
தீபாவளிக்குக் கம்பி மத்தாப்புகளைக் குட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி கொளுத்திக் காட்டுவோம். மற்ற வெடிக்கிற வெடியைக் கண்டு பயப்படுபவர்கள் கூட மத்தாப்புக் கண்டு அஞ்ச மாட்டார்கள். மத்தாப்புக் கொளுத்துவதால் நம் மனத்திலும் ஒரு சந்தோஷம் மத்தாப்பு போல் துளிர்விட்டு ஜொலிக்கும்.
வெடியே போடப் பயப்படுபவர்கள் கூட, சாஸ்திரத்திற்கு ஒரு மத்தாப்பாவது காட்ட வேண்டும் என்று மத்தாப்புக் கொளுத்தி மகிழ்வார்கள்.
கம்பி மத்தாப்பு தயாரிக்க அலுமினியப் பவுடர், பச்சை உப்பு, கந்தகம், செம்பு முலாமிட்ட கம்பி ஆகியவை தேவைப்படுகின்றன. மேற்கண்ட ரசாயனப் பொருட்களை ஒரு குழம்பு போலச் செய்து கொள்வார்கள். இந்தக் குழம்பு தண்ணீராகவும் இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் கம்பிகளில் ஒட்டிக் கொள்ளும் ஒருவித பதத்தில் இருக்கும்.
பிறகு கம்பிகளைத் தேவைக்கேற்ப வேண்டிய அளவுகளில் வெட்டி எடுத்து, ஒருவித ஃபிரேம்களில் பொருத்தி, இந்த மருந்து கலவையில் தோய்த்து எடுத்துக் காய வைப்பார்கள். அப்புறம் என்ன? வெயிலில் உலர்த்த இந்தக் கம்பி மத்தாப்புகளை அட்டைப் பெட்டியில் அடைத்து விடுவார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை கம்பி மத்தாப்புகளில் சுமார் முப்பதுக்கும் குறைவான ரகங்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது நூற்றியம்பது ரகங்களில் சிவகாசியில் உள்ள ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. ஐந்து சென்டிமீட்டர் நீளத்திலிருந்து எழுபத்தி ஐந்து சென்டிமீட்டர் உயரம் கொண்ட கம்பி மத்தாப்புகள் இப்பொழுது விற்பனையில் கிடைக்கிறது.
இந்த ஆண்டு அந்த கம்பி மத்தாப்புகளிலும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் உருவங்களைப் பொறித்த கம்பி மத்தாப்புகள் இருபதுக்கும் அதிகமான வடிவங்களில் விற்பனைக்கு வருகின்றனவாம். இந்தக் கம்பி மத்தாப்புகளைப் பயன்படுத்திய பிறகு, சிறுவர்கள் அந்த உருவங்களைச் சேகரித்து வைத்து விளையாடப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தயாரித்து உள்ளார்களாம். குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களின் உருவம் கொண்ட கம்பி மத்தாப்புகளை வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
என்ன குட்டீஸ்களே! தீபாவளிக்குக் கம்பி மத்தாப்புகளைப் புதிய ரகமாக வந்தவற்றை கேட்டு வாங்கி, கம்பி மத்தாப்புகளைக் கொளுத்தி மகிழுங்கள்.