

வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் மீது நீலமும் பச்சையும் மின்னுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஆச்சரியமான அறிவியல் ரகசியத்தை தெரிந்து கொள்ள உடனே தொடர்ந்து படியுங்கள் குட்டீஸ்!
ஹாய் குட்டீஸ்! பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் நிறங்கள் எப்படி உருவாகின்றன தெரியுமா? பட்டாம்பூச்சியின் இறக்கைகளைப் பார்த்திருக்கிறீர்களா?
சில பட்டாம்பூச்சிகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில நீலம், சிவப்பு, ஆரஞ்சு என்று பல வண்ணங்களில் ஜொலிக்கும். சிலவற்றின் இறக்கைகளில் அழகான வட்டங்களும் கோடுகளும் இருக்கும்.
இந்த அழகான நிறங்களை யார் வரைந்தார்கள்?
இயற்கையே வரைந்த ஓவியம் என்று சொன்னால் அது சரிதான்! ஆனால், அந்த ஓவியம் எப்படி உருவாகிறது தெரியுமா?
ஆச்சரியமான அறிவியல்!
பட்டாம்பூச்சியின் இறக்கைகள் வெறும் வண்ணத் தாள்கள் அல்ல. அவற்றின் மீது மிக மிகச் சிறிய செதில்கள் (scales) அடுக்கடுக்காக அமைந்திருக்கும்.
நம் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு சிறிய இந்தச் செதில்கள்தான் இறக்கைகளுக்கு நிறத்தையும் அழகையும் கொடுக்கின்றன.
சில செதில்களில் உள்ள நிறமிகள் (pigments) ஒளியை உறிஞ்சி, குறிப்பிட்ட நிறத்தை நம் கண்களுக்குத் தெரியச் செய்கின்றன.
ஆனால் நீலம், பச்சை போன்ற சில பிரகாசமான நிறங்கள் வேறு விதமாக உருவாகின்றன!
அந்தச் செதில்களின் மிக நுண்ணிய அமைப்பு சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் விதத்தால் நிறங்கள் தோன்றுகின்றன. இதை கட்டமைப்பு நிறம் (structural colour) என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.
உங்களுக்கு புரியும்படி எளிய விளக்கம் சொல்றேன் கேளுங்க!
ஒரு சோப்புக் குமிழியைப் பாருங்கள். அதில் சில நேரங்களில் வானவில் போல பல நிறங்கள் தெரியும் அல்லவா?
அதேபோல், சில பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளில் உள்ள நுண்ணிய அமைப்புகள் ஒளியுடன் விளையாடுகின்றன.
ஒளி அந்தச் சிறிய அமைப்புகளின் மீது படும்போது, சில ஒளிக்கதிர்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட நிறத்தை அதிகமாகத் தெரியச் செய்கின்றன.
அதனால்தான் சில பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள் நீலமாக மின்னுவது போலவும், பச்சையாகப் பளபளப்பது போலவும் தெரிகிறது.
அதாவது, பட்டாம்பூச்சி இறக்கையில் இருக்கும் நிறம் மட்டுமல்ல; ஒளியும் அதன் நுண்ணிய அமைப்பும் சேர்ந்து உருவாக்கும் அற்புதமும் அதில் இருக்கிறது!
பட்டாம்பூச்சி பத்தி இனியும் சில சுவாரஸ்ய தகவல்கள் தெரிஞ்சுக்கோங்க குட்டீஸ்..
பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் இருக்கும் சிறிய செதில்கள் ஒன்றின் மீது ஒன்று கூரை ஓடுகளைப் போல அமைந்திருக்கும். அவற்றில் சில செதில்கள் மிகவும் நுண்ணியவை. அவற்றைப் பார்க்க நுண்ணோக்கி தேவைப்படும்.
சில பட்டாம்பூச்சிகளின் நீல நிறம் ஒரு நீல நிறமியால் மட்டும் உருவாவதில்லை. அவற்றின் செதில்களின் நுண்ணிய அமைப்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பட்டாம்பூச்சியின் இறக்கைகள் ஒளியைப் பிரதிபலிக்கும் விதம் மாறும்போது, அதன் நிறம் சற்றே மாறுவது போல நமக்குத் தோன்றலாம்.
இறக்கைகளில் உள்ள வண்ணங்கள் அழகுக்காக மட்டும் அல்ல. அவை இணையை ஈர்க்கவும், எதிரிகளிடமிருந்து மறைந்து கொள்ளவும், சில நேரங்களில் எதிரிகளைப் பயமுறுத்தவும் உதவுகின்றன.
இயற்கையின் அற்புதமும் அறிவியலும்:
பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் இருக்கும் ஒரு சிறிய செதில்கூட இயற்கையின் மிக நுணுக்கமான படைப்பு! நம்மைச் சுற்றியுள்ள உலகில் சிறியதாகத் தெரியும் விஷயங்களுக்குள்ளும் பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது.
அதனால் அடுத்த முறை பட்டாம்பூச்சியைப் பார்க்கும்போது, “இந்த அழகு எப்படி உருவானது?” என்று யோசித்துப் பாருங்கள்!
இயற்கையின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் ஓர் அற்புதமான அறிவியல் ஒளிந்திருக்கிறது.
ஏனென்றால்… கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு சிறிய விஞ்ஞானிதான்!
இயற்கையின் படைப்பில் ஒளிந்திருக்கும் நுட்பமான அறிவியலைப் புரிந்துகொள்வதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய அறிவியல் பார்வையையும் தேடலையும் உங்கள் குழந்தைகளிடம் எளிதாக வளர்க்கலாம்.