இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனையோ வீரர்கள் உதயமாகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே சரித்திரத்தில் இடம் பிடிக்கின்றனர். அப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சரித்திரம் படைத்தால், அது பெருமிதத்துடன் பாராட்டப்பட வேண்டியது தான். ஏனெனில் இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இருப்பினும் பல தடைகளைத் தாண்டி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய அணிக்காக இவர் செய்த சாதனைகள் ஏராளம். அஸ்வினின் சாதனைகளில் சிலவற்றை இப்போது பார்ப்போமா!
ஐபிஎல் என்ற ஒற்றை ஆயுதத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின், தனது அசாத்திய திறமையால் இந்திய அணிக்குள் நுழைந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமான அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அறிமுகமானார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறிது காலமே விளையாடி இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் நிரந்தரமான இடத்தைப் பிடித்திருந்தார் அஸ்வின்.
அஸ்வின் இதுவரையில் சர்வதேச அளவில் 116 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.
வலது கை ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின், அணிக்குத் தேவைப்படும் நேரங்களில் பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார்.
இவர் இந்திய மைதானங்களில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட தவற விட்டதில்லை. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் அஸ்வினின் சுழல் வித்தை, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும்.
அதிக விக்கெட்டுகள்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமை அஸ்வினையேச் சேரும். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அளவில் 2வது இடத்திலும், சர்வதேச அளவில் 7வது இடத்திலும் உள்ளார். (619 விக்கெட்டுகளுடன் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறார் அனில் கும்ப்ளே.)
டெஸ்டில் 6 சதங்களுடன் 3503 ரன்களையும் குவித்துள்ளார்.
ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் 37 முறை எடுத்து, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே உடன் 2வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
67 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இலங்கையின் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் இருக்கிறார்.
4 முறை சதமடித்த போட்டியிலேயே 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்டர்களை அதிக முறை அவுட் ஆக்கியவரும் அஸ்வின் தான். இதுவரை 268 முறை இடது கை பேட்டர்களை அவுட் எடுத்துள்ளார்.
டெஸ்டில் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்று முத்தையா முரளிதரனுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வேகமாக 50,100,150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் அஸ்வின் தான்.
ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகளையும், 4394 ரன்களையும் குறித்துள்ளார்.
ஐசிசி கோப்பைகள்:
2011 ஒரு நாள் உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டு தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார் அஸ்வின்.
மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். நிச்சயமாக இவரது ஓய்வு இந்திய அணிக்கு பெரிய இழப்பு தான் என்றாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. அஸ்வினின் இடத்தை மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.