
அழகான ஒரு கிராமம். அதில் கிளியும், நாயும் மிகவும் சிறந்த நண்பர்களாக வலம் வந்தன. நாய் எப்பொழுதும் தன் முதுகில் கிளியை சவாரி ஏற்றுக்கொண்டு தான் திரியும். மரங்களில் இருந்து பறித்த சுவையான பழங்களை கிளி நாயுடன் பகிர்ந்து கொள்ளும். இப்படி கிளியும் நாயும் சிறந்த நண்பர்களாக அந்த கிராமத்தில் சுற்றி திரிந்தன. ஒரு நாள் கிளிக்கு பக்கத்தில் உள்ள ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதை நாயிடம் தெரிவிக்க அதுவும் இன்றே புறப்படலாம் என்று கூறி கிளியை முதுகில் ஏற்றிக்கொண்டு சென்றது. இரண்டும் சந்தோஷமாக ஊரை சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும் பொழுது இரவு ஆயிற்று. எனவே இரவில் அடர்ந்த அந்த காட்டுப் பகுதியில் தங்க முடிவு செய்து பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு இடத்தை தேடியது. அப்பொழுது பெரிய மரம் ஒன்று கண்ணில் பட அந்த மரத்தில் இருக்கிற கிளையில் கிளி சென்று அமர்ந்து கொண்டது. மரத்திற்கு பின்புறம் உள்ள ஒரு பெரிய பொந்தில் நாயும் தங்கியது.
விடியற்காலையில் காலைப் பொழுது விடிந்ததும் கிளியின் கண்களுக்கு அந்த மரத்திலிருந்த பலவிதமான சுவை தரும் பழங்களைக் கண்டதும் குஷி ஏற்பட்டது. குஷியில் வாய்விட்டு சத்தம் போட்டு பேசியது. கிளி பேசியதைக் கேட்டதும் அந்தப்புறமாகச் சென்ற நரிக்கு ஒரே சந்தோஷம். இன்று நமக்கு மிகவும் ருசியான இறைச்சி கிடைக்கப் போகிறது என்று எண்ணியது. கிளியிடம் நயவஞ்சகமாக "எங்கள் காட்டுப் பகுதிக்கு உன்னை வரவேற்கிறோம். கீழே இறங்கி வா நாம் நண்பர்களாக இருப்போம்" என்று கூற நரியின் குணம் தெரிந்த கிளியோ "என்னால் இந்த மரக்கிளையை விட்டு கீழே இறங்கி வர முடியாது. நீ வேண்டுமானால் மேலே வா. இங்கு மரத்தில் ஏறுவதற்கு ஈஸியான பாதை இருக்கிறது. அந்த வழியாக வா" என்று நாய் இருக்கும் பக்கத்தை காட்டியது. நரியும் ஆசையுடன் அந்த வழியாக மேலே செல்ல முயற்சிக்க அங்கிருந்த நாய் நரியை சத்தம் போட்டு ஊளையிட்டு, கடித்து விரட்டியது.
அதன் பிறகு கிளியும் நாயும் ஜாலியாக ஒன்றுக்கொன்று துணையாக ஊரை சுற்றி பார்த்தது. திரும்பி வரும் வழியில் கிளி நாய்க்கு நன்றியை சொல்லி முதுகில் ஒய்யாரமாக உட்கார்ந்து வந்தது.
நீதி: இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் குட்டீஸ்? புத்திசாலியாக இருந்தால் எந்த பிரச்சனை வந்தாலும் ஈசியாக சமாளித்து விடலாம்.