

பாரிஸ் என்றாலே நம் கண் முன்னே தோன்றுவது ஈபிள் டவர்தான். பாரிஸுக்கு வருபவர்கள் இந்த டவரைப் பார்க்காமல் போவதில்லை. இது 1889-இல் பாரிஸில் நடந்த உலகக் கண்காட்சிக்காகக் கட்டப்பட்டதாகும்.
கண்காட்சி முடிந்தவுடன் இடித்துவிடத்தான் நினைத்திருந்தார்கள். ஆனால், பிரான்ஸுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இதற்கு ஏற்பட்ட வரவேற்பு, அந்த முடிவைக் கைவிடச் செய்தது. இப்போது, இந்தக் கோபுரம் இல்லாத பாரிஸை உலக மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
இந்த முற்றிலும் இரும்பால் ஆன ஈபிள் கோபுரத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்...
இதை கட்டி முடிக்க இரண்டு வருடம் இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் அமைப்பை உருவாக்கிய வரையாளர் குஸ்டாவ் ஈபிள் (Gustave Eiffel)-இன் பெயரே இதற்குக் சூட்டப்பட்டது.
18,000 இரும்புத் துண்டுகள் மற்றும் 25 லக்ஷம் ரிவெட்டுகள் உபயோகித்து இது எழுப்பப்பட்டது.
பிரெஞ்சுப் புரட்சியின் 100-வது நினைவு நாளன்று இது திறக்கப்பட்டது.
இதை செல்லமாக "இரும்புப் பெண்மணி" (Iron Lady) என்று அழைக்கிறார்கள்.
இந்தக் கோபுரத்தின் உயரம் வெயில் காலங்களில் உஷ்ணத்தால் 7 அங்குலம் கூடுவதாக அறியப்பட்டுள்ளது.
இந்தக் கோபுரத்தைத் துருப்பிடிக்காமல் இருக்க, உச்சி முதல் பாதம் வரை 7 வருடங்களுக்கு ஒருமுறை கைகள் கொண்டு வர்ணம் பூசுகிறார்கள்.
கடுமையான பூகம்பம் கூட இதை கீழே தள்ள முடியாது.
ஈபிள் டவரின் மூன்று மட்டங்களில் பார்வைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
டவருக்கு வருபவர்கள், வெவ்வேறு உயரங்களில் அமைந்திருக்கும் இந்தத் தளங்களில் நின்று பாரிஸ் நகரத்தைப் பறவைக் கண் கொண்டு பார்க்கலாம்.
இதன் மேல் தளத்தில் உணவருந்த ஓட்டலும் உள்ளது.
டவரில் மேலே செல்வதற்கு லிஃப்ட் வசதி உண்டு. அதை உபயோகிக்க விருப்பம் இல்லாதவர்கள் 1665 படிகள் ஏறி உச்சிக்குப் போகலாம்.
ஒருவர் பாரிஸுக்குப் போய் ஈபிள் டவரைப் பார்க்காமல் வந்தால், அவரை ஒரு மாதிரிதான் பார்ப்பார்கள்!