காடு பெருங்காடு – யானை புலி
காட்சி தரும் காடு
நீடு நிழல் கொடுத்தே – மரங்களும்
நின் றிருக்கும் காடு!
பச்சை மரத்தடியில் – சின்னஞ்சிறு
பாலன் படுத் திருந்தான்
குச்சி விற கொடிப்பாள் – அவன்தாய்
கூப்பிடு தூரத்திலே.
கண்ணயர் பாலகனின் – அருகிலோர்
காட்டு மத யானை
மண்ணைக் கிளறியது! – மதத்தொடு
வாலை முறுக்கி யது!
தாயும் பதறுகிறாள் – ஐயோவென்று
தவித்துப் புலம்புகிறாள்
வாயும் வயிற்றெரியக் – கண்ணீர்விட்டு
வாய்விட் டலறுகிறாள்.
பச்சை இளங்குழந்தை – தலைமயிர்
பாடிவரும் காற்றால்
நொச்சித் தளிர்போலே – அசைந்ததை
நோக்கிற்று யானையுமே.
கைகளைத் தட்டுகிறான் – குழந்தை
கால்களில் துள்ளுகிறான்
பைய நடக்கிறது – யானை அவன்
பக்கம் வருகிறது.
தீங்கெதும் செய்யவில்லை – குழந்தையைத்
தீண்டி மிதிக்கவில்லை!
பாங்குடன் அப்புறத்தே – நகர்ந்தது
பாசம் ததும்பிடவே,
ஆறறி வில்லாத – மிருகமும்
அன்பினைக் காட்டுதடா!
மாறிவரும் உலகில் – மனிதா
வாழத் தெரிந்து கொள்வாய்!
- சக்திக்கனல்