
கவுன்சிலரின் கார் வேகமாக வந்து அந்த உயர்நிலைப்பள்ளி காம்பவுண்டுக்குள் நுழைந்து, நேராகச் சென்று தலைமை ஆசிரியர் அறைக்கு முன்னால் நின்றது!
பத்தாம் வகுப்பினருக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த எச்.எம்., பத்மநாதன், பதறிப் போய் வகுப்பை அப்படியே விட்டு விட்டு, ஓடாத குறையாகத் தன் அறையை நோக்கி வேகமாக நடந்தார்! அதற்குள்ளாகவே காரிலிருந்து இறங்கிய கவுன்சிலர் கந்தசாமி, அவசரமாக உள்ளே நுழைய, எச்.எம்.,க்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது!
பல வகுப்புகளிலும் பாடங்களை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களும் அப்படியே நிறுத்தி விட்டு, ஸ்தம்பித்துப் போய் நின்றனர்! விபரம் புரிந்த மாணவ, மாணவியர் தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டாலும், அவர்களின் கண்களிலும் பய ரேகைகள் படிந்தன!
நடந்தது இதுதான்! பணியிலிருந்து ஓய்வு பெற்ற நல்லாசிரியர் ஒருவருக்கு, பள்ளி முடிந்ததும், மாலையில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடாகியிருந்தது! திட்டமிட்டபடி எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக மழை குறுக்கிட, அவசரம் அவசரமாக ஆசிரியர்களும் மாணவர்களும் மேஜை, நாற்காலிகளை உள்ளே தூக்கிச்சென்றனர்! அப்படித் தூக்கிச் சென்றவர்களில், கவுன்சிலர் மகன் கண்ணனும் ஒருவன்! குதர்க்கம் செய்யவென்றே அலையும் சிலரும் கூட்டத்தில் இருந்ததால், அவன் நாற்காலி தூக்கிச் செல்வதை கைபேசியில் ‘வீடியோ’ எடுத்து ‘கவுன்சிலர் மகனின் கதியைப் பார்த்தீர்களா?’ என்று சிலரும், ’ஆசிரியர்களின் அடாவடித்தனம்’ என்று சிலரும் கிளப்பி விட்டனர்! ‘உடனடியாகக் காவல்துறை நடவடிக்கை தேவை’ என்றும், ’கல்வித்துறை தூங்குகிறதா?’ என்று கேள்வியெழுப்பியும், பலரும் அந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்!
நிகழ்ச்சி நடைபெற்ற நாளில் கவுன்சிலர் ஊரில் இல்லையென்றும், அவர் ஊர் வந்ததும் முதல் வேலையாகப் பள்ளிக்குச் செல்கிறார்!’ என்றும் அவர் அல்லல் கைகள் கிளப்பி விட, காவல் துறையினரும், கல்வித் துறையினருங்கூட பதைபதைப்புடன் இருந்தனர்!
அவர் பள்ளிக்குச் சென்றுள்ளார் என்ற செய்தி அறிந்ததும் இரு துறையின் அதிகாரிகளும் பள்ளிக்கு விரைய, மீடியாக்காரர்களும் படையெடுக்க, கவுன்சிலரின் கட்சிக்காரர்களும் தங்கள் தங்கள் வாகனங்களில் அரக்கப் பரக்க ஓடி வர, பள்ளி வளாகம் பரபரத்தது!
பயத்துடன் உள்ளே நுழைந்த தலைமையாசிரியரைத் தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து கை குலுக்கிய கவுன்சிலர், ”நீங்க ஏன் வகுப்பை விட்டுட்டு வந்தீங்க! நடந்ததில எந்தத் தவறும் இருக்கறதா எனக்குத் தெரியல! யாரோ தேவையில்லாம இதைப் பெரிசாக்கி உங்களைக் குற்றவாளி மாதிரி ஆக்கியிருக்காங்க! நீங்க எதையும் மனசில வெச்சுக்காதீங்க! நீங்க எதற்கும் பயப்பட வேண்டாம்! காவல் துறை, கல்வித்துறை அதிகாரிங்ககிட்டயும் நான் பேசறேன்! இங்க நான் அவசரமா வந்ததே இதைப் பெரிசாக்கக் கூடாது என்பதோடு என் மகன் கண்ணனை நீங்க எந்தப்பாகுபாடும் காட்டிச் செல்லம் கொடுத்திடக் கூடாது என்று உங்களிடம் வேண்டுகோள் வைப்பதற்காகவுந்தான்! சாதாரண மாணவனா அவனைக் கருதி, நல்ல பழக்க வழக்கங்களை அவனுக்குக் கற்றுக் கொடுங்க! கண்டிப்பைக் காட்டுங்க!” என்று சொல்லியபடியே எழுந்து வந்த கவுன்சிலர் எச்.எம்.,மின் கைகளைப் பிடித்துக் கொண்டார்!
பயத்தில் நடுங்கிய எச்.எம்.,மின் கைகள் பாசப் பிடிப்பில் சிக்கித் தவித்தன! அவர் கண்கள் கலங்க, ’நன்றி சார்!’ என்று சொல்ல நினைத்தாலும், வார்த்தைகள் வெளியே வர மறுத்தன!
அதற்குள் அதிகாரிகளும், கட்சிக்காரர்களும் தலைமையாசிரியர் அறையை நெருங்க, தலைமையாசிரியரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்த கவுன்சிலர், ”வாங்க எல்லோரும்! நம்ம ஆபீஸ் பக்கத்திலதானே! அங்க போயிப் பேசுவோம்! இங்க எந்தப் பிரச்னையும் இல்ல! பள்ளி நல்லபடியா நடக்கட்டும்!” என்றபடி வெளியே வர, அத்தனை பேரும் அவரைப் பின் தொடர்ந்தனர்!
"ம்! நான் மட்டும் ஒழுங்காப் படிச்சிருந்தா மந்திரி கூட ஆகியிருப்பேன்! எங்கப்பா வாத்தியார்க்கிட்ட சண்டை போட்டதால என் படிப்பு போச்சு! என் மகனுக்கும் அப்படி நேர்ந்திட நானே காரணமாக மாட்டேன்! அவன் படிக்கணும்! நல்ல பழக்க வழக்கத்தைக் கற்றுக்கிடணும்! நம்ம அல்லல் கைகளைக் கண்டிச்சி வெக்கணும்!தேவையில்லாம பிரச்னை பண்ணுறானுங்க!" என்று எண்ணியபடி கவுன்சிலர் நடக்க, எச்.எம்.,பத்மநாதன் புதிய உலகத்திற்குள் புகுந்தாற்போல புளகாங்கிதம் அடைந்தார்!