
உலகில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள், திறமைகள் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் நம்மிடம் இருக்கும் திறமைகளை உற்று நோக்குவதை விட பிறரிடம் உள்ள திறமைகளை பார்த்து ஆச்சரியப்படுவதோடு அதற்காக ஏங்கும் சிந்தனையும் நமக்கு அடிக்கடி வரலாம். அத்தகைய காலகட்டங்களில், நாம் பிறரோடு நம்மை ஒப்பிட்டு மனச்சோர்வு அடைவதை காட்டிலும் நம்மிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அதை மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம். அவ்வாறு நாம் நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, நம்மை நாமே ஏற்றுக்கொள்ள முயற்சித்தால் இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோசமான மனிதனாக நாம்தான் இருப்போம்!
இதை விளக்கும் ஒரு குட்டி கதையை பார்ப்போமா குட்டீஸ்?
ஒரு காட்டில் காகம் ஒன்று இருந்தது. ஒரு நாள் அந்த காகம் மரக்கிளையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தது. அந்த மரத்திற்கு அடியில் துறவி ஒருவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். காக்கையின் அழுகை சத்தமானது அந்த துறவிக்கு கேட்கவே அவர் மேலே நிமிர்ந்து பார்த்து காகத்தை கீழே வருமாறு அழைத்தார். துறவியின் வேண்டுகோளுக்கிணங்க காகம் கீழே வந்தது. அந்த துறவி காகத்திடம், 'ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன பிரச்சனை?' என்று கேட்டார். அதற்கு அந்த காகமோ, 'நான் மற்ற பறவைகளைப் போல் வண்ணமாக இல்லை. என்னுடைய நிறத்தை மற்ற அனைவரும் வெறுக்கிறார்கள். மற்ற பறவைகளைப் போல் எங்களை யாரும் விரும்பி வளர்ப்பதில்லை. ஆதலால் எனக்கு இந்த உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை. பிடிக்காத இந்த வாழ்க்கையை வாழ்வதை விட செத்துப் போவது மேல் என நினைக்கிறேன்,' என்று கூறி அழுதது.
காகத்தின் வார்த்தைகளை கேட்ட துறவிக்கு அதன் மீது மிகுந்த இரக்கம் உருவானது. 'சரி, நான் உனக்கு ஏதாவது உதவி செய்யட்டுமா?' என்று கேட்டார் துறவி. உடனே காகம், 'கருப்பாக இருக்கக்கூடிய இந்த நிறம் எனக்கு பிடிக்கவில்லை, எனவே என்னை ஒரு அன்னப்பறவையாக மாற்றி விடுங்கள். அது பார்ப்பதற்கு மிகவும் வெண்மையாக பாலைப் போன்று பிரகாசமாக உள்ளது.' என்று கூறியது. காகம் கூறியதை கேட்டு சற்று நேரம் சிந்தித்த அந்த துறவி, 'நிச்சயம் உன் விருப்பப்படியே உன்னை அன்னமாக மாற்றி விடுகிறேன். ஆனால் அதற்கு முன் நீ அன்னப்பறவையிடம் சென்று அது சந்தோஷமாக இருக்கிறதா என்று கேட்டு வா!' என்று கூறினார். துறவியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட காகம் அன்னப்பறவையை தேடிச் சென்றது.
ஒரு குளத்தில் அன்னப்பறவை நீந்திக் கொண்டிருந்தது. அதன் அருகில் சென்ற காகம், 'தோழியே! நீ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாயா? உன்னுடைய வண்ணம் என்னுடைய கண்களை ஈர்க்கிறது. நிலவைப் போல் நீ எவ்வளவு வெண்மையாக இருக்கிறாய்! எனக்கு தெரிந்து, இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய பறவை நீயாகத்தான் இருக்க முடியும்,'என்று கூறியது.
அதைக் கேட்டு அன்னப்பறவை, 'இல்லை தோழியே! நீ மிகவும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். நீ நினைப்பது போல் நான் மகிழ்ச்சியாக இல்லை. உலகில் எத்தனையோ வண்ணங்கள் இருக்கும் போது நான் ஒரே ஒரு வண்ணத்தை மட்டுமே கொண்டிருக்கிறேன். அதுவும் நிறமற்று பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென்று இருக்கிறது. கிளியை பார்! அது எத்தனை வண்ணங்களில் இருக்கிறது? பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக உள்ளது. எனவே எனக்கு தெரிந்து உலகத்திலே மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய பறவை நிச்சயம் கிளியாகத்தான் இருக்க முடியும்!' என்று கூறியது.
