

சிங்கம் உறங்கிக் கொண்டிருந்தது. வெகு சமீபத்தில் குளம்படி சத்தம் 'டொக் டொக்' என்று கேட்கவும், கோபத்துடன் சிங்கம் எழுந்தது. அப்போதுதான் ஓர் அழகான, அதே சமயம் கம்பீரமான குதிரை ஒன்று அந்த இடத்தை சுற்றிச் சுற்றிப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது.
"அடே முட்டாள் குதிரையே! இங்கே வா!" என்று பெரும் கர்ஜனை செய்தது சிங்கம்.
குதிரையும் மரியாதையுடன் வந்து நின்றது.
"அது என்னடா? நான் தூங்கும்போது தூங்க விடாமல், உன் கால் குளம்பின் சத்தம் காதையே செவிடாக்கிவிடும்போல் இருக்கிறதே! உன் ஓட்டத்தின் பெருமையை என்னிடமே காட்டுகிறாயா?" என்று கோபத்துடன் கேட்டது சிங்கம்.
"மன்னா, மன்னியுங்கள். தாங்கள் இருக்கும் இடம்தான் ஓடிப் பழகுவதற்கு வசதியாக இருக்கிறது. என்னை நம் நாட்டின் இளவரசருக்குக் கொடுக்க இருக்கிறார்கள். ஒரு நாட்டு இளவரசரின் குதிரை என்றால், அது எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே? அந்தப் பெருமை எனக்குக் கிடைத்தது.
நான் இன்னும் இரு தினங்களில் அரண்மனை போய்ச் சேர வேண்டும். அதற்காக, எப்படி எல்லாம், எந்தச் சூழ்நிலையிலும் ஓடிப் பழகுவது என்ற பயிற்சியைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்" என்றது அமைதியுடன் குதிரை.
"இது உனக்கு மட்டுமல்ல, நம் காட்டுக்கே பெருமைதான்" என்ற சிங்கம், அதை இரண்டு நாளும் பயிற்சி எடுத்துக்கொள்ள சம்மதித்தது.
குதிரையும் மிகுந்த மகிழ்வுடன் பயிற்சி எடுத்தது.
இப்போது அது இளவரசனின் அன்பு குதிரையானது.
அவன் அந்தக் குதிரையில் ஏறி பல இடங்களுக்குச் சுற்றினான். குதிரையின் வேகம், அதன் பாயும் திறன் அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
ஒரு நாள் இளவரசன் வேட்டைக்குக் கிளம்பினான். அது காட்டின் புலி அல்லது சிங்க வேட்டையாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். அதன்படி கைதேர்ந்த பயிற்சி பெற்ற வீரர்களுடனும், காட்டில் வேட்டையாடும் வேடுவர்களின் துணைகொண்டும் அந்த வேட்டைக்குச் சென்றான்.
குதிரைக்கு உடல் நடுங்கியது. எங்காவது சிங்க ராஜா மாட்டிவிடுமோ என்று பயந்தது. அதே சமயம், புலிக்கும் எந்த ஆபத்தும் நேரக் கூடாது என்றும் நினைத்தது. காரணம், அது காட்டில் பிறந்து வளர்ந்த விலங்காதலால், தன் விலங்கினம் வேட்டையாடப்படுவதை அது விரும்பவில்லை.
இது இளவரசருக்கும் தெரியக் கூடாது. அதனால், வேடுவர்கள் கூறிய திசை எல்லாம் மாற்றி மாற்றி, அது தாறுமாறாக ஓடி, புலியோ சிங்கமோ மாட்டிக் கொள்ளாதபடி சாமர்த்தியமாக ஓடிக் கொண்டிருந்தது. மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாதபடி எங்கோ காட்டில் ஓடிக் கொண்டிருந்தது.
இளவரசன் குதிரையின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்டு கோபமுற்றான். மற்றவர்களைத் தனித்து விட்டு, இது தன்னை எங்கோ தனிமைப்படுத்தி வந்திருப்பதை அறிந்து, கோபத்துடன் அதை நிறுத்தினான். பின், அதை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு, தன்னுடன் வந்த வீரர்களுக்காகவும் வேடுவர்களுக்காகவும் காத்திருந்தான்.
