
விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரும் அவருடைய அமைச்சர் அப்பாஜியும் ஒரு நாள் நகர்வலம் வந்து கொண்டிருந்தார்கள். மன்னர்கள் மாறுவேடத்தில் அவ்வப்போது நகர்வலம் சென்று மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளுவது வழக்கம்.
அவர்கள் நகர்வலம் சென்ற சமயத்தில் வயல்வெளி ஒன்றில் ஒரு விவசாயி கழனியை உழுது கொண்டிருந்தான். அப்போது அந்தப் பக்கமாக மூன்று பெண்கள் சென்று கொண்டிருந்தார்கள். அந்த கழனியைக் கடக்கும்போது ஒரு பெண் “இந்த வயல் முகத்துக்கு ஆகும்” என்றாள். மற்றொரு பெண்ணோ “இல்லை இல்லை இது வாய்க்குத்தான் ஆகும்” என்று சொன்னாள். மூன்றாவது பெண்ணோ இரண்டையும் மறுத்து “இல்லை. நீங்கள் இருவரும் சொல்வது தவறு. இது பிள்ளைக்குத்தான் ஆகும்” என்றாள்.
அந்த மூன்று பெண்களும் வயலைக் குறித்து குறிப்பால் ஏதோ சொல்லுகிறார்கள் என்று மன்னருக்குப் புரிந்தது. ஆனால் என்ன சொல்லுகிறார்கள் என்பது விளங்கவில்லை. மன்னர் தன்னுடன் வந்து கொண்டிருந்த அப்பாஜியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டார்.
அப்பாஜி புன்னகைத்தபடியே அதற்கு விளக்கமளிக்கத் தொடங்கினார்.
“மன்னரே. முகத்துக்கு ஆகும் என்றால் முகத்தில் பூசிக் கொள்ளும் மஞ்சளைக் குறிக்கும். இந்த நிலம் மஞ்சள் பயிரிடுவதற்கு ஏற்ற நிலம் என்று முதல் பெண்மணி குறிப்பிட்டாள். வாய்க்கு ஆகும் என்பது வாயில் போட்டுக் கொள்ளும் வெற்றிலையைக் குறிக்கும். இந்த நிலம் வெற்றிலைக் கொடி பயிரிடுவதற்குச் சிறந்த நிலம் என்பதை இரண்டாவது பெண்மணி தெரிவித்தாள். மூன்றாவது பெண்மணி பிள்ளை என்று குறிப்பிட்டது தென்னம்பிள்ளை. இந்த நிலம் தென்னைமரம் பயிரிடுவதற்குச் சிறந்த நிலம் என்று கூறினாள். இதுதான் அந்த மூன்று பெண்மணிகளும் பேசிக்கொண்டதன் விளக்கமாகும்.”
மன்னரும் உடனே அந்த மூன்று பெண்களையும் அழைத்து விசாரித்தார். அவர்கள் மூவரும் அப்பாஜி குறிப்பிட்ட கருத்துக்களையே கூறினார்கள். அந்த பெண்களை அனுப்பிவிட்டு அப்பாஜியிடம் மன்னர் ஒரு கேள்வியினைக் கேட்டார்.
“அப்பாஜி. ஒரே வயல். ஒரே வயதுடைய பெண்கள். ஆனால் அவர்களுக்கு மூன்று விதமான கருத்துக்கள் தோன்றியதே. அது எப்படி?”
“மன்னா. அதுதான் அனுபவம் மற்றும் உலக இயல்பு. எல்லோராலும் ஒரே மாதிரி சிந்திக்க இயலாதல்லவா. அவரவர் அனுபவத்திற்கேற்பவே சிந்தனையும் இருக்கும்.”
மன்னர் அப்பாஜியின் மதிநுட்பத்தைப் பாராட்டினார். இருவரும் அரண்மனையை அடைந்தனர்.