
ஒட்டகங்கள் வறண்ட மற்றும் குறைந்த மழைப்பொழிவு கொண்ட பாலைவனத்தில் வாழ்கின்றன. ஒட்டகங்களின் இனம் முதலில் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவில் தோன்றி பின்னர், அவை சுமார் 3 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தன. இன்று ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் ஒட்டகங்கள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக, பாக்டிரியன் ஒட்டகங்கள் சீனா, மங்கோலியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. ட்ரோமெடரி ஒட்டகங்கள் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
ஒட்டகங்கள் பாலைவனங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் லடாக் பள்ளத்தாக்கிலும் ஒட்டகங்கள் அதிகம் காணப்படுகின்றன.
சோமாலியா, சீபூத்தீ, சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, லிபியா, சூடான், எதியோப்பியா, கசக்ஸ்தான் போன்ற பகுதிகளிலும் ஒட்டகங்கள் அதிகமாக காணப்படுகின்றன மேலும் இவ்விடங்களில் மக்கள் அதன் இறைச்சியையும் உண்கிறார்கள்.
பாலைவனத்தில் வாழும் விலங்குகள் தீவிர வெப்பநிலை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்.
ஒட்டகங்கள் பாலைவனத்தில் வாழ்வதற்கேற்ப தன் உடல் அமைப்பில் சிறப்பு தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. முக்கியமான ஒன்பது அம்சங்களை இப்போது பார்க்கலாம்:
1. தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூடான பாலைவனத்தில், ஒட்டகங்களின் உடல் அமைப்பு தான் அவைகள் அங்கு வாழ்வதற்கான சிறப்பம்சமாகும். ஒட்டகங்களுக்கு நீண்ட கால்கள் உள்ளன. இக்கால்கள் பாலைவனத்தில் உள்ள சூடான மணலிலிருந்து ஒட்டகங்களை பாதுகாக்கின்றன.
2. தண்ணீர் கிடைக்கும் போது ஒட்டகங்கள் அதிக அளவில் நீரைக் குடித்து, அதன் பிறகு அவற்றைத் தன் உடலில் சேமித்து வைத்துக் கொள்கின்றன. ஒட்டகங்கள் தண்ணீரை சேமிக்கப் பின்வரும் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
* ஒட்டகங்கள் மிகச் சிறிய அளவு சிறுநீரை மட்டுமே வெளியேற்றுகின்றன.
* அவற்றின் சாணம் வறண்டு இருக்கும். அது மட்டுமல்லாமல் அவை உடம்பிலிருந்து வியர்வையை வெளியேற்றுவது இல்லை.
ஒட்டகங்கள் அதன் உடலிலிருந்து அதிக தண்ணீரை வெளியேற்றாத காரணத்தால் அவற்றால் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் உயிர் வாழ முடிகிறது.
3. ஒட்டகங்கள் அவற்றின் முதுகின் பின்புறம் உள்ள திமில் பகுதியில் கொழுப்பைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன. அவசரக் காலத்தில், அவை தன் கொழுப்பைச் சிதைத்து உயிர்வாழத் தேவையான ஆற்றலாகவும், நீராகவும் அதை மாற்றிக் கொள்கின்றன.
ஒட்டகத்தின் திமில், பாலைவனத்தின் கடுமையான சூழ்நிலையில் தண்ணீர் இல்லாமல் வாழ மற்றும் நீண்ட நேரம் பயணிக்க உதவுகிறது. இதனால் அதன் திமில் ஒரு கொழுப்பு இருப்பு அல்லது ஆற்றல் இருப்பு போல் செயல்படுகிறது. திமில் பகுதியில் உள்ள கொழுப்பு வெப்பத்திலிருந்து ஒட்டகத்தைப் பாதுகாக்கும் ஒரு போர்வையாகச் செயல்படுகிறது. இதனால், பாலைவனத்தின் வெப்பம் மற்றும் கடுமையான காலநிலைக்கு எதிராக ஒட்டகம் குளிர்ச்சியாக இருக்கிறது.
4. ஒட்டகங்கள் மென்மையான மணலில் எளிதாக நடப்பதற்கு ஏற்றவாறு பெரிய மற்றும் தட்டையான பாதங்களைக் கொண்டுள்ளன. மேலும், அதன் தட்டையான பாதங்கள் உடல் எடை மற்றும் அது சுமக்கும் எடைக்கு எதிராக மணலில் மூழ்குவதை நிறுத்த உதவுகின்றன. அதோடு மணலின் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கின்றன. எனவே ஒட்டகங்கள் 'பாலைவனத்தின் கப்பல்' என்று அழைக்கப்படுகின்றன.
5. கண்கள் மற்றும் காதுகளில் வீசும் புழுதிப் புயலில் இருந்து பாதுகாக்க ஒட்டகங்களுக்கு நீண்ட கண் இமைகள் மற்றும் ரோமங்கள் உள்ளன.
6. ஒட்டகங்களுக்கு மெல்லிய, பிளவுபட்ட நாசித் துவாரங்கள் உள்ளன. புழுதிப் புயல் விளைவாக ஏற்படும் மணல் மற்றும் தூசி துகள்களைத் தடுக்க நாசித் துவாரங்கள் மூடிக் கொள்ளும்.
7. ஒட்டகங்களுக்கு மிக நீண்ட பெருங்குடல் உள்ளது. அது தண்ணீரை மீண்டும் உறிஞ்சி நீரைத் தேக்கி வைக்கிறது.
8. ஒட்டகங்களின் வாயானது, தோல் போன்ற மென்மையான திசுக்களால் உருவாக்கப் பட்டுள்ளது. இவை ஒட்டகங்கள் முள் மற்றும் கூரானச் செடிகளையும் மெல்ல உதவுகின்றன.
9. பாக்டிரியன் எனப்படும் இரட்டை திமில் ஒட்டக வகை, குளிர்காலத்தில் தங்களைப் பாதுகாக்க தடிமன் மற்றும் கரடுமுரடான மேல்சட்டையைச் (மேல் தோல்) சிறப்பு தகவமைப்பாகப் பெற்றுள்ளன. கோடையில், வெப்பநிலை அதிகரிக்கும் போது அந்த மேல்சட்டையைத் தானாகவே உதிர்த்து விடுகின்றன.
ஒட்டகங்கள் ஆறு முதல் ஏழு அடி உயரம் வரை வளரும்.
அவற்றின் ஆயுட்காலம் 15 முதல் 50 ஆண்டுகள்.
ஒட்டகங்கள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்.
உலகில் ஏறக்குறைய 1 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒட்டகங்களால் அதிகபட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓட முடியும்.
ஒட்டகப் பாலூட்டிகள் இரவில் ஏறக்குறைய ஆறு மணி நேரம் நின்றபடியே தூங்குகின்றன.
பாலைவனத்தில் வாழும் மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஒட்டகங்களே சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.