அப்போது பெரும் கர்ஜனை ஒலி கேட்டது. பாய்ந்து வந்தது காட்டு ராஜா சிங்கம். இளவரசன் தனித்து விடப்பட்டு, தப்பி ஓடினான். ஆனாலும், சிங்கத்தின் பாய்ச்சலுக்கு முன் அவனால் ஓட முடியவில்லை. அவ்வளவுதான்! அச்சத்தில் அவன் அம்புகளும் தாறுமாறாகச் சென்றனவே ஒழிய, அது சிங்கத்தைத் தாக்கவில்லை. உடன் அவன் மூர்ச்சையானபோது, குதிரை கணைப்பின் ஒலி மிக வேகமாகக் கேட்க, "இது கேட்ட குரலாக இருக்கிறதே" என்று சிங்கம், கணைப்பு வந்த திசையை நோக்கிச் செல்ல, அதற்கு ஆச்சர்யம். தன் குகைக்கு முன்னால் பயிற்சி எடுத்த அதே குதிரை கட்டப்பட்டு இருந்ததைக் கண்டது.
குதிரை நடந்தவைகள் அனைத்தையும் கூறியது. இளவரசன் வேட்டையில் இருந்து காக்கவே தான் திசை மாறி மாறிச் சென்றதால், கோபமுற்ற இளவரசன் தன்னை மரத்தில் கட்டிப் போட்டதாகக் கூறவும், உடன் அதன் கட்டை அவிழ்த்து விட சிங்கம் ஆணையிட, ஒரு குரங்கு அந்த வேலையைச் செய்தது.
பின், மயங்கி இருந்த இளவரசன் முன் சென்றன சிங்கமும் குதிரையும்.
அவன் மெல்ல கண் விழித்து, "ஐயோ" என்று அலறவும், சிங்கம் பெருத்த கர்ஜனை செய்து, "அடே முட்டாள் இளவரசே! நீ எனக்கு இரையாக வேண்டியவன். உன் நல்ல காலம், நீ இந்தக் காட்டில் வளர்ந்த குதிரையுடன் வந்தாய். அது மட்டும் உனக்காகப் பரிந்து பேசாவிட்டால், நான் உன்னை இரையாக்கிக் கொண்டிருப்பேன். நீ காட்டிய வழியில் சென்றிருந்தால், அங்கு ஓநாய்களும் கரடிகளும் அதிகம். இந்தக் குதிரைக்கு அவைகள் பரிச்சயமல்ல. அப்போது நீயும் உன் கூட்டமும் இரையாக்கப்பட்டிருப்பீர்கள். தப்பித்தாய்! இனியாவது வேட்டை என்ற பெயரில், ஆயுதமற்ற அப்பாவி விலங்குகளை உன் ஆயுத பலம் கொண்டு தாக்கி அழிக்காதே. அவர்களும் உன்னைப்போல் இந்த பூமியில் வாழட்டுமே!" என்றதும், இளவரசன் கண்கள் கலங்கின.
அதற்குள் இளவரசனைத் தேடி மற்ற வீரர்களும் வேடுவர்களும் வந்து சிங்கத்தைத் தாக்கி, இளவரசனைக் காக்க முயற்சித்தபோது, "வேண்டாம்! இந்தக் குதிரையே என்னைச் சிங்கத்திடம் இருந்து காத்து விட்டது. நானும் காட்டு ராஜாவிடம் இருந்து ஒரு வாழ்க்கை பாடத்தைக் கற்றேன்" என்றவன், சிங்கத்தின் பிடறியைத் தடவிக் கொடுக்க, அது இவனை நாக்கால் நக்கித் தன் அன்பை வெளிப்படுத்த, வந்த வீரர்களும் வேடுவர்களும் அதிசயமுற, நடந்தவைகளை இளவரசன் கூற, பின் அனைவரும் சென்றனர். அன்று குதிரையை மிகச் சிறப்பாகக் கவனித்து, அதற்குப் பிடித்த கொள்ளு போன்ற தானியங்களைத் தன் கையாலேயே கொடுத்துத் தன் நன்றியைக் காணிக்கையாக்கினான்.
நீதி: விலங்கை வேட்டையாடுவது காட்டை மட்டும் அல்ல, நாட்டையும் அழிப்பதற்குச் சமம்.