

ஒரு டேபிள் மீது பலவிதமான பொருட்களை பரப்பி வைத்துவிட்டு, குழந்தைகளை 60 அல்லது 120 வினாடிகள் அந்தப் பொருட்களைப் பார்க்க அனுமதித்த பிறகு, அவர்கள் பார்த்த பொருட்களை நினைவுபடுத்திப் பட்டியல் போடச் செய்வது என்பது வழகக்கமான ஒரு விளையாட்டு.
இப்போது நாம் பார்க்கப்போகிற இந்த விளையாட்டு, அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. அதே சமயம், அதை விட இன்னும் கொஞ்சம் கூடுதல் சவாலானது. ஆனால், குறைந்த எண்ணிக்கையில் (சுமார் எட்டு அல்லது பத்து குழந்தைகள் வரை) இருந்தால்தான் இந்த விளையாட்டு பார்வையாளர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், பார்வையாளர்கள் பங்கேற்கும் குழந்தைகளுக்கு உதவும்படியாக எதையும் தங்கள் வாய் திறந்து சொல்லக்கூடாது. அப்படி மீறி யாராவது வாய் திறந்து ஏதாவது சொன்னால், அவர்கள் வாய் கர்சிப்பால் கட்டப்படும் என்று ஒருமிரட்டல் எச்சரிக்கைகூட விடலாம்; தப்பில்லை.
இந்த விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் அனைவரையும் வேறு ஓர் அறைக்கு அனுப்பிவிட வேண்டும். ஒரு டேபிளில் பென்சில், ஷூ லேஸ், பூட்டு, லிப்ஸ்டிக், சீப்பு, மொபைல் ஃபோன், பாட்டரி செல், சாவிக்கொத்து, டூத் பிரஷ், ஸ்பூன், விசிடிங் கார்டு, சிறிய பிள்ளையார் பொம்மை என்று பத்துப் பதினைந்து விதமான பொருட்களை வைக்கவேண்டும்.
குழந்தைகள் காத்துக்கொண்டிருக்கும் அறையிலிருந்து ஒரு குழந்தையின் கண்களைக் கைக்குட்டையால் நன் றாகக் கட்டி அழைத்துக்கொண்டு வரவேண்டும். அந்தக் குழந்தையை டேபிள் முன்னால் நிறுத்தி, வைக்கப் பட்டிருக்கும் பொருட்களிலிருந்து ஒவ்வொன்றாகக் கையில் எடுத்துத் தடவிப் பார்த்து, அது என்ன என்பதை யூகித்துச் சொல்லும்படி கூறவும். ஒவொரு குழந்தைக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவும். உதாரணமாக, மூன்று நிமிட நேரத்தில் ஒரு குழந்தை எத்தனைப் பொருட்களைத் தொட்டுப் பார்த்து, சரியாகக் கண்டுபிடித்து சொல்கிறதோ அத்தனை பாயின்டுகள் அந்தக் குழந்தைக்கு அளிக்கப்படும்.
இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்று நிமிட நேரம் அளித்து, மேஜை மீது வைக்கப்பட்டிருக்கும் பொருட்களைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லவைக்க வேண்டும். அதிக பாயின்டுகள் எடுக்கும் முதல் மூன்று குழந்தைகளுக்குப் பரிசளிக்கலாம்.
இந்த விளையாட்டின் சுவாரசியம் என்னவென்றால், மேஜை மீது இருக்கும் பொருட்கள் எல்லாமே அன்றாடம் நம் வாழ்க்கையில் பார்க்கிற, பயன்படுத்துகின்ற பொருட்கள்தாம். கண்களைக் கட்டிக்கொண்டு, அவற்றைத் தொட்டுணர்ந்து, அவை என்ன என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதுதான் சவால்.
கண்கட்டப்பட்ட குழந்தையின் கையில் என்ன பொருள் உள்ளது என்பது பார்வை யாளர்கள் அனைவருக்கும் தெரியும். அதை அந்தக் குழந்தை சரியாகக் கண்டு பிடித்துவிட்டால், எல்லோரும் கைதட்டிப் பாராட்டுவார்கள். தவறாகச் சொல்லிவிட்டால், ‘இது தெரியாவிட்டால் பரவாயில்லை; அடுத்ததாவது தெரிகிறதா பார்ப்போம்’ என்று குழந்தை அடுத்துக் கையில் எடுக்கும் பொருளையும், அது சொல்லப்போகும் விடையையும் எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.
ஓர் எச்சரிக்கை! பார்வையாளர்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த விளையாட்டு களைகட்டும்.