பாம்பின் விஷத்தில் இருந்து தப்பிக்கும் கீரிப்பிள்ளை: எப்படி தெரியுமா?

Snake Vs Mongoose
Snake Vs Mongoose

கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்பட்டால், பாம்பைக் கொன்று தின்று விடும் கீரி. ஆனால் கீரிக்கு எதுவுமே ஆகாது. பாம்பின் விஷம் கீரியை ஏன் எதுவும் செய்யாது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

இரு எதிரெதிர் துருவங்களைக் கண்டாலோ, பகைவர்களைக் கண்டாலோ கீரிப்பிள்ளை பாம்பைத் தான் நாம் உதாரணமாக கூறுவோம். ஏனெனில் கீரிக்கும் பாம்பிற்கும் ஏழாம் பொருத்தம். இரண்டும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் சந்திக்கும் போது சண்டையிட்டுக் கொள்வது நிச்சயம்.

கீரிப்பிள்ளை இருக்கும் இடத்தில் பாம்பு இருக்காது என்று கிராமங்களில் சொல்லக் கேட்டிருப்போம் அல்லவா! இது கிட்டத்தட்ட உண்மை தான். கீரிப்பிள்ளைக்கும் பாம்புக்கும் சண்டை வந்தால் கீரிப்பிள்ளைக்குத் தான் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். ஏனென்றால் இதன் வேகம் பாம்பை விட அதிகம். மேலும் உடல் பலத்திலும் பாம்பைக் காட்டிலும் கீரிப்பிள்ளை சக்தி வாய்ந்தது. கீரிப்பிள்ளை தனது வலுவான தாடைகள் மற்றும் கூர்மையான பற்களைக் கொண்டு பாம்புகளின் தலையை நசுக்க முடியும். கீரிப்பிள்ளை பாம்பின் கழுத்தை முதலில் பிடிக்கும் போது, அப்பாம்பு செயலற்றுப் போகும் நிலை உருவாகிறது. கீரியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் பாம்பு இறுதியில் இறந்து விடுகிறது. ஒருவேளை கீரி பாம்பின் வாலைப் பிடித்தால் பாம்பு கீரியைத் தாக்க முற்படும். ஆனாலும் கூட கீரிக்கு பெரிதாக ஒன்றுமே ஆகாது.

பாம்புகள் யாரையாவது கடித்தால் அதனுடைய விஷம் உடல் முழுக்க பரவி பக்கவாதம் வந்து இறக்க நேரிடலாம். ஆனால், பாம்பைக் கொன்று தின்னும் கீரிக்கு பாம்பின் விஷத்தால் ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். ஆனால், கீரிக்கு ஒன்றேமே ஆவதில்லை‌. பாம்பின் விஷத்தை கீரி எப்படி முறியடிக்கிறது என்று தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வழி விடு மனிதா - இப்படிக்கு பாம்பு!
Snake Vs Mongoose

பாம்புகளின் விஷத்தில் இருக்கும் நச்சுப் பொருளுக்கு நியூரோடாக்சின் என்று பெயர். இது ஒருவரது நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்து பக்கவாதத்தை உண்டு பண்ணும். இந்நிலையில், உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே பாம்புக் கடியில் இருந்து உயிர் பிழைக்க முடியும். ஆனால் கீரிக்கு எந்தவித சிகிச்சையும் தேவைப்படாது! ஏனெனில், இயற்கையாகவே கீரியிடம் அசிட்டைல் கொலின் ஏற்பி எனும் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது. இந்த ஏற்பி எப்பேற்பட்ட விஷத்தையுயம் முறியடிக்கும் தன்மையைக் கொண்டது.

பாம்பு மட்டுமல்ல வேறு ஏதேனும் விஷ ஜந்துகள் கீரியைக் கடித்தால் கூட அதன் விஷம் இதுனுடைய உடலில் முறியடிக்கப்படும். அதாவது விஷம் நரம்புகள் மற்றும் தசைகளில் கலப்பதை அசிட்டைல் கொலின் ஏற்பி தடுத்து கீரியைப் பாதுகாக்கிறது!

ஆச்சரியமாக இருக்கிறதா குட்டீஸ்? விலங்குகளின் உலகில் இது போன்று இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com