

அருமையான பொருட்கள், சுவையான உணவு வகைகள், கவிராயர்களின் புகழ்மாலைகள், ஆடம்பரமான உடைகள் ஆகியவற்றை அரசர்கள் விரும்புவது இயல்பே. ஒருமுறை, கன்னட ராஜ்யத்தில் இருந்து வந்த பண்டிதர் ஒருவர் அரசரிடம், "எம்மிடம் மிக அருமையான கத்திரிக்காய் வகை ஒன்று உள்ளது," என்று கூறினார்.
உடனே அங்கிருந்து கத்திரிச் செடிகளை வரவழைத்து, அரண்மனைத் தோட்டத்தில் பயிரிடச் செய்தார் அரசர். அவை காய்த்துப் பொன்னிறமாகக் குலுங்கின. ஒருநாள் தெனாலிராமனை அழைத்துத் தம்முடன் உணவு அருந்தச் சொன்னார் அரசர். உணவில் கத்திரிக்காய் குழம்பு பரிமாறப்பட்டது; அதைத் தெனாலிராமன் மிகவும் ருசித்துச் சாப்பிட்டான்.
அரசர் கத்திரிக்காயின் பெருமையைக் கூறியதோடு, "அரண்மனைத் தோட்டத்திலிருந்து இவை திருட்டுப் போகாதபடி பலத்த காவல் போடப்பட்டிருக்கிறது," என்றும் கூறினார். கத்திரிக்காய் குழம்பின் ருசியை மறக்க முடியாத தெனாலிராமன், வீட்டுக்கு வந்ததும் தன் மனைவியிடம் அதைப் புகழ்ந்து பேசினான். அவன் சொன்னதைக் கேட்டதும் அவன் மனைவிக்கு நாக்கில் நீர் ஊறியது.
"நீங்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டுமா? அந்த ருசியை நான் அனுபவிக்கக் கூடாதா? அத்தகைய சிறந்த கத்திரிக்காயை எப்படியாவது பறித்துக்கொண்டு வாருங்கள்; நம் வீட்டிலும் சமைத்துச் சாப்பிடலாம்," என்று தெனாலிராமனிடம் வற்புறுத்தினாள் அவன் மனைவி.
மனைவி சொல்லுக்கு மறுப்பு உண்டா? வேறு வழி இல்லாமல் நடு இரவில் தெனாலிராமன் அரண்மனைத் தோட்டத்திற்குள் புகுந்து, கத்திரிக்காய்களைப் பறித்துக்கொண்டு வந்துவிட்டான். அப்பொழுதே ஆவலோடு கத்திரிக்காய் குழம்பு வைத்துவிட்டாள் அவன் மனைவி. தெனாலிராமன் அதை மிகவும் சுவைத்துச் சாப்பிட்டான். பின்னர், வெளித் திண்ணையில் படுத்திருந்த மகனை எழுப்பி, கத்திரிக்காய் குழம்போடு உணவு கொடுக்க ஆசைப்பட்டாள் அவன் மனைவி.
சிறுவனின் மூலம் கத்திரிக்காய் திருட்டு வெளியாகி விடுமோ என்று தெனாலிராமன் தயங்கினான். என்றாலும், தாய் பாசத்தைத் தடுக்க முடியாமல் ஒரு தந்திரம் செய்தான். வெளித் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் மீது, ஒரு செம்பு தண்ணீரை உயரத்திலிருந்து மழைத்துளி போல் பொழியச் செய்தான்.
அவனை எழுப்பி, "மழை பெய்கிறது, உள்ளே வா," என்று சொல்லி அவனுடைய நனைந்த உடைகளை மாற்றச் சொன்னான். அதன் பின், தாய் சிறுவனுக்குச் சோறு போட்டு கத்திரிக்காய் குழம்பு ஊற்றிச் சாப்பிடச் சொன்னாள். அவன் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் போய் படுத்துவிட்டான்.
மறுநாள் காலையில் கத்தரிக்காய் பறிக்கப் போன காவலாளி திடுக்கிட்டான். கத்தரிக்காய்கள் திருட்டுப் போயிருந்தன! "எவ்வாறு கண்டுபிடிப்பது? இது சாப்பிடக்கூடிய பொருள் அல்லவா! திருடியவர்கள் இந்நேரம் சாப்பிட்டிருப்பார்களே!" என்று அரண்மனை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
அரசர் மிகவும் கோபத்தோடு இருந்தார். புத்திசாலியான ஒரு அமைச்சர், "இது தந்திரசாலியான தெனாலிராமனுடைய வேலையாகத்தான் இருக்கும்," என்று சந்தேகப்பட்டார். தெனாலிராமனை நேரடியாக விசாரிக்காமல், அவனுடைய மகனை வரவழைத்து விசாரித்தார். சிறுவர்கள் பொய் சொல்லத் தெரியாதவர்கள் என்பதால், "நேற்று இரவு வீட்டில் கத்திரிக்காய் குழம்பு சாப்பிட்டேன்," என்று சிறுவன் உண்மையைச் சொன்னான்.
தெனாலிராமன் தண்டிக்கப்படுவான் என்று பலரும் எண்ணினர். அமைச்சர் கம்பீரமாக, "தெனாலிராமா! உன் மகன் நேற்று இரவு கத்திரிக்காய் குழம்பு சாப்பிட்டதாகக் கூறிவிட்டான்.
அரண்மனைத் தோட்டத்தில் கத்திரிக்காய்களை நீதான் திருடியிருக்கிறாய் என்பது நிரூபணமாகிவிட்டது. உனக்குத் தண்டனை கிடைக்கச் செய்வேன்," என்றார்.
தெனாலிராமன் மிகவும் அமைதியாக, "அரசரே! அவனோ சிறுவன்; தூக்கத்தில் கத்திரிக்காய் குழம்பு சாப்பிட்டதாகக் கனவு கண்டிருக்கிறான். நேற்று இரவு மழை பெய்ததா இல்லையா என்று இந்த அமைச்சர் அவனிடம் விசாரித்தால், சிறுவன் கூறுவது கனவா அல்லது உண்மையா என்பது தெரிந்துவிடும்," என்றான்.
"நேற்று இரவு மழை பெய்ததா இல்லையா?" என்று சிறுவனிடம் மீண்டும் விசாரித்தார் அமைச்சர்.
அதற்கு அச்சிறுவன், "ஆமாம்! நான் வெளித் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்து என் உடைகள் நனைந்துவிட்டன. உடையை மாற்றிக்கொண்டுதான் கத்திரிக்காய் குழம்பு சாப்பிட்டேன்," என்றான் அழுத்தமாக.
அங்கு இருந்தவர்களுக்கு வியப்பாக இருந்தது. நேற்று இரவு மழையே பெய்யாததால், சிறுவன் ஏதோ கனவு கண்டிருக்கிறான் என்று முடிவு செய்தனர். புத்திசாலி அமைச்சர் தெனாலிராமனை வீணாகச் சந்தேகப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
தெனாலிராமனின் சாதுர்யத்தைப் பார்த்தீர்களா குட்டீஸ்!