அதைக் கேட்ட காகம் உடனே கிளியை பார்ப்பதற்காக கிளம்பிச் சென்றது. அங்கு கிளியை பார்த்து, 'கிளியே நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! உன்னிடம் ஏராளமான வண்ணங்கள் உள்ளன. இந்த உலகத்திலே மகிழ்ச்சியான பறவை நீயாகத் தான் இருக்க முடியும். உண்மைதானே?' என்று கேட்டது காகம். உடனே கிளி, 'இல்லை தோழியே! நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் மக்கள் என்னை கூண்டுகளில் வைத்து வளர்க்கிறார்கள். இறக்கைகள் இருந்தும் என்னால் பறக்க முடியவில்லை. நான் விரும்பிய உணவை விரும்பிய நேரத்தில் உண்ண முடியவில்லை. அதனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு தெரிந்து மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய பறவை மயிலாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அது நீண்ட தோகையை கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அது என்னை விட அதிகமான வண்ணங்களை கொண்டிருக்கிறது,' என்று கூறியது.
கிளி கூறியதை கேட்ட காகம் உடனடியாக மயிலை பார்ப்பதற்காக கிளம்பிச் சென்றது. அங்கு மயிலானது ஒரு மிருகக்காட்சி சாலையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. மயிலை பார்ப்பதற்காக தினமும் ஏராளமான மக்கள் அங்கு வந்தனர். அதைப் பார்த்த காகத்திற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மயில் எவ்வளவு அழகாக இருக்கிறது! அதை ரசிப்பதற்காக தினமும் எவ்வளவு மக்கள் வருகிறார்கள் என்று நினைத்தது. உடனே காகம் மயிலிடம் சென்று, 'மயிலே, நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? எவ்வளவு அழகான வண்ணங்களை நீ பெற்று இருக்கிறாய்! உன்னை பார்ப்பதற்கு தினமும் எத்தனை பேர் வருகை தருகிறார்கள் பார்!' என்று கூறியது. அதற்கு மயிலோ, 'இல்லை தோழியே, நான் மகிழ்ச்சியாக இல்லை. காடுகளில் மிகவும் சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டிய நான் கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கிறேன். தினமும் என்னை பார்ப்பதற்காக நிறைய மக்கள் வருவதால் என்னால் ஓய்வாக இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, வருபவர்கள் எப்போதும் என்னை சீண்டிக் கொண்டே இருக்கிறார்கள். இங்கு நான் நானாக இல்லை. என்னை பார்க்க வருபவர்களுக்கு நான் ஒரு வேடிக்கை பொருளாதாகத் தான் இருக்கிறேன்,' என்று கூறியது. இதையெல்லாம் கேட்ட காகத்திற்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
'அப்படியானால் இந்த உலகத்தில் யார் தான் மகிழ்ச்சியான பறவை?' என்று மயிலிடமே கேட்டது காகம். அதற்கு மயில், 'எனக்கு தெரிந்து, இந்த உலகத்திலே மிகவும் சந்தோஷமான மற்றும் சுதந்திரமான பறவை என்றால் அது நீயாகத்தான் இருக்க முடியும். நான் கடந்த சில நாட்களாக இங்கு வரும் காகங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரும் அவர்களை சிறை பிடிப்பதில்லை. அவர்கள் இயல்பாக எங்கு வேண்டுமானாலும் செல்கிறார்கள். எனவே எனக்கு தெரிந்து உலகத்திலே மகிழ்ச்சியான பறவை என்றால் அது நீங்கள் தான்!' என்று கூறியது மயில்.
இதையெல்லாம் கேட்ட காகம் மீண்டும் துறவியிடமே திரும்பி வந்தது. காகத்தைப் பார்த்த துறவி, 'இப்பொழுது சொல். உன்னை அன்னப்பறவையாக மாற்றி விடவா?' என்று கேட்டார். அதைக் கேட்ட காகம், 'இல்லை சாமி, நான் மகிழ்ச்சி என்பது என்ன என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த உலகத்தில் நான் நானாக இருப்பது தான் மகிழ்ச்சி! என்னுடைய குறை என்ன என்பதைத் தாண்டி என்னுடைய நிறை என்ன என்பதை நான் அறிந்து கொண்டேன்! எனவே நான் நானாகவே இருக்கிறேன்,' என்று கூறியது.
காகத்தின் மனமாற்றத்தை கண்ட துறவி அதனை மனதார வாழ்த்தினார்!
எனவே எத்தகைய சூழ்நிலையிலும் நாமும் நம்மிடம் உள்ள குறைகளைத் தாண்டி நம்முடைய நிறைகளை பார்த்து வாழ கற்றுக் கொண்டோமானால், இந்த உலகத்திலேயே மகிழ்ச்சி நிறைந்த மனிதர்களாக நிச்சயம் நாம் தான் இருப்போம்! உண்மைதானே குட்டீஸ்?