
இந்தியாவில் இன்று நவம்பர் 14, 2023 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நாளில் மக்கள் பண்டிட் ஜவஹர் லால் நேருவின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள். இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இந்த நாளில் சிறுவர்கள் ஆர்வமுடன் படித்து மகிழ்ந்த கோகுலம் தமிழ் 2013 ல் வெளியான கட்டுரை ஒன்றை தற்போது உங்களுக்காக அப்படியே வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அன்புள்ள வாசகர்களே,
வணக்கம்.
நீங்கள் கடிதம் எழுதிய அனுபவம் உண்டா? உங்கள் சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள்... இப்படி யாருக்காவது கடிதம் எழுதியிருக்கிறீர்களா? தொலைபேசி உபயோகம் அதிகரித்த பின் கடிதங்களின் தேவை மிக மிகக் குறைந்துவிட்டது. அப்படியே கடிதங்கள் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இமெயிலில் அனுப்பிவிடலாம்; உடனே போய்ச் சேர்ந்துவிடும்!
ஒரு காலத்தில் கடிதத்தைத் தவிர, தகவல் தொடர்புக்கு வேறு எந்த வழி யும் இருந்ததில்லை. மக்களுக்காகப் போராடிய சில தலைவர்களின் கடிதங்கள் உலகை மாற்றியிருக்கின்றன! சிலரின் கடிதங்கள் உன்னதமான புத்தகங்களாக மாறி யிருக்கின்றன! அப்படிப்பட்ட கடிதங்களில் குறிப்பிடத் தக்கது, நேரு மாமா அவருடைய அன்பு மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது கைதாகி, தன் வாழ்நாளில் 9 ஆண்டுகள் நேரு சிறையில் கழித்திருக்கிறார். ஒருமுறை நேரு சிறையில் இருந்தபோது, இந்திராவுக்கு பிறந்தநாள் பரிசு வழங்க நினைத்தார். ஆனால் சிறையில் இருக்கும்போது பரிசு கொடுக்க இயலாது. பரிசுப் பொருளுக்கு இணையாக, ஓர் அன்பளிப்பைக் கொடுக்க முடிவு செய்தார் நேரு. உலக வரலாற்றை கடிதங்களில் எழுத ஆரம்பித்தார். 1930 முதல் 1933ம் ஆண்டு வரை சிறையில் இருந்தபோது, 196 கடிதங்களை எழுதி அனுப்பினார்.
இந்தக் கடிதத்தில் உலக நாகரிகங்கள், ஆட்சியாளர்களின் எழுச்சி-வீழ்ச்சி, போர்கள், புரட்சிகள், சர்வாதிகாரிகள், செங்கிஸ்கான், அசோகர், லெனின், மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் என்று விரிவாகவும் எளிமையாகவும் உலக வரலாற்றை எடுத்துச் சொல்லியிருக்கிறார் நேரு. இந்தக் கடிதங்கள் Glimpses Of World History என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்து, உலகின் மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக நிலைத்துவிட்டது!
குழந்தைகளை நேசித்த நேரு மாமாவின் இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். உங்களுக்கும் கடிதங்கள் எழுத ஆர்வம் வரலாம்!