Short story
Short story

சிறுவர் கதை - மெதுவாகச் சென்றால் பத்து நிமிடங்கள்... வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ?! அது எப்படி?

Published on

குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்வதற்காக வேகமாக வந்து கொண்டிருந்த குதிரை வண்டிக்காரன் ஓரிடத்தில் தயங்கி நின்றான். காரணம் அங்கு நான்கு பக்கமும் சாலை பிரிந்து சென்றது. அதனால் குழம்பிய அவன் எந்த பக்கமாக செல்ல வேண்டும் என்று தடுமாறி எதிரில் வந்த வயதான ஒருவரிடம் "ஐயா! தேங்காய்களை விற்கும் மண்டிக்கு செல்ல வேண்டும். இந்த நான்கு வழிப் பாதையில் எந்த வழியில் சென்றால் சீக்கிரம் போய்ச் சேரலாம்" என்று வழி கேட்டான்.

அதற்கு முதியவரோ, "தம்பி இந்த சாலையில் போனால் சரியாக இருக்கும்" என்று கூறி இடது பக்கம் செல்லும் சாலையை வழிகாட்டினார்.

"போய் சேர எவ்வளவு நேரமாகும் ஐயா?" என்று கேட்க, "மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்," என்றார். முதியவரின் பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்கு கோபம் வந்துவிட்டது.

"என்ன ஐயா? கிண்டல் பண்ணுகிறீர்களா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்; புரியாமல் பேசுகிறீர்களே," என்று கிண்டலாக சொன்னவன், "சரி விடுங்கள். இந்த சாலை தானே தேங்காய் மண்டி செல்வதற்கு?" என்று கேட்க, "ஆமாம் இந்த சாலை தான். போய்த்தான் பாருங்களேன்!" என்று முதியவர் கூற குதிரை வண்டிக்காரனும் வண்டியை வேகமாக விரட்டிச் சென்றான்.

சிறிது தூரம் சென்றதும் சாலை முழுவதும் கற்கள் கொட்டிக் கிடந்தன. வண்டிக்காரனோ அதனை லட்சியம்  செய்யாமல் வேகமாக ஓட்ட, வண்டி தடுமாறி கவிழ்ந்து விழுந்தது. அவ்வளவுதான் தேங்காய்கள் அத்தனையும் சிதறி ஓடின. கவிழ்ந்து விழுந்த வண்டியை நிமிர்த்தி, கீழே விழுந்த தேங்காய்களை பொறுக்கி எடுத்து வண்டிக்குள் போட்டுக் கொண்டு குதிரையை விரட்ட, அதுவோ  சண்டித்தனம் பண்ண ஆரம்பித்துவிட்டது. தடுமாறி விழுந்த வேகத்தில் குதிரைக்கு நல்ல அடி. உள்காயம் ஏற்பட்டதால் அதனால் சரியாக நடக்க கூட முடியவில்லை. 

அப்பொழுதுதான் புரிந்தது அந்த முதியவர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்கள். மெதுவாகச் சென்றால் 10 நிமிடத்தில் போய் இருக்கலாம். வேகமாக வண்டியை ஓட்டியதால் வண்டி தடுமாறி விழுந்து நமக்கு வேலையும் வைத்து விட்டது என்று வருத்தப்பட்டான். முதியவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த கதி நமக்கு வந்திருக்காது என்று எண்ணியபடி வண்டியை மெதுவாக ஓட்டிச் சென்றான்.

நீதி:  இதிலிருந்து என்ன தெரிந்துக் கொண்டீர்கள் குட்டீஸ்!? பெரியவர்களின் பேச்சை தட்ட கூடாது என்பதை புரிந்து கொண்டீர்கள் தானே!

இதையும் படியுங்கள்:
வித விதமான மணக்கும் சாம்பார் செய்து அசத்தலாம் வாங்க!
Short story
logo
Kalki Online
kalkionline.com