சிறுவர் சிறுகதை: மரம் சிம்மாசனமாகி சிம்மாசனம் சின்னாபின்னமாகி...

Tamil Short Story - The tree becomes a throne, and the throne crumbles into pieces...
Wooden Throne and Two princes fight
Published on

பசுமை நிறைந்த பர்வதபுரம் என்ற கிராமத்தில் தேசிகன் என்ற பிரபலமான தச்சன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு வருணன் என்ற மகன் இருந்தான்.

வருணன் வித்தியாசமானவன். அப்பா தனது தொழிலுக்கு மரங்களை வெட்டுவார். மகன் வருணனோ அதற்கு நேர்மாறானவன். மரங்களை வெட்டுவது அறவே பிடிக்காது.

மரங்களை உயிருக்கு உயிராக நேசிப்பவன். அவற்றோடு உணர்வுபூர்வமாக பேசுபவன். நாள்தோறும் செடிகொடிகள் மரங்களோடு உரையாடுவான்.

பாதையில் காணும் ஏதேனும் ஒரு மரத்தைக் கண்டாலே நின்று ”ஏ மரமே! பயப்படாதே! நான் என் தந்தையைப் போல உன்னை வெட்ட வரவில்லை. நான் உங்களைப் பாதுகாப்பவன்” என ஆறுதலாய் பேசுவான்.

இவ்வாறு பேசுவதைக் கண்ட மக்கள் “அவனுக்கு புத்தி பேதலித்து விட்டது. மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்” என்று அவனது தந்தையிடம் சொல்வார்கள். அதை அவன் பொருட்படுத்த மாட்டான்.

சிறிது காலம் சென்றவுடன் தச்சன் தேசிகனுக்கு வயது முதிர்வால் தள்ளாமை ஏற்பட்டது. மகனைக் கூப்பிட்டு ”வருணா! இனிமேல் நீதான் தச்சு தொழில் செய்ய வேண்டும்” என்றார்.

அதிர்ச்சியானான் வருணன்! "தச்சுத் தொழில் செய்ய வேண்டுமா? அப்படியானால் மரம் வெட்ட வேண்டுமே! அது நமது கொள்கைக்கு மாறானதே!” என்று கவலையில் ஆழ்ந்தான்.

இக்கட்டான சூழ்நிலையில் யோசித்தவாறே தந்தையின் சொல்லைத் தட்ட இயலாமல் கோடரியோடு காட்டிற்குள் நுழைந்தான்.

வருணன் கோடரியோடு வருவதைப் பார்த்ததும்… மரங்கள் பதறின. அவற்றின் கிளைகள் அதிர்ச்சியால் ஆடாமல் அப்படியே உறைந்தன. பூக்கள் வாடிப் போயின.

புரிந்து கொண்டான் வருணன். ”மரங்களே! உங்களை வெட்ட மாட்டேன். தச்சு தொழிலுக்கு மாற்றாக வேறு ஏதேனும் தொழில் செய்ய முடியுமா? என யோசிக்கிறேன். கவலைப்படாதீர்கள்!” என ஆறுதல் படுத்தினான்.

மரங்களின் கிளைகள் ஆனந்தத்தில் ஆடின. பூக்கள் எல்லாம் அவன் மேல் விழுந்து தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தின.

”அப்பாடா!" என்று சந்தோஷத்தில் இருக்கும் போது தூரத்தில் ஒரு குரல் கேட்டது.

”பாலகா! என் அருகே வா! என் வாழ்க்கையே வெறுத்து போய் விட்டது. இந்த காட்டில் பத்தோடு ஒன்றாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆகையால் என்னை வெட்டி எடுத்து இந்த நாட்டு மன்னனுக்கு பயன்படும் வகையில் சிம்மாசனமாக மாற்றி செய்து கொள்” என்றது ஒரு மரம்.

