
கிரேக்க நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு எல்லா செல்வங்களும் நிறைந்திருந்தன. ஆனாலும் அவன் மனதில் பேராசை நிறைந்திருந்தது. உலகத்திலேயே நாம்தான் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று விரும்பினான்.
மன்னன் செல்வங்களுக்கு சொந்தமான ஒரு தேவதையை நினைத்து தவம் செய்ய ஆரம்பித்தான். ஒருநாள் தேவதை மன்னனின் எதிரே தோன்றினாள்.
“மன்னனே. உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறேன்”
தேவதை தன் எதிரே வந்து நிற்பதைக் கண்டு பிரமித்தான் மன்னன். அவன் வேறு என்ன கேட்பான். தான்தான் உலகத்திலேயே மிகப்பெரிய செல்வந்தனாகத் திகழ வேண்டும் என்பதே அவன் இலட்சியமல்லவா ?
மன்னன் யோசித்தான்.
“தேவதையே. நான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும்”
“உன்னிடம் ஏராளமான செல்வம் இருக்கிறதே. பின் எதற்காக தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்ற வரத்தைக் கேட்கிறாய் ? யோசித்து வேறு நல்ல வரமாக பெற்றுக்கொள்”
தேவதை மன்னனுக்கு அறிவுறுத்தியது.
ஆனால் மன்னன் மனம் மாறவில்லை.
“தேவதையே. எனக்கு நான் கேட்ட வரம் தந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை”
“அப்படியே தருகிறேன். என்னை நினைத்து நீ எதைத் தொட்டாலும் அது பொன்னாக மாறும் வரத்தை உனக்கு தந்தேன்”
இதைக் கேட்ட மன்னன் மனம் மகிழ்ச்சி அடைந்தான்.
அந்த மன்னனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் மீது மன்னன் உயிரையே வைத்திருந்தான். அவளுக்குப் பின்தான் எல்லாம்.
தேவதை மறைந்தாள்.
தேவதை தந்த வரத்தை பரிசோதித்துப் பார்க்க விரும்பினான் மன்னன்.
அவன் இருந்த இடத்தில் ஏராளமான பூச்செடிகள் காணப்பட்டன. அவற்றிலிருந்து மிகப்பெரிய ஒரு பூவைப் பறித்து கையில் வைத்துக்கொண்டான். அந்த பூவை தங்கமாக மாற்றி சோதிக்க எண்ணினான்.
தேவதையை மனதில் நினைத்தபடி கையில் இருக்கும் பூ தங்கமாக மாறவேண்டும் என்று நினைத்தான்.
என்ன அதிசயம். அவன் நினைத்தபடியே கையிலிருந்த பூ தங்கமாக மாறி மின்னியது.
மீண்டும் ஒரு முறை பரிசோதித்துப் பார்க்க எண்ணினான். அருகில் இருந்த ஒரு கல்லை கையில் எடுத்தான் மன்னன்.
தேவதையை மனதில் நினைத்துக் கொண்டு கையில் இருக்கும் கல் தங்கமாக மாற வேண்டும் என்று நினைத்தான். அந்த கல்லும் தங்கமாக மாறி மின்னியது.
மகிழ்ச்சியோடு அரண்மனைக்குத் திரும்பினான்.
எதிரே அவனுடைய செல்ல மகள் வந்தாள். அவளது கையைப் பிடித்த மன்னன் தனக்குக் கிடைத்த சக்தியை அவளிடம் தெரிவிக்க விரும்பினான்.
“அருமை மகளே. நான் தேவதையை நினைத்து எது தங்கமாக மாறவேண்டும் என்று நினைத்தாலும் அப்படியே மாறும்”
இப்போது எதிர்பாராத ஒன்று நடைபெற்றது.
மகளின் கையைப் பிடித்தபடி இதைச் சொன்னதால் அவனுடைய செல்ல மகள் தங்கச்சிலையாக மாறிப்போனாள். மன்னன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவன் மகளின் மீது உயிரையே வைத்திருந்தான். ஆனால் அந்த செல்ல மகளோ இப்போது தங்கச்சிலையாக மாறி விட்டாள்.
உடனே தேவதையை மனமுருகி வேண்டி நின்றான்.
“தேவதையே. என்னை மன்னித்துவிடு. எனது பேராசையின் காரணமாக எனது தங்கமகளை சிலையாக்கிவிட்டு நிற்கிறேன். என்னுடைய மகளைக் காப்பாற்று.”
மன்னனின் அழுகையைக் கண்டு மனமிறங்கிய தேவதை அவன் முன் தோன்றினாள். அந்த தேவதை மன்னனின் மகளைத் தொட்டதும் மகள் பழைய நிலையை அடைந்தாள்.
அன்றிலிருந்து மன்னன் செல்வத்திற்கு ஆசைப்படுவதை விட்டுவிட்டு நிம்மதியாக வாழ ஆரம்பித்தான்.