

கடற்கரையோரப் பகுதியில் ஒரு விவசாயிக்கு பண்ணை இருந்தது. அதை அவரால் தனியாக நிர்வகிக்க இயலவில்லை. உதவிக்கு ஆள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார். ஆனால், யாருமே வேலைக்கு வரவில்லை. காரணம், அது அடிக்கடி புயல் தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய பகுதி என்பதால் வேலைப்பளுவும், ஆபத்தும் அதிகம் இருக்கும் என்பதுதான்.
ஆறு மாத காலமாக விளம்பரம் கொடுத்தும் பலன் இல்லை. கூடுதல் சம்பளம் தருவதாக அறிவித்தும் யாரும் முன்வரக் காணோம்.
அதன் பிறகு ஒருவன் வந்தான்.
“உனக்கு இது போன்ற இடங்களில் வேலை செய்து முன் அனுபவம் உண்டா?” விவசாயி கேட்டார்.
“இல்லை.”
விவசாயிக்குச் சிறிது அதிருப்தி. இருந்தாலும் இங்கே வேறு யாரும் வேலைக்கு வருவதில்லை. விளம்பரம் கொடுத்தும், நிறைய சம்பளம் தருகிறேன் என்று சொல்லியும் எவரும் வராத நிலை. இப்படி ஓர் ஆள் வந்திருப்பதே பெரிய காரியம் என ஆறுதல்பட்டுக்கொண்டார்.
எனினும் அவனை முன் கூட்டியே எச்சரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
“இங்கே அடிக்கடி புயல் வரும். அப்போது நமது பண்ணை வலுவாகத் தாக்கப்படும். அதைச் சமாளிப்பது பெரும் பாடு. அதற்குப் பயந்துதான், அதிக சம்பளம் கொடுக்கிறேன் என்றாலும் வேறு யாரும் இங்கு வேலைக்கு வரவில்லை…”
“அது எனக்குத் தெரிந்ததுதான் ஐயா.”
“அது சரி. உன்னால் புயல் தாக்குதலைச் சமாளிக்க முடியுமா?”
“கவலைப்படாதீர்கள். புயல் வரும்போது நான் தூங்குவேன்.”
விவசாயிக்குத் தூக்கிவாரிப்போட்டது.
அனுபவம் இல்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால், புயல் வரும்போது தூங்குவேன் என்று அந்த நபர் சொன்னது எரிச்சலைக் கொடுத்தது. இவன் ஒழுங்காக வேலை செய்வானா என்கிற சந்தேகம் எழுந்தது. எனினும் வேறு வழியில்லை. 'குறைந்தபட்ச உதவியாவது இவனால் இருக்குமே! எதற்கும் சில நாட்கள் இவனை வேலைக்கு வைத்துப் பார்ப்போம். சரிப்பட்டு வந்தால் தொடரலாம். இல்லாவிட்டால் வேலையிலிருந்து நீக்கிவிடலாம்' என்று எண்ணிக்கொண்டு அவனை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்.
அந்த வேலையாள் அவர் நினைத்தது மாதிரி இல்லாமல், தேவையான வேலைகள் அனைத்தையும் தாமாகவே செய்தான்.
‘பரவாயில்லையே! இவன் நல்ல வேலைக்காரனாக இருக்கிறானே! பிறகு அன்று ஏன் அவ்வாறு சொன்னான்?’ விவசாயி ஆச்சரியப்பட்டார்.
அப்படி இருக்கையில், வழக்கம் போல புயல் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பண்ணையில் உள்ள பொருட்களை புயல் காற்று தூக்கிக்கொண்டு போய்விடுமே என்று விவசாயி பதற்றப்பட்டு, வேலையாளைத் தேடினார்.
அவனோ உள்ளே அறையில் படுத்து, சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். 'புயல் அடிக்கும்போது தூங்குவேன்' என்று அவன் சொன்னது அவருக்கு ஞாபகம் வந்தது.
'என்னடா இது பெரும் சிக்கலாக இருக்கிறதே' என்று யோசித்த அவர், ‘சரி, எதற்கும் எழுப்பிப் பார்ப்போம்’ என்று அவனை எழுப்பி, "புயல் வரப்போகிறது. நாம் பண்ணைப் பொருள்களையும், கால்நடைகள், கோழிகள் ஆகியவற்றையும் பத்திரப்படுத்த வேண்டும். எழுந்து வா" என்று அழைத்தார்.
"நான்தான் வேலைக்குச் சேரும்போதே, புயல் வரும்போது தூங்குவேன் என்று சொன்னேனே...!" என சொல்லிவிட்டு அவன் மீண்டும் படுத்துக்கொண்டான்.
விவசாயிக்கு அவனை வற்புறுத்தவோ, விவாதம் செய்யவோ அப்போது நேரமில்லை. ஏனென்றால், புயல் காற்று பலமாக வீசத் தொடங்கியிருந்தது. தன்னால் முடிந்த வரையில் காப்பாற்ற முயற்சி செய்வோம் என்று வெளியே விரைந்து சென்றார்.
பண்ணையில் கண்ட காட்சிகள் அவரை வியக்கச் செய்தன. வைக்கோல் போர் தார்பாலின் போட்டு இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. கோழிகள் அதன் கூடுகளில் அடைக்கப்பட்டிருந்தன. கால்நடைகள் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்தன. பண்ணையில் எதையெல்லாம் எப்படி எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டுமோ, அந்த ஏற்பாடுகள் யாவும் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தன.
அப்போதுதான் அந்த வேலையாள், புயல் அடிக்கும்போது தூங்குவேன் என்று சொன்னதன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. அவனை மெச்சியதோடு, அவன் தனக்கு வேலைக்காரனாக அமைந்தது பற்றி பெருமிதமும் பட்டுக்கொண்டார்.
நீதி: நாம் செய்ய வேண்டிய வேலைகளைச் சரியாக, நேரத்துக்கு முன்னரே செய்து முடித்துவிட்டால், எந்தச் சிக்கல் வந்தாலும் பயப்படாமல் நிம்மதியாக இருக்கலாம்.