வருணனுக்கு ஆச்சர்யத்தோடு அதிர்ச்சியும் ஏற்பட்டது. "மனிதர்களுக்குள்தான் வித்தியாசமானவர்கள் இருப்பார்கள் என்று இதுவரை நினைத்தோம். மரங்களுக்குள்ளும் ஒரு வித்தியாசமான சிந்தனைப் படைத்த ஒரு மரம் இருக்கிறதே!" என்று நினைத்து கொண்டான்.

”வேண்டாம் மரமே! ஒன் கோரிக்கையை நான் ஏற்க போவதில்லை” என்றான்.

”இல்லை! தாராளமாக வெட்டிக் கொள்” என்றது.

”மரமே! நீ மரமாக இயற்கையோடு ஒன்றியிருக்கும் வரையில்தான் மதிப்பு. மக்கள் சுவாசிக்க இயற்கையான காற்றைத் தருகிறாய். நல்ல மணமுள்ள மலர்களைத் தருகிறாய். மழைப் பெய்வதற்கு பேருதவியாக இருக்கிறாய். இவ்வளவு நண்மைகள் தரும் உன்னை நான் வெட்டப் போவதில்லை” என்றான் வருணன்.

மரமோ விடாப்பிடியாக, பிடிவாதமாக ”என்னை வெட்டு!” என்று கிளையைத் தாழ்த்தியது.

”மீண்டும் சொல்கிறேன். நீ பொதுவில் இருக்கிறாய். ஆதலால் எல்லா மக்களும் பயனடைகிறார்கள். சிம்மாசனமாக மாறி மன்னரின் அரசவைக்கு நீ சென்றால்… சுயநலத்திற்கு ஆளாவாய்… அரசவைக்குள் ஆயிரம் பூசல்கள் இருக்கும். அதற்குள் சிக்கி விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் சொல்கிறேன். என்னை வற்புறுத்தாதே!” என்று விலகினான்.

மரம் மீண்டும் அவனிடம் ”என்னை வெட்டு சிம்மாசனம் செய்” என்று குரல் கொடுத்தது.

கவலையோடு அரைமனதோடு மரத்தை வெட்டினான் வருணன். சிறு பலகைகளாகவும், துண்டுகளாகவும் போட்டான். வீட்டிற்கு கொண்டு வந்தான்.

காட்டில் நடந்த அத்தனை விபரத்தையும் தந்தையிடம் சொன்னான்.

தந்தையோ! ”மரத்தின் ஆசை அப்படியென்றால் தாராளமாக சிம்மாசனமாக செய்து விடு! அதை இந்த நாட்டு மன்னருக்கு அனுப்பி வைத்தால் நமக்கும் பரிசுகள் கிடைக்கும்” என்றார்.

மரத்தின் ஆசையும் தந்தையின் யோசனையும்… அவனை சிம்மாசனம் செய்ய வைத்தன.

அழகிய சிம்மாசனம் உருவாகியது. பார்க்கவே கம்பீரமாக காட்சியளித்தது. சிம்மாசனம் தனக்குத்தானே ”ஹா ஹா ஹா” என சந்தோஷத்தில் சிரித்து மகிழ்ந்தது.

சிம்மாசனத்தைப் பார்த்து… ”இப்பொழுதும் உன்னை மரமாகத்தான் பார்க்கிறேன். நீ அதிக சந்தோஷத்தில் உன் நிலை என்னவென புரியாமல் தடுமாறுகிறாய். இது நிலையானதல்ல!” என்று அறிவுரைக் கூறினான்.

மரமாக இருந்த போது ஏற்காத அறிவுரையை சிம்மாசமான மாறிய பிறகு ஏற்கவா போகிறது? சிம்மாசனமாக மாறிய பிறகு இன்னும் கூடுதலாகவே தலையில் கனத்தை ஏற்றிக் கொண்டு வருணனின் அறிவுரையைக் காதிலேயே வாங்கவில்லை.

இதையும் படியுங்கள்:
பரீட்சைக்கு நேரமாச்சு... பதற்றம் வேண்டாம். இதோ பயனுள்ள டிப்ஸ்...
Tamil Short Story - The tree becomes a throne, and the throne crumbles into pieces...

