குட்டீஸ் கதை: அடடா! எவ்வளவு அழகு! எத்தனை அழகு

ஓவியம்: பிரபுராம்
ஓவியம்: பிரபுராம்
Published on

கதை: சரிதா ஜோ

ங்கள் வீட்டில் இருந்து வெகு தூரம் சென்ற மானு தேன்பூச்சிக்கும் மீனு தேன்பூச்சிக்கும்  அன்று எங்கே தேடியும் தேனே கிடைக்கவில்லை.

வழியில் ஒரு கொடியில் இருந்த இலையில் தனது உடம்பை பாதி வளைத்து சோபாவில் உட்கார்ந்து இருப்பதுபோல் உட்கார்ந்துகொண்டருந்த புழு புதியன்  "அடடா என்ன அழகு எத்தனை அழகு அழகு" என்று வானத்தைப் பார்த்து பாடிக்கொண்டிருந்தது.

"எங்கே அழகு? எதைச்  சொல்கிறீர்கள்?" என்று  கேட்டது மானு. 

"அதோ!  மேலே தெரிகிறது பார் வானம். அந்த வானத்தில் இன்று மேகங்கள் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அடடா கண்கொள்ளாக் காட்சியாக அல்லவா இருக்கிறது!"  என்று வானத்திலிருந்து கண்ணை எடுக்காமல் பேசிக்கொண்டிருந்தது புதியன்.

"வானமா அது எங்கு இருக்கிறது? நான் இதுவரை பார்த்ததில்லையே.”  புழுவை சுற்றிச் சுற்றி பறந்துகொண்டே தலையை உயர்த்திப் பார்த்து  “அது பறவையா? விலங்கா?" என்று கேட்டது மீனு.

"யாரது? அட தேன்பூச்சிகளா… பறந்து திரியற உங்களுக்கு வானம் தெரியாதா?  அதோ அண்ணாந்து பாரு மேலே தெரிகிறதே அதுதான் வானம். அதில்  வெள்ளை நிறத்தில் விதவிதமான வடிவங்களில் ஓடிக்கொண்டு இருக்கின்றனவே அவைதான் மேகம்" என்றது புழு புதியன்.

உடனே மானுவும் மீனுவும் பயந்தபடியே அண்ணாந்து வானத்தைப் பார்த்தன. “அடடா எவ்வளவு அழகு. நான் வாழ்க்கையில் இது போன்ற ஒரு காட்சியைப் பார்த்ததே இல்லையே" என்றன.

"அட என்னப்பா இப்படிச் சொல்லறீங்க. வானத்தைப் பார்க்காத ஒரு உயிரியா?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டது புழு புதியன்.

"ஆமாம் எங்களுக்கு தெரிந்ததெல்லாம் எங்காவது பூக்கள் இருந்தால், தேன் எடுத்துச் சென்று கூட்டில் வைப்பது. இதை மட்டும்தான் காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர  எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது" என்றது மீனு.

"ஷ்... அமைதியாக இருங்கள். எவ்வளவு ஒரு மென்மையான குயிலின் பாடல் கேட்கிறது.  கூடவே ஆறுகளின் சலசலப்பு" என்றது புதியன்.

பறந்துகொண்டிருந்த மானுவும் மீனுவும் சற்று நேரம் அமைதியாக புதியனுக்கு அருகில் இருந்த கிளையில் அமர்ந்து குயிலின் பாடலையும் ஆறுகளின் சலசலப்பையும் ரசித்தன. 

"அடடே! எவ்வளவு அருமையான பாடல். எவ்வளவு அழகான தாளம். இதே காட்டுக்குள்தான் இவ்வளவு நாட்களாக பறந்து திரிந்தோம்.  இதையும் நாங்கள் ஒரு முறைகூட கேட்டதில்லையே!" என்று பக்கத்தில் இருந்த பூவைச் சுற்றிச்சுற்றி வந்து பூவின் நடுவில் அமர்ந்து தேனை உறிஞ்சியபடியே கூறியது  மானு.

