
கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் போன்றவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவலுடன், ஒரு வெங்காயத்தை அரைத்து சாம்பார் செய்தால், வெங்காய சாம்பார் போல மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
பழைய புளியில் சாம்பார் வைத்தால் கறுப்பாகி விடும். இதைத் தவிர்க்க அரிசி களைந்த நீரில் புளியைக்கரைத்து ஊற்றி சாம்பார் வைத்தால், புதிய புளியில் வைத்ததுபோல இருக்கும்.
சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால், வாழை இலை ஓரத்தில் இருக்கும் தண்டினை ஒரு துண்டு நறுக்கிப்போட்டால் உப்பு மட்டுப்படும்.
முட்டைக்கோஸை நறுக்கும்போது, அதில் உள்ள தண்டுகளை எறிந்துவிடாதீர்கள். அவற்றைப் பொடியாக சாம்பாரில் சேர்த்தால் சாம்பாரின் சுவையே அலாதிதான்.
வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணையில் வதக்கி, மிக்ஸியில் அரைத்து சேர்த்தால், சாம்பாரின் புளிப்புச் சுவை மட்டுப்படும்.
துவரம் பருப்பை வேகவைக்கும்போது பருப்புடன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருக்கும்.
மீதமான சாம்பார் கொண்டு சுவையான டிபன் சுலபமாக செய்து விடலாம். தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சாம்பாரை நன்றாக கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவையை கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் இன்ஸ்டன்ட் கிச்சடி தயார்.
துவரம் பருப்பு வேகவைக்கும்போது, பருப்புடன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும்.
காலையில் வைத்த சாம்பாரை மாலையில் மீண்டும் இட்லி, தோசை போன்ற டிபனுக்கு தொட்டுக்கொள்ள உபயோகப்படுத்தும் போது சிறிது வெந்தயத்தையும் ஒரு டீஸ்பூன் கொத்துமல்லி விதையையும் வறுத்துபொடி செய்து வைத்துக்கொண்டால் ஹோட்டல் சாம்பார்போல நல்ல வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.
சாம்பார் பொடிக்கு மிளகாய் அரைக்கும்போது குண்டு மிளகாயை மட்டுமே போடாமல், சரிக்கு சரி நீள மிளகாயையும் கலந்து சாம்பார் பொடி அரைத்தால் சாம்பார் காரமாகவும், நிறமாகவும் இருக்கும்.
மிளகாய், தக்காளி போன்றவற்றை சாம்பாருக்கு உபயோகிக்கும்போது அதன் விதைகளை நீக்கிவிட்டு உபயோகிப்பது உடலுக்கு நல்லது.
தீர்ந்த பெருங்காய டப்பாவை பருப்பு டப்பாவில் போட்டு வைத்தால், சாம்பார் பெருங்காயம் போடாமலேயே மணக்கும்.