சிறுவர் சிறுகதை - வேடிக்கை தந்த பாடம்!

Children's short story
Children's short storyImage credit - goodmetavs

றாம் வகுப்பு 'பி' பிரிவில் ஆறுமுகம், சம்பத் இருவரும் பயின்று வந்தார்கள். நெருங்கிய நண்பர்கள். ஆனாலும் அவ்வப்போது பிறர் துன்புறுவதைக் கண்டு மகிழும் சம்பத்துடைய குணத்தை மட்டும் மாற்ற இயலாதவனாக இருந்தான், ஆறுமுகம்.

பரீட்சை முடிந்து பள்ளி விடுமுறை அறிவித்தார்கள். ஆறுமுகம், தன்னுடைய கிராமத்துக்கு வரும்படி சம்பத்தை அழைத்தான்.

''ஐயோ, பட்டிக்காட்டுக்கா கூப்பிடறே? சுத்த போர்,‘‘ என்றான் சம்பத். கிராமம் என்றாலே இளப்பம் அவனுக்கு. பள்ளியில் படிக்கும் கிராமத்துப் பையன்களை கேலி செய்து அவர்கள் அழுவதைப் பார்ப்பது அவனுக்கு வேடிக்கை.

''இரண்டே நாட்கள் அங்கே இருந்துவிட்டு வரலாம் வா. எப்போது பார்த்தாலும் டீவி, வீடியோ, விளையாட்டுன்னு பொழுதுபோக்க போரடிக்கல்லியா உனக்கு? ஒரு மாறுதலுக்காகவாவது வாயேன்'' என்று வற்புறுத்தி அழைத்தான் ஆறுமுகம்.

சம்பத்தும் தன் பெற்றோரிடம் அனுமதி பெற்றான். இருவருமாக கிராமத்திற்குப் புறப்பட்டார்கள்.

பூம்பொழில் கிராமம்தான் எவ்வளவு சுத்தமாக இருந்தது! புகை இல்லை, இரைச்சல் இல்லை, யந்திரத்தனம் இல்லை, எங்கு பார்த்தாலும் பசுமை, அமைதி, அழகு, அதுவரை அனுபவித்தறியாத சுகமான இயற்கைக் காற்று, கால்நடைகளும், கழனிகளும் சம்பத்துக்குப் புதுக்காட்சிகள். அந்தப் புதுமைச் சந்திப்பில் அவன் உள்ளம் குதூகலிக்கத்தான் செய்தது.

ஆறுமுகத்தின் பாட்டி செய்து கொடுத்த மணக்கும் தேங்காய் எண்ணெயில் செய்த பலகாரங்களை ருசித்து உண்ட அவன், ஆறுமுகத்துடன் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க புறப்பட்டான்.

நீர் நிறைந்த பெரியகுளம் ஒன்று அவ்விருவர் கவனத்தையும் கவர்ந்தது.

குளக்கரையில் வேட்டியும், சட்டையும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே சம்பத்துக்கு ஒரு வேடிக்கையான எண்ணம் உதித்தது.

''ஆறுமுகம், இந்த வேட்டி சட்டையை எடுத்து ஒளித்து வைத்துவிடலாமா? குளத்தில் குளிப்பவன் வந்து பார்த்துத் திண்டாடுவான்; தவிப்பான். பார்க்க தமாஷாக இருக்கும்'' என்றான் உற்சாகத்துடன்.

''தப்பு சம்பத்'' ஆறுமுகம் அவசர அவசரமாக மறுத்தான்.

''அதோ அங்கே குளிக்கிறானே, அவன் ஓர் ஏழை உழவன். பாவம், இந்த வேட்டி, சட்டையைக் காணவில்லை என்றால், அவன் ரொம்பவும் தவித்துப் போவான். அரையில் கட்டிய சிறு துண்டோடு, எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு நடந்து போக ரொம்பவும் கூச்சப்படுவான். ம்... அதற்குப் பதிலாக இப்படிச் செய்வோம். அவனுடைய சட்டைப் பையில் ஒரு பத்து ரூபாய்த்தாளைச் செருகி வைப்போம். அதைப் பார்க்கும் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவான்! நமக்கும் அதைப் பார்க்க மனநிறைவாக இருக்கும்'' என்றான்.

சம்பத் உடனே தன் எண்ணத்திற்காக ரொம்பவும் வெட்கப்பட்டான்.

''ஆறுமுகம், நான் சொன்னது தப்புத்தான். உன் யோசனைப்படியே செய்யலாம்'' என்றான்.

அதேபோல அந்த உழவனின் சட்டைப் பையில் பத்து ரூபாய்த்தாளை திணித்துவிட்டு, ஓடிப்போய்ப் பக்கத்துக் கோயிலில் ஒளிந்து கொண்டார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த கிராமத்தில் மட்டும் மழையே பெய்யாதாம் ஏன் தெரியுமா குட்டீஸ்?
Children's short story

ழவன் குளித்துவிட்டுக் கரையேறினான். உடலைத் துண்டால் துடைத்துக்கொண்டு, சட்டை, வேட்டியை அணிந்து கொண்டான். தற்செயலாகத் தன் சட்டைப் பையைத் தொட்டுப்பார்த்த அவன், அதில் ரூபாய் நோட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டான். வெளியே எடுத்து அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். 'எப்படி இந்தப் பணம் என் பைக்குள் வந்தது?' என்று யோசித்தான். ஒன்றும் புரியவில்லை.

எதிர்பாராமல் கிடைத்தப் 'பரிசை'க் கண்டு அவன் ஆனந்தக் கூத்தாடவில்லை. அகமகிழவில்லை. சற்றுநேரம் யோசித்தான். பிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்து கோயிலை நோக்கிச் சென்றான்.

''கடவுளே! இந்தப் பணம் என் சட்டைப் பைக்குள் எப்படி வந்ததோ தெரியவில்லை. கீழே கிடந்து, நானாக எடுத்துப் பையில் போட்டுக்கொள்ளவுமில்லை. யாரிடமிருந்தும் திருடவுமில்லை. நான் எந்த வகையிலும் உரிமையாக முடியாத பணம் இது. இதைப் பயன்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. இது யாருடையதாக இருக்கும் என்று யாரையும் விசாரிக்கவும் போவதில்லை. ஏனென்றால், யாரேனும் தன்னுடையது என்று பொய் சொல்லக்கூடும். ஆகவே, இந்தப் பணத்தை உன் உண்டியலில் போட்டு விடுகிறேன். மாதம் ஒருமுறை இந்த உண்டியலைத் திறந்து கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து அன்னதானம் செய்வார்களே, அந்தப் பணிக்கு இந்தப் பணம் ஓரளவு உதவக்கூடும்,'' என்று வாய்விட்டு வேண்டிக்கொண்ட அவன், அந்த ரூபாய்த்தாளை உண்டியலில் செலுத்தி, கடவுளை வணங்கிவிட்டுச் சென்றான்.

ஆறுமுகத்திற்கும் கூட பிரமிப்பு! சம்பத் ஆச்சர்யத்தால் உறைந்தே போய்விட்டான்.

''இப்படி கொஞ்சமும் சுயநலமில்லாதவர் இருக்க முடியுமா?'' என்று அதிசயித்தனர்.

பிறர் மகிழ்ச்சிதான் நம் மகிழ்ச்சி என்பதை சம்பத் புரிந்து கொண்டான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com