

ஆங்கிலத்தில் இதை 'Glow worm' என்று அழைத்தாலும், உண்மையில் இவை புழுக்கள் அல்ல; பூச்சிகள் தாம். தங்களின் வயிற்றில் விளக்கைச் சுமந்து பறக்கும் அபூர்வப் பூச்சிகள் தான் இந்த மின்மினிகள்.
இந்தப் பூச்சியின் உடம்பில் நடக்கும் ஒருவித ரசாயன விந்தைதான் இவைகளின் வயிற்றில் பச்சை வண்ண விளக்காக எரிகிறது. ஆங்கிலத்தில் இந்த ஒளியை 'Bioluminescence' என்று அழைக்கிறார்கள். இந்த ஒளி, இப்பூச்சிகளுக்கு இரைகளைப் பிடிக்கவும், எதிரிகளைப் பயமுறுத்தவும் உதவுகிறது.
இதில் என்ன ஒரு விசித்திர விஷயம் என்றால், இந்த மின்மினிப் பூச்சிகளால் தங்கள் உடம்பில் ஒளிரும் விளக்கின் ஒளியை, அதாவது 'Brightness' ஐ, கூட்டவும் குறைக்கவும் முடியும் என்பதுதான்!
ஆங்கிலத்தில் 'Firefly' என்றும் அழைக்கப்படும் இந்தப் பூச்சிகள், இருட்டான, ஈரமான செடி, சட்டு மற்றும் புதர்களிலும் காணப்படுகிறது. இந்தப் பூச்சிகளின் வண்ண ஒளிக்கற்றைகளால் கவரப்பட்டு, ஈக்களும், 'Moths' என்று சொல்லப்படும் அந்துப்பூச்சிகளும் கவரப்பட்டு, இவைகளுக்கு இறையாகிப் போகின்றன.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்: மின்மினிப் பூச்சிகளில் பெண் பூச்சிகளின் விளக்கு, ஆண் பூச்சிகளின் விளக்குகளை விடப் பிரகாசமாக இருப்பது தான்! ஆண் பூச்சிகளின் வயிற்று விளக்கு பாவம், கொஞ்சம் டல்லுதான். சில ஆண் பூச்சிகளின் விளக்கு ரொம்பவே குறைவாக இருக்குமாம். மற்ற எல்லா ஜீவராசிகளில் ஆண்களுக்குத்தான் வசீகரம் அதிகம்; ஆனால் மின்மினிகளில் பெண்களுக்குத்தான் கவர்ச்சி அதிகம்!
இதைப் பற்றி இன்னொரு விஷயம் இருக்கு, சொன்னால் நம்ப மாட்டீர்கள்! மின்மினிகள் உடம்பில் இருந்து வரும் ஒளி பல வண்ணங்களில் கூட இருக்கும். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களிலும் மிளிரும் மின்மினிப் பூச்சிகளும் உண்டு.
முக்காவாசி நகரக் குழந்தைகளுக்கு இந்தப் பூச்சியைப் பற்றித் தெரிந்திருக்காது. கிராமத்துக் குழந்தைகள் இந்தப் பூச்சிகளைக் கைகளில் வைத்து விளையாடுவதுண்டு. நாங்கள் இருந்த கிராமத்தில் மின்மினிகளை 'ராந்தல் பூச்சி' என்றுதான் அழைப்போம். மற்ற பூச்சிகளைப் பிடித்து வெற்றிலை பாக்கு போடுவதுபோல வாயில் போட்டு 'ஸ்வாகா' செய்யும் பல்லிகளுக்கு, மின்மினி என்றாலே பயமோ பயம்!
கடைசியாக, மின்மினிகள் தங்கள் விளக்கைக் வைத்து எதையும் பற்ற வைக்க முடியாது. ஒரு காலத்தில் மின்மினிகளால் காட்டுத் தீ உண்டாகிறது என்ற தவறான கருத்து நிலவி வந்தது. 'பற்றவைக்கும் பூச்சிகள் இல்லை, மின்மினிகள் பாவப்பட்ட பூச்சிகள்' என்று பின்புதான் தெரிந்தது.