
அந்த கிராமத்தில் வேணுகோபால், கோவிந்தன் இருவருடைய பசுக்களுமே ஒரே வண்ணம் கொண்ட காளை கன்றுகளை ஈன்றன.
வேணுகோபாலுடைய பசு, மேய்ச்சலுக்குப் பிறகு தொழுவத்துக்குத் திரும்பியது. ஆனால் அதன் கன்று திரும்பவில்லை. கன்று காணாமல் போனதால் அவன் தவித்துப் போனான். எல்லா இடங்களிலும் தேடி ஏமாந்தான். சோகத்துடன் வீடு திரும்பிய அவன், வழியில் கோவிந்தன் தொழுவத்திலிருந்து கன்று கதவு இடுக்கு வழியாக வெளியே வந்ததைக் கண்டான். ‘அட, இது என்னுடைய கன்றுகுட்டிதான். தாயைத் தேடித்தான் வருகிறது’ என்று ஊகித்தான். உடனே தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அதைக் கண்ட தாய்ப்பசு தலையை ஆட்டி ஆட்டி அதை வரவேற்க, கன்றும் ஓடோடிப்போய் அதனுடன் உரசியபடி நின்றது. நிம்மதிப் பெருமூச்சு விட்டான் வேணுகோபால்.
இதற்கிடையில், கோவிந்தன் வீட்டுத் தொழுவத்திலிருந்த பசுமாடு, ‘மா...மா...’ என்று கத்திக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட அவன் குழப்பத்துடன் சென்று பார்த்தான். அந்தப் பசு எதற்காகவோ தவிப்பது புரிந்தது.
அதன் கன்றைக் காணோம். மேய்ச்சல் முடிந்து தாயும், கன்றுமாக இரண்டுமாகத்தானே வந்தன? கன்று மட்டும் எங்கே போய்விட்டது? ஒன்றும் புரியாதவனாக தேடிப் பார்க்கப் போனான்.
வேணுகோபாலுடைய தொழுவத்தில் கன்று நின்றிருப்பதைக் கண்டான். அதை வேணுகோபால் திருடியிருக்கிறான் என்று தவறாகக் கருதினான். ‘‘நீ என் கன்றைத் திருடிவிட்டாய். மேய்ச்சலுக்குப் பிறகு இதை என் தொழுவத்தில் பார்த்தேன்; இப்போது காணோம்,’’ என்று கோபமாகச் சொன்னான்.
வேணுகோபாலோ, அந்தக் கன்று தானாக கோவிந்தனுடைய தொழுவத்திலிருந்து வந்தது என்றும் தான் திருடவில்லை என்றும் சொன்னான். இருவரும் கிராமப் பஞ்சாயத்தை அணுகி, தீர்ப்பு கோர முடிவு செய்தார்கள்.
பஞ்சாயத்து கூடியது. வேணுகோபால், கயிற்றால் கட்டப்பட்டிருந்த கன்றைப் பிடித்திருந்தான். அது தன்னுடையதுதான் என்று கோவிந்தன் வாதிட்டான். பஞ்சாயத்துத் தலைவர் குழப்பமடைந்தார்.
அப்போது ஆனந்தன் என்ற சிறுவன், ‘‘ஐயா, நான் இவர்கள் இருவருடைய கன்றுகளையும் பார்த்திருக்கிறேன். இரண்டும் அச்சாக ஒன்று போலவே இருக்கும். அதனால்தான் இருவரும் சண்டை போடுகிறார்கள். ஆனால் ஒரு கன்று காணாமல் போயிருக்கிறது,’’ என்று சொன்னான்.
‘‘ஆனால் இந்தக் கன்று யாருடையது, புரியவில்லையே!‘‘ என்றார் தலைவர்.
‘‘ஐயா, அந்தப் பொறுப்பை அதனுடைய தாயிடமே விட்டுவிடலாம்,’’ என்றான் ஆனந்தன்.
‘‘அது எப்படி? பசுவுக்குப் பேசத் தெரிந்தால்தான் பிரச்னையே இல்லையே!’’ என்று கூறி நகைத்தார் தலைவர்.
‘‘நம் கிராமம் அருகே ஓடும் ஆற்றில் இருவருடைய பசுக்களையும் நீந்த விடுவோம். பின்னாலேயே இந்தக் கன்றையும் விடுவோம். விரைவில் உண்மை தெரியும்.’’
அந்த யோசனைப்படி பசுக்களை ஆற்றில் இறக்கினர். இரண்டும் ஆற்றின் போக்கிலேயே நீந்திச் சென்றன. பின்னாலேயே கன்றையும் இறக்கினார்கள்.
பசுக்கள் பத்துப் பதினைந்தடி நீந்திச் சென்றபோது, பின்னாலிருந்து கன்று, ‘மா..’ என்று கத்தியது. அப்போது வேணுகோபாலின் பசு பளிச்சென்று திரும்பியது; தன் நீச்சல் வேகத்தைக் குறைத்தது. அதோடு திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றது. கோவிந்தனுடைய பசுவோ எந்த பாதிப்பும் இல்லாமல் முன்னே சென்றது.
ஆற்றங்கரையோரமாக நடந்துகொண்டே இந்தக் காட்சியைப் பார்த்த பஞ்சாயத்துத் தலைவர், மற்றும் பிறரிடம் ஆனந்தன் சொன்னான்: ‘‘அதோ, அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்தபடி செல்கிறதே அதுதான் கன்றின் உண்மையான தாய். தன் கன்றின் மீதுள்ள பாசத்தால்தான் அது அப்படி பரிதவித்துப் பார்த்துக் கொண்டே செல்கிறது. ஆகவே இந்த கன்று வேணுகோபாலின் பசுவுடையதுதான்.’’
அதேசமயம், ஆற்றங்கரையின் அந்தப் பக்கத்திலிருந்த ஒரு பள்ளத்திலிருந்து ‘மா...’ என்று ஒரு கன்றின் குரல் கேட்டது. அதைக் கேட்டதும் கோவிந்தனுடைய பசு ஆற்றை விட்டுக் கரையேறி அதனருகே ஓடியது. ஆமாம், கோவிந்தனுடைய காணாமல் போயிருந்த கன்றுதான் அது. அந்தப் பசு, அந்தப் பள்ளத்தின் முன் நின்றது. உடனே ஊரார் அந்தக் கன்றை மீட்டார்கள். அதுவும் கோவிந்தனின் பசுவருகே வந்து அதன் மடியை பாசத்துடன் முட்டியது.
வேணுகோபாலன், கோவிந்தன் இருவருக்கும் மகிழ்ச்சி. அனைவரும் புத்திசாலி ஆனந்தனை வெகுவாகப் பாராட்டினார்கள்.