காவிரியில் வெள்ளம் வருவதற்கு சுமார் ஒரு மாதம் முன்பிருந்தே அக்கோ! அக்கோ! என்று கத்தும் ஒரு பறவையின் ஒலி கேட்க தொடங்கிவிடும். இது பற்றிய சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது.
கோடையில் நீரோட்டம் இன்றி காவிரியில் மணல் காய்ந்து கொண்டிருக்கும். அச்சுடு மணலில் தேங்காய் கீற்று வற்றல் மிளகாய் போன்ற பொருட்களை உலர்த்தி காய வைப்பார்கள். மாலையில் அவற்றின் சிதறல்களை பொறுக்கி தின்ன பறவைகள் வரும் அக்காளும் தங்கையுமான இரண்டு குருவிகள்.
ஒரு நாள் மாலை நேரத்தில் காவிரி மணலில் உதிர்ந்தவற்றை பொறுக்கி தின்று கொண்டிருந்தன அப்போது காவிரியில் திடீரென்று வெள்ளம் வந்துவிட்டது வெள்ளத்தை கண்ட தங்கை குருவி விர்ரென்று பறந்து சென்று அருகில் இருந்த மரத்தின் மீது அமர்ந்து விட்டது. உணவுப் பொருட்களை பொறுக்குவதில் கவனமாக இருந்த அக்காள் குருவியை வெள்ளமடித்து சென்று விட்டது. அதை கண்ட தங்கை குருவி அக்கோ அக்கோ என்று கத்தியது. ஆனால் பயன் இல்லை. அக்காள் குருவி வெள்ளத்தில் சிக்கி இறந்துவிட்டது.
வெகுளியான தங்கை குருவி வெள்ளம் தணிந்தால் அக்காள் வந்துவிடுவாள் என்று எண்ணியது. ஆனால் அக்காள் வரவில்லை. புதுவெள்ளம்தானே அழைத்துச் சென்றது. அந்த வெள்ளம் மீண்டும் திரும்பி வரும்போது அக்காளை அழைத்து வந்துவிடும் என்று நம்பியது. அதனால் வெள்ளம் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே காவிரி ஆற்றின் கரையில் உட்கார்ந்து அக்கோ! அக்கோ! என ஆண்டுதோறும் அழைத்தபடியே இருக்கிறது.
ஆனால் அக்கா குருவிதான் இன்னும் வந்த பாடில்லை. இப்போதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் அந்த குருவியின் குரலை கேட்கலாம் என்கிறார்கள் அந்த பகுதியில் வாழும் மக்கள்.