"அடக்கடவுளே! நீங்கள் இருக்கும் காடு எவ்வளவு அழகானது என்று உங்களுக்கே  தெரியாதா?  சுற்றிலும் எத்தனை  மரங்கள், எத்தனை பறவைகள், 

எத்தனை விலங்குகள்,  எத்தனை  பாடல்கள்,  எத்தனை  அருவிகளின் ஆறுகளின் தாளங்கள்!  இவ்வளவு அருமையான காட்டில் இருந்துகொண்டு நீங்கள் எதையுமே ரசித்ததில்லையா!" என்று ஆச்சரியத்தோடு கேட்டது புழு புதியன்.

"நீங்கள் சொல்வது எதுவுமே எங்களுக்குத் தெரியாது. என்னது ரசிப்பதா? அப்படி என்றால் என்ன?" என்று கேட்டது மீனு.

"வானத்தை உங்களுக்குக் காட்டியபொழுது, அதைப் பார்த்தவுடன் உங்களுக்கு இவ்வளவு அழகாக இருக்கிறதே என்று தோன்றியதல்லவா, அதைப் பார்த்துக்கொண்டே இருக்கும்பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அதை நீங்கள் அனுபவித்ததே இல்லையா?" என்று கேட்டது புதியன்.

இதையும் படியுங்கள்:
பட்டாசு வெடிப்பு; கண்கள் பாதுகாப்பு… என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?
ஓவியம்: பிரபுராம்

மானு அங்கிருந்த கொடியை சுற்றிச்சுற்றிப் பறக்க ஆரம்பித்தது. 

"பகலை விட இரவில் இன்னும் வானம் எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? என்றது புதியன்.

"அப்படியா! நாங்கள் இதையெல்லாம் எப்படிப் பார்க்காமலேயே இருந்து விட்டோமே" என்று ஆதங்கப்பட்டது மீனு.

"உங்களுடைய உழைப்பும் சுறுசுறுப்பும் யாருக்கும் வராது. ஆனால், அதே சமயம் சுற்றி இருப்பதை ரசிக்க வேண்டும். பொறுமையாக அமர்ந்து சிலவற்றைக் கவனிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது உணவுக்காக காட்டை சுற்றாமல் அழகை ரசிக்கக் காட்டை சுற்றி வாருங்கள்" என்று கூறியது புதியன்.

"அடடே இது நன்றாக இருக்கிறதே" என்று கூறிக்கொண்டிருக்கும்பொழுதே இருட்ட ஆரம்பித்து வானில் நட்சத்திரங்களும் நிலாவும் தோன்ற ஆரம்பித்தன.

"அதோ மேலே பாருங்கள் நிலாவும் நட்சத்திரங்களும் வந்துவிட்டன. வானம்  பேரழகு பெற்று, காட்டை இன்னும் அழகாக்குகிறது" என்றது புதியன்.

மேலே பார்த்த மானுவும் மீனுவும் இரவு நேர அழகை பார்த்து அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து நின்றன.

"வேலை வேலை என்றுதான் ஓடிக்கொண்டிருந்தோம். ஒரு நாளும் நாங்கள் வானத்தைப் பார்த்ததில்லை.  நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்ததில்லை. செடிகளைப் பார்த்ததில்லை. அருவியைப் பார்த்ததில்லை. பறவைகளைப் பார்த்ததில்லை. விலங்குகளைப் பார்த்ததில்லை. இனிமேல் கண்டிப்பாக ஓடும் ஓட்டத்திற்கு இடையே அத்தனையும் ரசிப்போம்" என்று கூறி மானுவும் மீனுவும் அங்கிருந்த பூக்களில் இருந்த தேனை உறிஞ்சி  வானத்தின் அழகை பார்த்துக்கொண்டே பறந்து சென்றன.  வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் கண் சிமிட்டி சிரித்தன. அவை பறக்கின்ற அழகைப் பார்த்தபடியே இலைகளைக் கடித்தது புழு புதியன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com