
முல்லாவிடம் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டிருந்தான். ஒருநாள் அவனை அழைத்த முல்லா அவனிடம் சற்று முன்னர் வாங்கிய ஒரு புதிய பானையைக் கொடுத்து கிணற்றுக்குச்சென்று தண்ணீர் இறைத்துக்கொண்டு வரும்படி சொன்னார்.
பையன் அந்த புதிய பானையை வாங்கிக்கொண்டு புறப்பட எத்தணித்தான்.
முல்லா அவனை அழைத்து ஒரு விஷயத்தைச் சொன்னார்.
“இது புத்தம் புதிய பானை. விலையும் அதிகம். எனவே நீ கவனமாக இதை உடைத்துவிடாமல் நீர் கொண்டு வா. கவனக்குறைவாக அதை நீ உடைத்தால் உனக்கு நல்ல அடி கிடைக்கும்”
இப்படிக் கூறிய முல்லா அவன் முதுகில் பலமாக ஒரு அடி கொடுத்தார்.
வேலைக்காரப் பையன் வலியால் கத்தினான்.
“பானையை உடைத்தால்தானே அடிப்பேன் என்கிறீர்கள். நான் உங்கள் பானையை உடைக்காதபோது எதற்காக என்னை அடித்தீர்கள் ?”
அந்த பையன் முதுகை தடவிக்கொண்டே கேட்டான்.
“தம்பி. பானையை நீ உடைத்த பின்னால் நான் உன்னை அடித்து அதனால் எந்த பயனும் இல்லை. உடைந்த பானை திரும்பி வரப்போவதில்லை. அதற்காகத்தான் உன்னை முன்பாகவே உதைத்தேன். வலி உனக்கு ஜாக்கிரதை உணர்வைத் தரும். நீயும் பானையை உடைக்காமல் ஜாக்கிரதையாக திருப்பிக் கொண்டு வருவாயல்லவா ?”
அந்த வேலைக்காரப் பையன் முதுகை துடைத்துக் கொண்டே பானையுடன் வெளியேறினான்.
ஒரு நாள் முல்லா தமது வீட்டு மாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். மாடியில் யாரோ விழுந்த சத்தத்தைக் கேட்டு அவரது மனைவி குரல் கொடுத்தாள்.
தடுக்கி விழுந்த முல்லா மெல்ல எழுந்து நின்றார்.
“பயப்படாதே. என்னுடைய சட்டை கீழே விழுந்துவிட்டது. அவ்வளவுதான்”
“சட்டை கீழே விழுந்தால் ஏன் இவ்வளவு சத்தம் கேட்கிறது”
முல்லா எப்போதுமே நகைச்சுவையாக பேசும் வழக்கம் உடையவர்.
“உண்மைதான். சட்டை கீழே விழுந்தபோது சட்டைக்குள் நான் இருந்தேன். அதனால்தான் அவ்வளவு சத்தம் கேட்டது”
முல்லாவின் அவரது மனைவி தன் கணவர் கீழே விழுந்ததை நினைத்து அழுவதா அல்லது அவரது நகைச்சுவையான பதிலைக் கேட்டு சிரிப்பதா என்று புரியாமல் திகைத்தாள்.
ஒரு சமயம் வெளிநாட்டிலிருந்து இரண்டு அறிஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் முல்லாவை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தனர். ஒரு அறிஞர் முல்லாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“முல்லா அவர்களே. உலகத்தில் உண்மைக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பொய்யை யாரும் மதிப்பதில்லை. இது ஏன் ?”
அந்த அறிஞரிடம் முல்லா திருப்பி ஒரு கேள்வியைக் கேட்டார்.
“அறிஞரே. உலகத்தில் இரும்பை விட தங்கத்திற்கு மதிப்பு அதிகமாயிருக்கிறது. இது ஏன் ?”
“தங்கத்தை விட இரும்பு அதிக அளவில் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு குறைவாக இருக்கிறது”
“நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கான விடையே நீங்களே சொல்லி விட்டீர்கள்”
கேள்வி கேட்ட அறிஞர் யோசித்தார்.
“இந்த உலகத்தில் பொய்யானது இரும்பைப்போல அதிகமாக நிறைந்திருக்கிறது. ஆனால் உண்மையோ தங்கத்தைப் போல எங்கோ ஒரு இடத்தில் தான் இருக்கிறது. அதனால்தான் உண்மைக்கு எப்போதும் அதிக மதிப்பு இருக்கிறது”
முல்லாவின் பதிலை மிகவும் பாராட்டினார் அந்த அறிஞர்.