
அன்று நரிக்கு கொள்ளைப் பசி. எங்கு அலைந்து திரிந்தாலும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. மிகவும் தளர்ந்து போனது. சோர்வுடன் நடக்க முடியாமல் நடந்து ஏதாவது சாப்பிட கிடைக்காமல் போய்விடுமா என்ன என்று யோசித்துக்கொண்டே வழிமேல் விழி வைத்து நடந்து கொண்டிருந்தது. சிறிது தொலைவில் மிகவும் அருமையான இரை கண்ணில்பட்டது.
நல்ல வளப்பமான மான் ஒன்று இறந்து கிடந்தது. ஆஹா இன்று செம விருந்து என்று எண்ணிக் கொண்டே அதன் அருகில் சென்றது.
தூரமாக சிங்கம் ஒன்று வருவதைக் கண்டது. எங்கே இந்த சிங்கம் வந்து இதை சாப்பிட்டு விடுமோ, நமக்கு கிடைக்காமல் போய்விடுமே என்று எண்ணிக்கொண்டே சிங்கத்தைக் கண்டு, "வாருங்கள் சிங்க ராஜா உங்களுக்கு விருந்தாகும் என்றுதான் இதற்கு காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். எந்த விலங்கையும் இதன் அருகில் செல்ல விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்"என்றது.
சிங்கம் இறந்து கிடந்த மானைப் பார்த்தது. "நான் வேட்டையாடிய விலங்குகளைத்தான் சாப்பிடுவேன். இப்படி இறந்து கிடக்கும் விலங்குகளை சாப்பிட மாட்டேன்" நீ வேண்டுமானால் சாப்பிட்டுக் கொள்" என்றபடியே கிளம்பிச் சென்றது. அருமையான விருந்து நமக்கு கிடைத்திருக்கிறது சாப்பிட வேண்டியதுதான் என்று அதன் அருகில் செல்லும் பொழுது ஓநாய் ஒன்று வந்தது.
அதைப் பார்த்ததும் "சிங்கராஜா இந்த மானை வேட்டையாடினார். என்னை காவலுக்கு வைத்துவிட்டு அவர் தன் துணையை அழைத்து வர சென்றுள்ளார். எனவே இதனை சாப்பிட முயலாதே" என்று பயமுறுத்தியது.
ஆனால் ஓநாயோ அதன் நாவில் ஊறிய எச்சிலை கட்டுப்படுத்திக் கொண்டு மெல்ல மான் அருகில் சென்று வேகமாக ஒரு கடி கடித்தது. தந்திரமாக நரியும் பெரிதாக கூச்சல் இட்டது. சிங்கராஜா வருகிறார். ஓடிவிடு என்று அலறியது. அதைக் கேட்டதும் பயந்துபோன ஓநாய் தலை தெரிக்க ஓடியது.
வேறு ஏதேனும் விலங்குகள் வந்து சாப்பிட போட்டி போடுவதற்கு முன் நாம் சாப்பிட்டு விடவேண்டும் என்று மானின் மேல் பாய்ந்து கடித்து ருசித்தது. வயிறு முட்ட தின்றது. ஆனந்தமாக ஒரு குட்டி தூக்கமும் போட்டது. தந்திரக்கார நரி தனக்கு கிடைத்த விருந்தை யாருக்கும் தராமல் சாப்பிட்டு மகிழ்ந்தது.
நீதி: தந்திரத்தால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் புத்திசாலிகள்.