பச்சோந்திகள் பற்றிய பரபரப்பான தகவல்கள்!

பச்சோந்தி...
பச்சோந்தி...
Published on

ச்சோந்திகள் ஆங்கிலத்தில் Chameleon என்று அழைக்கப்படுகின்றன. இது கிரேக்க வார்த்தை யிலிருந்து பிறந்ததாகும். இவை ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினமாகும். பச்சோந்திகளில் சுமார் எண்பது வகைகள் உலகெங்கிலும் காணப்படுகின்றன.

வெப்பமான பகுதிகளில் இவை அதிக அளவில் வாழ்கின்றன. பச்சோந்திகள் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் பகுதிகளில் ஏராளமான அளவில் உள்ளன. மேலும் இவை தெற்கு ஐரோப்பா, ஸ்பெயின் மற்றும் ஆசிய நாடுகளிலும் காணப்படுகின்றன.

பச்சோந்தி இனத்தில் மிகப்பெரிய பச்சோந்தி மடகாஸ்கர் பச்சோந்தியாகும். இவை அதிக பட்சமாக அறுபது சென்டிமீட்டர் நீளத்திற்கு வளர்கின்றன. இவை அளவில் பெரியதாக இருப்பதால் சிறிய எலிகள் சிறுசிறு பறவைகள் போன்றவற்றைப் பிடித்துச் சாப்பிடும் வழக்கத்தை வைத்துள்ளன. பச்சோந்தி இனத்தில் மிகச்சிறிய பச்சோந்தி கென்யா பச்சோந்தியாகும். இவை அதிகபட்சமாக ஏழு சென்டிமீட்டர் அளவே வளர்கின்றன.

பச்சோந்திகளுக்கு தாங்கள் வசிக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களுடைய உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளும் அதிசய தன்மை உண்டு. பசுமையான மரத்தில் இருக்கும் போது இவற்றின் உடலானது பச்சையாகக் காணப்படும். இவற்றின் உடலில் நிறச் செல்கள் அமைந்துள்ளன. வெளிச்சமானது இவற்றின் உடலில் பட்டதும் அதனால் நிறச்செல்கள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றமடைந்து உடலானது நிறமாற்றம் பெறுகிறது. பச்சோந்தியானது சூழ்நிலைகளுக்கேற்ப தன்னுடைய உடல் நிறத்தை மாற்றிக் கொள்ள சுமார் பத்து நிமிடங்கள் ஆகின்றன. இவற்றின் உடலானது பச்சை, மஞ்சள் மற்றும் கரும்பழுப்பு என பல வண்ணங்களில் மாற்றமடைகின்றன.

பச்சோந்திகளின் தலையும் உடலும் எட்டு அங்குலம் முதல் பனிரெண்டு அங்குலம் வரை காணப்படுகின்றன. பச்சோந்திகளுக்கு நீளமான வால் அமைந்துள்ளது. இவற்றின் நீளமான வாலானது ஒரு கையைப் போல செயல்படுகிறது. மரத்தின் சிறு கிளைகளில் இவை தங்களுடைய வால் முனையைச் சுற்றிப் பாதுகாப்பாக அமர்ந்து கொள்ளுகின்றன.

பச்சோந்திகளின் நாக்கானது மிக நீளமாக அமைந்துள்ளது. இதன் முனையில் பசை போன்ற ஒரு அமைப்பு காணப்படுகிறது. பச்சோந்தி பூச்சிகளைப் பார்த்துவிட்டால் உடனே தன் நீளமான நாக்கை நீட்டி வைத்துக் கொள்ளும். அதன் முனையிலுள்ள பசையில் பூச்சியானது ஒட்டிக் கொள்ளும். உடனே நாக்கை வாய்க்குள் இழுத்து அந்த பூச்சியைத் தின்று விடும்.

பச்சோந்திகள் சிறுசிறு பூச்சிகளையும் சிலந்திகளையும் விரும்பி உண்ணுகின்றன. பெரிய வகை பச்சோந்திகள் சிறிய பறவைகளையும் மற்ற பல்லிகளையும் பிடித்து சாப்பிடும் இயல்புடையனவாக உள்ளன. சில வகை பச்சோந்திகள் தாவரங்களையும் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன.

பச்சோந்திகள் பெரும்பாலும் மரத்திலேயே வாழ்கின்றன. இவை சிறிய புதர் போன்ற பகுதிகளிலும் காணப் படுகின்றன. சிறிய வகை பச்சோந்திகள் நிலப் பகுதிகளில் வாழ்கின்றன. பச்சோந்திகள் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களும் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
பச்சோந்தி...

பச்சோந்தி இனத்தில் பெரும்பாலனவை முட்டையிடுபவையாக உள்ளன. முட்டையிடுவதற்கு முன்னால் பச்சோந்தியானது மரத்திலிருந்து இறங்கி ஈரமான நிலப்பகுதியில் நான்கு முதல் பனிரெண்டு அங்குல அளவிற்கு குழியைத் தோண்டுகின்றன. தோண்டிய குழிக்குள் பெண் பச்சோந்தியானது முட்டைகளை இடும். பின்னர் குழியை மூடிவிட்டுச் சென்று விடும். முட்டைகளின் எண்ணிக்கையானது இனத்திற்கு இனம் வேறு படுகிறது. முட்டைகளானது 4 முதல் 12 மாதங்களில் பொரிந்து குஞ்சுகளாக மாற்ற மடையும். பச்சோந்தி இனத்தில் ஜாக்சன் பச்சோந்தி மற்றும் ப்ளாப்ஜாக் பச்சோந்தி என்ற இரண்டு வகைப் பச்சோந்திகள் குட்டிகளை ஈனுகின்றன.

பச்சோந்திகள் தங்களுடைய உடலைத் திருப்பாமல் பல கோணங்களில் பார்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. பச்சோந்திகளின் இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் பார்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இவ்வாறு பார்க்கும் சமயத்தில் தனது உணவான பூச்சிகள் போன்றவற்றைப் பார்த்து விட்டால் தனது நீளமான நாக்கினால் அவற்றைச் சுலபமாகப் பிடித்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com