

ஒரு பெரிய குளம் இருந்தது. அக்குளத்தில் நிறைய மீன்கள் வாழ்ந்து வந்தன.
அதில் இரு மீன்கள் நண்பர்களாக இருந்தன.
ஒரு நாள் அங்கு இரு மீன் வியாபாரிகள் அக்குளத்தையும், அதில் துள்ளி ஓடும் மீன்களையும் பார்த்தனர்.
ஒரு மீன் வியாபாரி, "நாளை இக்குளத்தில் உள்ள மீன்களை வலை வைத்துப் பிடித்து சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து லாபம் பெறுவோம்" என மற்றவரிடம் கூற, மற்றவர் சரி என்று கூறினார்.
வியாபாரிகள் கூறியதைக் கேட்டு, அங்கு வந்த ஒரு மீன் பதட்டம் அடைந்தது.
தனது நண்பன் மற்றொரு மீனிடம் சென்று, "நாம் இந்தக் குளத்தை விட்டு உடனே வேறு தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாக வேண்டும். இல்லையெனில், நாளை நம்மை மீன் வியாபாரிகள் இருவரும் சிறை பிடித்துக் கொண்டு சென்று விடுவார்கள்" எனக் கூறியது.
"என் யோசனைப்படி செய்தால், வயலுக்குச் செல்லும் வாய்க்கால், குளத்தின் ஒரு பகுதியில் உள்ளது. அதன் வழியாக மற்றொரு குளத்திற்குச் சென்று விதியை மதியால் வெல்வோம்" என்று கூறியது.
அதற்கு முதல் மீன், "விதிப்படி நடக்கட்டும். நான் இங்குதான் இருப்பேன்" என்றது.
இதைக் கேட்ட மற்ற மீன்கள் அனைத்தும் "உன் விதிப்படி நடக்கட்டும்" என்றன.
மற்ற சில மீன்கள் இரவோடு இரவாக இக்குளத்தை விட்டு வேறு குளத்திற்குச் சென்றன. போகும் போது, "எப்படியாவது உன்னை நீயே காத்துக் கொள்" என்று கூறி விட்டுச் சென்றன.
மறுநாள் காலையில் இரு மீன் வியாபாரிகளும் குளத்திலுள்ள அனைத்து மீன்களையும் பிடித்து சந்தையில் விற்றனர். அதில் நண்பன் மீனும் பிடிபட்டு இறந்தது.
நீதி:
குட்டீஸ்! தன் நண்பன் மீன் சொன்னதைக் கேட்டு நடந்து வேறு குளத்திற்குச் சென்றிருந்தால், நண்பனோடு சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம். 'விதியை மதியால் வென்று' துன்பத்திலிருந்து விடுபடலாம். சரிதானே!
ஒரு கிராமத்தில் ஒரு பெரியவர் தினமும் தெருவில் வந்து "குப்பை, கூளங்களுக்குப் பேரீச்சம்பழம்" என்று கூவி விற்றார்.
உடனே, ஒருவர் அந்தப் பெரியவரிடம் வந்து, "குப்பைக் கூளங்களுக்குப் பேரீச்சம்பழம் கொடுக்கிறீர்களே, ஏன்?" என்று கேட்க, அதற்கு அந்தப் பெரியவர், "வீட்டில் சேரும் குப்பை, கூளங்களால் நோய் வரும். அதனால்தான் எடைக்குச் சமமாக இலவசமாகப் பேரீச்சம்பழம் தருகிறேன். ஆனால், தெருவில் இருக்கும் குப்பைகளைக் கொண்டு வரக்கூடாது" என்றார்.
இதனைக் கேட்ட மக்கள் தங்கள் வீட்டில் உள்ள குப்பைகளைக் கொண்டு வந்து அதன் எடைக்குப் பேரீச்சம்பழம் பெற்றுச் செல்லத் தொடங்கினர். ஆனால், ஒரு பெண் மட்டும் தன் வீட்டில் உள்ள குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றாள். மற்ற வீட்டுக்காரர்கள் நிறையக் குப்பையைக் கொடுத்துவிட்டு வாங்கிச் சென்றனர்.
வியாபாரி அந்தப் பெண்ணிடம், "ஏன் நீ மட்டும் குப்பையைத் தொட்டியில் போட்டுவிட்டு, பணம் கொடுத்துப் பழம் பெற்றுச் செல்கிறாய்?" எனக் கேட்டார்.
அந்தப் பெண், "அடுத்தவர்கள் உழைப்பில் வாழ்வது தவறு" என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள். பெரியவர் மற்றவர்களிடம் வாங்கிய குப்பைகளை வாங்கித் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றார்.
இதனை தினமும் அந்தப் பெரியவரும் செய்து வந்தார்.
அடுத்த நாள் அவர் வந்து, "தான் கலெக்டர் என்றும், இக்கிராமத்தில் சுத்தம் உள்ள வீடு எது எனப் பார்க்க மாறுவேடத்தில் வந்ததாகவும், இந்த ஊரில் சுத்தமான வீடாகவும், தெருவில் குப்பைத் தொட்டியில் குப்பையைப் போட்டும், வீட்டைச் சுத்தமாகவும் வைத்த அந்தப் பெண்ணிற்குத் தூய்மையாளர் விருது கொடுப்பதற்காக வந்தேன்" என்றார்.
"இது மாதிரி சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் காக்கப்படும், நாடும் வீடும் தூய்மையாக இருக்கும்!" எனக் கூறியதும், அதிலிருந்து கிராமம் சுத்தமாக மாறியது.
நீதி:
குட்டீஸ்! சுத்தம் சோறு போடும் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டையும், நாட்டையும், உங்கள் உடலையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் நோயிலிருந்து விடுபடலாம். சரிதானே!