சிம்மாசனத்தின் அழகும் நேர்த்தியும்… அரண்மனைக் காவலர்கள் மூலமாக அந்த நாட்டு மன்னருக்கு தெரிவிக்கபட்டது.

மன்னர் ”அந்த அழகு சிம்மாசனம் நம் அரசவையில் அல்லவா இருக்க வேண்டும். ஏழைத் தச்சன் வீட்டிலா இருப்பது. உடனே கொண்டு வரச் செய்யுங்கள். அவர்களுக்கு தேவையான சன்மானத்தை அளித்து விடலாம்,” என ஆணையிட்டார்.

சிம்மாசனம் சகல மரியாதையோடு அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணியாளர்கள் கொண்டு செல்லும் போது அவை ஆடி ஆடி சென்றது வருணனுக்கு அவை கர்வத்தில் ஆடுவதாகவே மனதில் பட்டது.

சிம்மாசனம் அரசவைக்கு வந்த நேரமும் இளவரசனுக்கு பட்டாபிஷேக காலமும் ஒன்றாக கூடி வந்தது.

நாள் குறிக்கப்பட்டது. அண்டை நாட்டு மன்னர்களுக்கு அழைப்பு அனுப்பினார்கள். சிம்மாசனம் செய்தவர் என்ற வகையில் வருணனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

தச்சர் தேசிகன்.. ”மகனே நீதான் சிம்மாசனம் தயார் செய்தாய். ஆகவே நீ கலந்து கொள்வதுதான் சிறப்பு” என்று மகனை வழியனுப்பினார்.

பிரம்மாண்டமான ஏற்பாடுகள் யானைகள் பவனி ஒருபுறம், குதிரைகள், போர் வீரர்கள், நடன நிகழ்ச்சி என ஆர்ப்பாட்டமாக பட்டாபிஷேக விழா நடைபெற ஆரம்பித்தது.

இளவரசனுக்கு இன்னும் சற்று நேரத்தில் முடிசூட்டும் வைபவம் என அரசவை குரு அறிவிக்கும் நேரம். எதிர்பாரா சம்பவம் நடந்தேறியது.

இதையும் படியுங்கள்:
சந்திரனுக்கு கணபதி கொடுத்த சாபம்!
Tamil Short Story - The tree becomes a throne, and the throne crumbles into pieces...

”இளவரசே! நீ முடிசுட்டிக் கொள்ள முடியாது. இந்த சிம்மாசனம் எனக்குத்தான் பொருத்தம். முடிந்தால் மோதிப் பார்” என வாளோடு கொக்கரித்தான் மந்திரி மகன்.

மன்னர் உட்பட அனைவரும் திகைத்தனர்.

”இளவரசே! வாட் போர் செய்யலாமா? மல்யுத்தம் செய்யலாமா? நான் தயார். வெல்பவர் எவரோ அவரே இந்த சிம்மாசனத்தில் அமரலாம்” என சவால் விட்டான்.

முதலில் வாட் போர் நடந்தது. இளவரசன் வெற்றி பெற்றான். இது போதாது. மல்யுத்தத்திலும் வென்றாக வேண்டும். “வா! மல்யுத்தம் செய்” என அழைத்தான்.

மல்யுத்தம் உச்சத்திற்கு சென்றது. ஒரு கட்டத்தில் இளவரசன் வென்று விடுவானோ என்ற பயத்தில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற மந்திரி மகன் ஆவேசமாக சிம்மாசனத்தைத் தூக்கி இளவரசன் மேல் எறிந்தான்.

இலாகவமாக இளவரசன் தப்பினான்.

”ஏ மரமே! நீ பொதுவாக இருக்கும் பொழுதுதான் மரியாதை அதிகம். சுயநலத்துடன் தனி நபருக்கு சொந்தமானால் பாதிப்புதான் அதிகமாகுமே தவிர பலன் கிடையாது...” - வருணன் ஏற்கனவே கூறிய அறிவுரைகள் சின்னாபின்னமான சிம்மாசனத்தின் காதுகளில் எதிரொலித்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com