

பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சி நகரம் அருகில் ஒரு அழகிய வனம் இருந்தது; அதன் பெயர் வசந்த வனம். இந்த வசந்த வனத்தின் மத்தியில் அரச மரம் ஒன்று வானளாவி நின்று கொண்டிருந்தது. அதில் ஒரு அணில் குடும்பமும், ஒரு கிளி குடும்பமும் பக்கத்து பக்கத்து பொந்துகளில் வாழ்ந்து வந்தன.
அரச மரத்தின் அரவணைப்பில் அமைதியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில், நஞ்சப்பன் என்ற ஒரு நயவஞ்சக நாகம் புகுந்தது. பாவம்! கிளி பொம்முவும், அணில் அம்முவும் நிம்மதி இழந்து தவிக்க ஆரம்பித்தன.
அணில் அம்முவுக்கு இரண்டு குஞ்சுகள்; கிளி பொம்முவுக்கு 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' என்று ஒரே ஒரு குஞ்சு. நஞ்சப்பனின் கரு நெருப்புக் கண்கள் அவைகள் மேல் பட்டால் என்னாவது என்று அணிலும் கிளியும் மன உளைச்சலில் ஆழ்ந்தன.
"ஐந்தடி நீளமும், இரண்டாக பிளந்த ஐந்தங்குல நாக்கும் கொண்ட இந்த நாகத்திடமிருந்து எப்படி நாம் தப்பிப்பது?"
என்று யோசித்து யோசித்து சோர்ந்து போனது கிளி. அணில் சொன்னது: "நமக்கு வேறு வழி இல்லை; இங்கிருந்து கூட்டை காலி செய்து வேறு ஜாகைக்கு போக வேண்டியதுதான்."
கிளிக்கோ அந்த ரம்யமான இடத்தை விட்டுப் போக சிறிதும் மனம் இல்லை. "நாம் இங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்கிறோம். நேற்று வந்த இந்த நஞ்சப்பன் நம்மை எப்படி விரட்ட அனுமதிக்க முடியும்?" என்று புலம்பியது.
அப்போது, "கவலைப்பட வேண்டாம், நான் ஒரு உபாயம் சொல்கிறேன்; கேட்பீர்களா?" என்ற குரல் அவர்கள் தலைக்கு மேல் இருந்த கிளையிலிருந்து வந்தது. அந்த குரலுக்குச் சொந்தக்காரன் வேறு யாருமில்லை; குணா என்ற குரங்கு.
"மை டியர் அணிப்பிள்ளை மற்றும் கிளிப்பிள்ளை! உங்களுக்கு உதவ இன்னொரு 'பிள்ளை' இருக்கிறான். அவனைப் பார்த்தாலே வேர்க்காத பாம்பே இல்லை!" என்றான் குணா.
"இன்னொரு பிள்ளையா? புரியவில்லையே, யார் அது?" என்று கேட்டது கிளி பொம்மு.
"அவன்தான் கீரிப்பிள்ளை கிங்கரன். அவன் 'மம்பா'வுக்கே மாவுக்கட்டு போடுபவன்! இந்த கருநாகம் அவனுக்கு ஒரு துக்கடா. கண் இமைக்கும் நேரத்தில் கடித்துக் கண்டதுண்டமாகப் போட்டுவிடுவான். நீங்களும் பிள்ளை, அவனும் பிள்ளை; உங்களுக்கு உதவ மறுக்க மாட்டான். அவன் அருகில் உள்ள மாங்காமலை அடிவாரத்தில்தான் வசிக்கிறான். போய் அவனிடம் கேளுங்கள், உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்."
அன்றே அணிப்பிள்ளை அம்முவும், கிளிப்பிள்ளை பொம்முவும் கீரிப்பிள்ளை கிங்கரனைப் பார்க்கப் போனார்கள். "நான் இருக்கிறேன்; நாளை அந்த நாகன் இருக்கமாட்டான்!" என்று சொல்லி அனுப்பினான் கிங்கரன்.
மறுநாளே அரச மரத்தடியில் துவங்கியது மல்யுத்தம்! நாகம் நஞ்சப்பன் கண்களில் தீப்பொறி பறக்க, 'சீரோ சீர்' என்று சீறினான். கீரியோ 'ப்ரூஸ் லீ'யாகவே மாறினான். சண்டையைப் பார்க்க நாலா பக்கத்திலிருந்தும் பறவைகள் மரத்தில் வந்து கூடின.
அரை மணி நேரம் நடந்தது பல்யுத்தம்! வென்றது கீரி; நின்றது சொட்டச் சொட்ட வாயிலிருந்து ரத்தம் — அது நஞ்சப்பனின் ரத்தம்!
"கிங்கரன் கீரியே, நீடூடி நீ வாழி!" என்று அம்முவும் பொம்முவும் தங்கள் குடும்பத்தோடு ஒன்று கூடி வாழ்த்தின.