
பல்லி இனத்தைச் சேர்ந்த இக்வானா Iguanidae எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை. இக்வானா (Iguana) தாவரங்களை மிகவும் விரும்பிச் சாப்பிடும் ஓர் ஊர்வன இனமாகும். அபூர்வமான உயிரினமான இக்வானாக்களைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோமா குட்டீஸ்.
இக்வானாக்கள் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் இவை கரீபியன் தீவு, மடகாஸ்கர் போன்ற பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்வானா சுமார் நான்கு முதல் ஆறு அடி நீளம் வரை வளர்கின்றன. இவற்றின் வாலானது மிக நீளமாக அதாவது சுமார் மூன்று அடி காணப்படுகிறது. இவை பச்சை, பிரௌன் மற்றும் மஞ்சள் நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றின் எடை சுமார் ஐந்து முதல் பத்து கிலோ வரை இருக்கும். இந்த இனத்தில் சுமார் எழுநூறு வகையான இக்வானாக்கள் இருக்கின்றன. இவற்றின் கால்களில் மிகக் கூரான நகங்கள் காணப்படுகின்றன.
இத்தகைய நகங்கள் மரங்களில் ஏறுவதற்கும் பள்ளம் தோண்டுவதற்கும் பயன்படுகின்றன. இவை நீரில் நன்றாக நீந்தும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இவை பகல் நேரங்களில் சுறுசுறுப்புடன் காணப்படுகின்றன. இக்வானாக்கள் பொதுவாக மரக்கிளையின் உச்சியில் அமர்ந்து சூரிய ஒளியைப் பெற்று மகிழ்ச்சி அடையும் இயல்புடையன.
இக்வானாக்கள் மிக உயரமான மரக்கிளைகளிலிருந்து கீழே விழுந்தாலும் சிறு காயம் கூடப் படாமல் தங்களைக் காத்துக் கொள்ளும் அதிசய ஆற்றல் பெற்றவை. இக்வானாக்களின் பார்வைத் திறன் மிகவும் அபாரமானது. இவற்றின் கேட்கும் திறனும் வாசனையை நுகரும் திறனும் மிக அதிகம். இவை எதிரிகளிடம் மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் தங்கள் வாலை பல்லிகளைப் போல் துண்டித்துத் தப்பித்துக் கொள்ளுகின்றன.
துண்டிக்கப்படும் வாலானது மீண்டும் வளர்ந்து விடுகிறது. மேலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க வேண்டியிருந்தால் எவ்வளவு உயரமான மரஉச்சியில் இருந்தாலும் இவை கீழே குதித்து விடுகின்றன. இவ்வாறு குதிக்கும்போது இவற்றின் உடலுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. மரங்களின் அருகே நீர்நிலைகள் இருந்தால் அதிலும் இவை குதித்து நீந்திச்சென்று தப்பித்து விடுகின்றன. இவை நன்றாக நீந்தும் ஆற்றலைப் பெற்றுள்ளன.
இக்வானா தாவர இலைகள், பூக்கள், பழங்கள் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுகின்றன. சில சமயங்களில் இவை முட்டைகள் மற்றும் பூச்சிகளையும் சாப்பிடுகின்றன. இக்வானாக்கள் அதிகமான உணவை கொழுப்பு சக்தியாக மாற்றி தங்கள் கழுத்துப் பகுதியில் சேமித்து வைத்துக் கொள்ளுகின்றன.
உணவு பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் இதை பயன்படுத்திக்கொண்டு வாழ்கின்றன. இவற்றின் முக்கிய எதிரிகள் பறவைகள், நரிகள், எலிகள் மற்றும் பாம்புகளாகும். இக்வானாவின் மென்மையான இறைச்சிக்காக இவை பல இடங்களிலும் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றன
பெண் இக்வானாக்கள் ஒரு சமயத்தில் சுமார் இருபது முதல் எழுபது முட்டைகள் வரை இடுகின்றன. இவை முட்டையிட பூமிக்கு வந்து தரையில் குழியினைத் தோண்டி அதற்குள் முட்டைகளை இடுகின்றன. பெண் இக்வானாக்கள் குழிக்குள் முட்டையிட்டுவிட்டுச் சென்று விடுகின்றன. சுமார் பத்து வாரங்களுக்குப் பின்னர் முட்டைகள் பொரிந்து அதற்குள்ளிருந்து இக்வானா குட்டிகள் வெளியே வருகின்றன.
இவை தாயின் பராமரிப்பின்றி வாழ்க்கையைத் தொடங்குகின்றன. இவை எத்தனை முட்டைகளை இட்டாலும் கடைசியில் சுமார் பத்து இக்வானா குட்டிகளே உயிர் பிழைக்கின்றன. இக்வானாக்கள் சுமார் ஆறு முதல் எட்டு வருடங்கள் வரையே வாழ்கின்றன.