செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 11!

தமிழ் இலக்கணத்தில் ஆகுபெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகளுடன் எளிய விளக்கம்.
ஆகுபெயர் |A grandmother teach tamil to her granddaughter
ஆகுபெயர் | MetonymyImage credit: AI Image
Updated on

முல்லை பள்ளி விட்டு வீட்டுக்கு வந்து வீட்டுப் பாடங்களைச் செய்து கொண்டிருந்தாள். அவளுடையப் பாட்டி இலட்சுமி அவளிடம் பேசத் தொடங்கினார். 

“முல்லை உனக்கு இன்றைக்கு என்ன வீட்டுப் பாடம் கொடுத்தாங்க!”

“ஆகுபெயர் என்ற தலைப்பில் ஒரு இலக்கணம் நடத்தினார்கள் பாட்டி. எனக்கு இது மிகவும் கடினமாக இருக்கிறது! இது எப்படி புரிந்து கொள்வது என்றே எனக்கு தெரியவில்லை!”

“ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நான் உனக்குச் சொல்லித் தருகிறேன்!”

“நான் தமிழாசிரியராக இருந்தபோது மாணவர்களுக்கு ஆகுபெயர் எளிமையாகப் புரிய வைத்து நடத்துவேன்”

“சரிங்க பாட்டி எனக்கு சொல்லித்தாங்க!”

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  முதல் மதிப்பெண் பெற்ற உமாவை இந்த ஊரே பாராட்டியது”

“ஆடுகளைத் திருடிய செல்லப்பனை ஊரே வசை பாடியது”

“முல்லை இந்த இரண்டு வாக்கியத்தில் என்ன புரிகிறது?”

“பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற உமாவை ஊர் பாராட்டியது”

"ஆடுகளை திருடிய செல்லப்பாவை ஊரே திட்டியது”

“நீ சரியான விடையை இன்னும் கூறவில்லை!”

“முதல் மதிப்பெண் பெற்ற உமாவை இந்த ஊர் மக்கள் பாராட்டினார்கள்”

“ஆடுகளைத் திருடிய செல்லப்பனை ஊர் மக்கள் இகழ்ந்தார்கள்”

இவைதான் விரிவான பொருளாகும். 

இவ்வாறு ஊர் என்னும் பெயர் ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது. இவ்வாறு ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். இந்த ஆகுபெயர் பதினாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை மற்றும் உனக்கு நான் சொல்லித் தருகிறேன்.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 10!
ஆகுபெயர் |A grandmother teach tamil to her granddaughter

1. பொருளாகுபெயர் (முதலாகுபெயர்):

எ.கா - முல்லையைத் தொடுத்தாள். முல்லையென்னும் முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.

2. இடவாகுபெயர்:

எ.கா -  வகுப்பறை சிரித்தது. வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.

3. காலவாகுபெயர்:

எ.கா - கார் அறுத்தான். கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.

4. சினையாகுபெயர்:

எ.கா - மருக்கொழுந்து நட்டான். மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.

5. பண்பாகுபெயர்:

எ.கா - மஞ்சள் பூசினாள். மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.

6. தொழிலாகுபெயர்:

எ.கா - வற்றல் தின்றான். வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.

ஆகுபெயர் |A grandmother teach tamil to her granddaughter
ஆகுபெயர் | MetonymyImage credit: AI Image

7. கருவியாகுபெயர்:

எ.கா- வானொலி கேட்டு மகிழ்ந்தனர்.

வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.

8. காரியவாகுபெயர்:

எ.கா -  பைங்கூழ் வளர்ந்தது. கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது.

9. கருத்தாவாகுபெயர்:

எ.கா - அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன். அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது.

10. எண்ணலளவை ஆகுபெயர்:

எ.கா-  ஒன்று பெற்றால் ஒளிமயம். 'ஒன்று' என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

11. எடுத்தலளவை ஆகுபெயர்:

எ.கா-  இரண்டு கிலோ கொடு. நிறுத்து அளக்கும் 'எடுத்தல்' என்னும் அளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

12. முகத்தலளவை ஆகுபெயர்:

எ.கா - அரை லிட்டர் வாங்கு. முகந்து அளக்கும் 'முகத்தல்' அளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

13. நீட்டலளவை ஆகுபெயர்:

எ.கா - ஐந்து மீட்டர் வெட்டினான். நீட்டி அளக்கும் 'நீட்டலளவைப்' பெயர், அவ்வளவைக்கொண்ட பொருளுக்கு ஆகி வந்தது.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 9!
ஆகுபெயர் |A grandmother teach tamil to her granddaughter

“இந்த முக்கியமான  பதிமூன்று ஆகுபெயர்களை மட்டும் நீ நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டால் உனக்கு எந்த ஓர் ஐயமும் ஏற்படாது முல்லை!”

“சரிங்கப் பாட்டி! இப்போது எனக்கு எல்லாமே நன்றாகப் புரிந்து விட்டது. நம் அன்றாட வாழ்க்கையில் ஆகுபெயரை பயன்படுத்தி தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதுதான் இலக்கணம் என்பதை நான் இப்போது நன்றாக உணர்ந்து கொண்டேன்!”

“அருமை முல்லை!

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பது திருமூலரின் வாக்காகும். அதைப்போல நீ பெற்ற இந்த இலக்கணத்தை உன்னுடைய வகுப்பு மாணவர்களுக்கும் கற்றுக் கொடு. அதுதான் சிறப்பாக இருக்கும் உன்னை மேன்மேலும் உயர்த்தும்.”

“சரிங்க பாட்டி!” என்று சாப்பிட சென்று விட்டாள் முல்லை! 

logo
Kalki Online
kalkionline.com