

வகுப்பறைக்குள் தமிழ் ஐயா நுழைந்தார். அனைவரும் எழுந்து நின்று “வணக்கம் தமிழ் ஐயா!” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
“அனைவரும் அமருங்கள் மாணவர்களே!”
“முந்தைய வகுப்பில் சொல் பற்றி நாம் நன்றாக படித்திருந்தோம்.
“சொல் என்றால் என்ன? யாராவது கூறுங்கள்!”
“ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துகள் சேர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். நாம் முந்தைய வகுப்பில் படித்தோம் ஐயா.”
“எல்லோரும் செல்வத்துக்கு கைதட்டுங்கள்”
“தமிழ் இலக்கணத்தில் சொற்கள் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி தான் நாம் இன்று வகுப்பறையில் பார்க்கப் போகிறோம்”
“பார்ப்போம் ஐயா!” என்று அனைவரும் ஆவலுடன் சொன்னார்கள்.
நாம் பேசும் மொழியில் மறைந்திருக்கும் நால்வகைச் சொற்கள்:
தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
(எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.
இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
பெயர்ச்சொல்:
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
(எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
வினைச்சொல்:
வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
(எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.
இடைச்சொல்:
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது. இடைச் சொல்லானது ஒரு வார்த்தையின் இடையில் வந்து அந்த வார்த்தைகளுக்கு நல்ல பொருளை தருகிறது. எந்த ஒரு வாக்கியத்திலும் இடைச்சொல் இல்லாமல் நாம் அதனுடைய பொருளை புரிந்து கொள்வது சற்று கடினம்.
(எ.கா.) உம் - தந்தையும் தாயும்,
மற்று - மற்றொருவர்,
ஐ - திருக்குறளை
உரிச்சொல்:
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும். உரிச்சொல் என்பது ஒரு வார்த்தையை சிறப்பித்துக் கூறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
(எ.கா.): மா - மாநகரம்
சால - சாலச்சிறந்தது
நனி - நனிநன்று
இவ்வாறுதான் நால்வகைச் சொற்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. இவற்றை நாம் தெளிவாகப் படித்தால் போதும். இந்த நால்வகைச் சொற்கள் என்பது நமக்கு எளிமையாகிவிடும்.
அன்றாட வாழ்க்கையில் பேசக்கூடிய சொற்களில், இந்த நால்வகைச் சொற்களும் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? படிக்கக்கூடிய இலக்கணங்களில் இந்த நால்வகைச் சொற்களையும் அறிந்து புரிந்து படித்தால் அனைத்தும் சிறக்கும்.