
பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு எப்போதுமே தன்னுடைய பலத்தின் மீது ஒரு அகந்தை இருந்துக் கொண்டிருந்தது. இதைப் புரிந்துக் கொண்ட அனுமன் பீமனுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்று எண்ணினார். பீமனின் அகந்தையை ஆஞ்சநேயர் எவ்வாறு அடக்கினார் என்பதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஒருநாள் பீமன் ஒரு அடர்ந்த காட்டின் வழியாக பயணம் செய்துக் கொண்டிருந்தான். அந்த காட்டின் பாதையில் ஒரு வானரம் அழகாக உறங்கிக்கொண்டிருந்தது. அதனுடைய வால் வழியை மறைத்துக் கொண்டிருந்தது.
பீமன் வானரத்திடம், ‘ஏய் வானரமே! உன்னுடைய வாலைத் தூக்கி வேறு எங்காவதுப் போடு... நான் இந்த வழியாக செல்ல வேண்டும்’ என்று கூறினான். அதற்கு அந்த வானரமோ!, ‘நான் என்ன செய்ய முடியும்? நானே முதுமையானவன். உனக்கு விருப்பமென்றால் நீயே என்னுடைய வாலை எடுத்து வைப்பாயாக’ என்று கேட்டுக் கொண்டது.
பீமன் தன்னை வலிமை மிக்கவனாக எண்ணினான். ‘ஒரு வாலை என்னால் தூக்கி வைக்க முடியாதா?’ என்று நினைத்துக் கொண்டே வாலை நகர்த்த முயன்றான். எவ்வளவு முயற்சித்தும் அவனால் அந்த வாலை நகர்த்த முடியவில்லை. மறுபடியும் தன் முழுபலத்தை பிரயோகித்து நகர்த்த முயற்சித்தும் வால் ஒரு அங்குலம் கூட நகரவில்லை.
பீமன் மெய்சிலிர்த்துப் போனான். இது கண்டிப்பாக சாதாரண வானரமாக இருக்க முடியாது என்று எண்ணிக்கொண்டே வானரத்திடம், ‘நீ யார்? ஏன் உன்னுடைய வாலை என்னால் நகர்த்த முடியவில்லை?’ என்று கேட்டான் பீமன்.
இதைக்கேட்ட வானரம் புன்னகைத்தப்படி தன் மாயையிலிருந்து அவன் பளபளக்கும் பிரம்மாண்டமான வடிவத்தைப் பெற்றான். அந்த வானரம் வேறு யாரும் இல்லை அனுமன் தான். அனுமன் பீமனிடம், ‘நான் உன்னுடைய மூத்த சகோதரன் அனுமன். நீ எந்நேரமும் உன் பலத்தையே நம்பி பெருமைப்பட்டுக் கொண்டால், அது அடக்க முடியாத அகம்பாவமாக மாறிவிடும். வலிமை மட்டுமில்லை பணிவும் ஒரு வீரனுக்கு அழகாகும்’ என்று கூறினார். இதைக்கேட்ட பீமன் தன் தவறை உணர்ந்து, அனுமனை பார்த்து, ‘எனக்கு வாழ்வில் நல்ல பாடத்தை கற்று தந்துள்ளீர்கள்’ என்று கூறி வணங்கினான்.