மிகவும் ஆபத்தான விலங்காகத் திகழும் நீர்யானையை மற்ற விலங்குகள் நெருங்குவதற்கு கூட விரும்புவதில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை விளக்கிக் கூறுகிறது இந்தப் பதிவு.
காட்டில் வாழும் விலங்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியான குணங்களைக் கொண்டுள்ளன. மான் போன்ற சில விலங்குகள் அமைதியாக இருக்கும். புலி மற்றும் சிங்கம் போன்ற விலங்குகள் எப்போதும் ஒருவித ஆக்ரோஷத்துடனேயே இருக்கும். ஆனால் அவற்றைவிட மிக ஆக்ரோஷமான விலங்கு என்றால் அது நீர்யானை தான். இதற்கு முக்கிய காரணம் இதனுடைய அதிக எடை தான். மற்ற விலங்குகளைப் போல் நீர்யானை இறைச்சியை உண்ணாது. ஏனென்றால் இது ஒரு தாவர வகை விலங்கு.
நீர்யானைகள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் குட்டியை ஈனும். குட்டியை ஈனுவதும், பாலூட்டுவதும் தண்ணீரில் தான். பொதுவாக நீர்யானைக் குட்டிகள் அனைத்தும் நீருக்கு உள்ளேயே பிறப்பதால், தனது முதல் மூச்சுக்காக நீரில் இருந்து மேலே வருகிறது. தனது வாழ்நாளில் பாதி நாட்களை நீரிலேயே கழித்தாலும் நீந்தத் தெரியாத விலங்கு இது. நீரில் இருக்கும் தாவர உண்ணிகளையும், நிலத்தில் இருக்கும் புல் உள்ளிட்ட தாவரங்களையும் உண்ணும். யானைக்கு அடுத்தபடியாக நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு நீர்யானை.
பொதுவாக முதலைகள், மற்ற விலங்குகளைத் தாக்கும் வல்லமை படைத்தவை. இருப்பினும் நீர்யானைகளைக் கண்டால் மட்டும் தாக்குதலைத் தொடுக்காமல் சற்று பின்வாங்கி விடும். ஏனென்றால் நீர்யானையை விடவும் முதலை பலமானது அல்ல. ஆக்ரோஷமான நீர்யானையின் எடை சுமார் 1,800 கிலோ. இதன் உயரம் 1.6மீ. நீர்யானைகள் 180 டிகிரி கோண அளவில் வாயைத் திறக்கும் திறன் பெற்றுள்ளன. மேலும் இதன் கடிக்கும் திறன் ஒரு சதுர அங்குலத்திற்கு 2,000 பவுண்டுகள் ஆகும். நீர்யானையின் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 50 ஆண்டுகள். இவை கூட்டமாக வாழக் கூடியவை என்பதால் ஒரு கூட்டத்தில் குறைந்தபட்சம் 40 நீர்யானைகள் இருக்கும்.
முதலையின் கடிக்கும் திறனும் அதிகம் தான். ஆனால் நீர்யானையின் திறனை விடக் குறைவு. அதையும் மீறித் தாக்கினால் நீர்யானை முதலையைக் கடித்துக் கொன்று விடும். ஒரு விதத்தில் முதலை மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு தான். ஏனெனில் பெரிய நீர்யானைகளைத் தாக்காமல், வலிமை குறைந்த குட்டி நீர்யானைகளைத் தாக்கி விடும். மேலும், இறந்த நீர்யானைகளின் இறைச்சியை உண்ணும்.
உலகில் உள்ள விலங்குகளில் மிகவும் ஆபத்தான விலங்கு நீர்யானை. முதலை மட்டுமின்றி சிங்கம் மற்றும் புலி போன்ற பெரிய விலங்குகள் கூட நீர்யானையைத் தாக்க விரும்புவதில்லை.
பொதுவாக மற்ற விலங்குகளையோ அல்லது மனிதர்களையோ தானாகச் சென்று நீர்யானைகள் தாக்குவதில்லை. ஆனால் இதன் வழியில் யாரேனும் குறுக்கிட்டால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கி விடும்.