
ஓநாய் ஒன்று தவறி நகரத்திற்குள் வந்துவிட்டது. அதை பார்த்த மக்கள் அதனை அடிக்க விரட்டிக்கொண்டு வந்தனர். பயந்துபோன ஓநாய் அருகிலிருந்த சாயப்பட்டறை ஒன்றுக்குள் சென்று ஒளிந்து கொண்டது. பட்டறைக்குள்ளும் தேடிவந்த மக்கள் தன்னைப் பிடித்து விடாமல் இருப்பதற்காக சாயம் நிறைந்த தொட்டிக்குள் சென்று ஒளிந்து கொண்டது. துரத்தி வந்தவர்கள் ரொம்ப நேரம் தேடிவிட்டு சென்று விட்டார்கள். விரட்டி வந்தவர்கள் போய்விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டு மெள்ள எழுந்து வந்த ஓநாய் கருநீல நிறத்திற்கு மாறி இருந்தது. எப்படியோ மனிதர்களுடைய கண்களில் படாமல் காட்டிற்குள் ஓடிவிட்டது.
அங்கு ஓநாயை பார்த்த யானை, புலி, மான் போன்ற மிருகங்கள் பயந்து ஒதுங்கின. ஓநாயோ வியந்தது. என்னாச்சு நமக்கு? ஏன் இப்படி நம்மை கண்டதும் ஓடிப்போகிறார்கள்? யானை, புலி போன்ற பயங்கரமான மிருகங்கள் கூட நம்மை பார்த்து ஏன் பயப்படுகின்றன என்று வியந்தது.
ஓடிப்போய் அருகில் இருந்த சிறு குளத்தில் போய் எட்டிப் பார்த்தது. அதன் உருவம் அதற்கே கலவரமாகத் தெரிந்தது. தன்னை பார்த்து வலிமையான மிருகங்கள் கூட ஏன் பயப்படுகின்றன என்று புரிந்து கொண்டது. அப்பொழுது எதிரில் சிங்கம் ஒன்று வந்து கொண்டிருந்தது.
சிங்கத்தைப் பார்த்து "பயப்பட வேண்டாம் கடவுள் என்னை இந்த காட்டிற்கு அரசனாக அனுப்பி வைத்துள்ளார். என் பேச்சுக்கு கீழ்ப்படிந்தால் உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது" என்று பேசியது.
ஓநாயின் உருவத்தைக் கண்ட சிங்கம் பயந்து பணிந்து சென்றது. இதை கண்ட மற்ற விலங்குகளும் பயந்துபோய் அரசரே வாழ்க! வாழ்க! என கோஷம் எழுப்பியது. உடனே ஓநாய்க்கு தலைகால் புரியவில்லை. தன்னை பெருமைப்படுத்தும் விலங்குகளை ஏளனமாக பார்த்தது. ஒவ்வொருவரையும் வேலை வாங்கியது. எல்லா விலங்குகளும் பயந்து போய் பணிந்து சென்றன. ஓநாய்க்கு கர்வம் தலைக்கு மேல் ஏறிவிட்டது.
முட்டாள் விலங்குகள் இவர்களை ஏமாற்றுவது ரொம்பவும் சுலபம் போலும் என்று எண்ணி அனைத்து விலங்குகளையும் விரட்டி விரட்டி வேலை வாங்கியது. விலங்குகளும் பயந்து கொண்டு ஓநாய் கூறிய வேலைகளை பணிவுடன் செய்து முடித்தன.
சில நாட்கள் சென்றது. ஒரு நாள் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை கடுமையாக கொட்ட ஆரம்பித்தது. காட்டில் உள்ள நரிகள் ஊளையிட்டன. மான்கள் நடனம் புரிந்தன. யானைகள் மகிழ்ச்சியில் மழையில் விளையாடின. ஓநாயால் சும்மா இருக்க முடியவில்லை. தானும் தன் பங்குக்கு மழையில் வெளியே தலைகாட்டி சப்தமிட்டது. கடும் மழையின் காரணமாக ஓநாயின் சாயம் மெல்ல மெல்ல வெளுக்க தொடங்கியது.
இதைப் பார்த்த யானை, சிங்கம், புலி போன்ற அனைத்து மிருகங்களும் திடுக்கிட்டு போயின. தங்களை ஏமாற்றிய ஓநாயின் மீது கோபம் கொண்டன. பயந்துபோன ஓநாய் ஓட்டம் பிடித்தது. சாதாரண ஓநாயாக மாறியதைக் கண்டதும் எல்லா விலங்குகளும் அதனை துரத்திக் கொண்டு செல்ல ஆரம்பித்தது. சிங்கம் பாய்ந்து சென்று ஓநாயை கடித்துக் குதறியது. சில நிமிடங்களில் ஓநாய் துடிதுடித்து இறந்து போனது. பிறரை ஏமாற்ற நினைத்த ஓநாயின் வாழ்க்கை துயரமாக முடிந்து போனது.
நீதி: இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் குட்டீஸ்? ஏமாற்றுவது பெரும் பாவம். ஏமாற்றிப் பிழைத்தால் தண்டனை நிச்சயம் என்பதை அறிந்து கொண்டீர்கள்தானே!