜலசந்தி கடல்பரப்பின் ஊடாகத் தான் International Date line செல்கிறது. இந்த International Date line தான் பெருன்பான்மையான உலக நாடுகள் பின்பற்றும் கடிகார நேரங்களுக்கும்-காலென்டர்களுக்கும் அடிப்படை. இந்த International Date line என்ற இந்த புள்ளியை மையமாக வைத்து-மீண்டும் இதே புள்ளிக்கு பூமி உருண்டை தன்னைத்தானே சுற்றி வர 24 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்படுகிறது.
ரஷ்யாவிற்குச் சொந்தமான பிக் டியோமிடே தீவில் மனிதர்கள் வசிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவிற்கு சொந்தமான லிட்டில் டியோமிடே தீவில் 2010 ஆண்டின் கணக்கீட்டின்படி 178 பேர்கள் வசிக்கின்றனர். அங்கே ஒரு போஸ்ட் ஆபிஸ், ஒரு சர்ச், ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. ஆரம்ப நிலை மருத்துவமனை கூட உள்ளது.
அந்த லிட்டில் டியோமிடே தீவில் இன்னமும் 2025 ஆண்டு பிறக்கவில்லை...
உலகின் விசித்திரமான இடங்களில் டியோமிடே தீவுகளும் ஒன்று. கூகுள் மேப்பை திறந்து,Diomede- டியோமிடே தீவுகளைத் தேடிப் படித்துப் பாருங்கள்...