
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு அளப்பரியது. அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் எனத் தொடங்கி இன்று அஸ்வின், ஐடேஜா வரை இந்திய அணியின் வெற்றிக்கு பெரும்பங்கு ஆற்றினார்கள். கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் ஆகியோர் ஓய்வு பெறும் தருவாயில் இவர்களது இடத்தை நிரப்புவது கடினம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் இவர்களின் இடத்தை மிகச்சிறப்பாக நிரப்பி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி, அவ்வப்போது ரன்களைக் குவித்தும் உதவி வருகின்றனர் அஸ்வின் மற்றும் ஜடேஜா. இவர்கள் இருவரும் இன்னும் ஒருசில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் இடத்தை நிரப்பப் போவது யார் என்ற கேள்வி இப்போதே எழுந்து விட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்தார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடிய அஸ்வின், தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இது தவிர்த்து இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போதெல்லாம் தன்னால் முடிந்த அளவு பேட்டிங்கில் ரன்களைக் குவித்து உதவியிருக்கிறார். அதேபோல் ரவீந்திர ஜடேஜா அண்மையில் டெஸ்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இவரும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சிறந்த ஆல்ரவுண்டராக இந்திய அணியில் மிளிர்கின்றனர்.
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இருவரும் 40 வயதைத் தொட்டு விடுவார்கள் என்பதால், விரைவில் ஓய்வு பெற்று விடுவார்கள் என்று தெரிகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் இருவரும் இணைந்து பல போட்டிகளில் விக்கெட்டுகளை அள்ளினார்கள். ஒரு சமயத்தில் இருவரில் யாரிடம் பந்தைக் கொடுப்பது என கேப்டன் ரோஹித் சர்மா சமாளிக்க முடியாமல் தவித்ததாக தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு இருவரும் சுழல் ஜாலத்தில் எதிரணியைத் திணறடித்தனர். இந்நிலையில் இவர்களின் இடத்தை நிரப்பப் போவது யார் என பிசிசிஐ இப்போதே தனது தேடலைத் தொடங்கி விட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார். அவரும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் விக்கெட்டுகளை எடுத்தும், ரன்களைக் குவித்தும் வருகிறார். அண்மையில் கூட நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதோடு மட்டுமின்றி, பேட்டிங்கிலும் ஓரளவு ரன்களைக் குவித்தார். அடுத்த அஸ்வினாக இவர் இந்திய அணியில் ஜொலிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக அக்சர் படேலை நாம் மறந்து விடக் கூடாது. இவரும் இந்திய மைதானங்களில் சிறப்பாக பந்து வீசும் திறமை பெற்றவர். அதோடு நல்ல பேட்டிங் திறனும் கொண்டவர். மேலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் சைனோமேன் பௌலர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுவார். இருப்பினும் இவருக்கும் வயது சற்று அதிகம் என்பதால், நீண்ட காலத்திற்கு இவரால் விளையாட முடியுமா என்பது சந்தேகம் தான். ஆகையால் இப்போதைக்கு வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவர் தான் அஸ்வின் - ஐடேஜா காம்போவை நிரப்புவதற்கு ஏற்றவர்களாக இருப்பர். இருப்பினும் பிசிசிஐ என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.