கரிக்கோலின் (Pencil) வரலாறு தெரியுமா குட்டீஸ்?

history of pencil
Pencil
Published on

அது என்னடா கரிக்கோல் என்று நினைக்கிறீர்களா? நான் அன்றாடம் பயன்படுத்தும் பென்சிலின் தமிழ் பெயர் தான் கரிக்கோல். இன்றைய காலகட்டங்களில் பென்சில் இல்லாத வீடுகளை இல்லை என்று கூட சொல்லலாம்! மார்கழி மாதம் தொடங்குவதற்கு முன்பே பெரும்பாலான பெண்கள் வீடுகளை அலங்கரிக்க கோலம் போட கற்றுக்கொள்வதற்கு நோட்டும் பென்சிலுடனும் இருப்பதை பார்க்கலாம்! வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எழுதுவதற்கும், குறிப்பு எடுக்கவும், வரைவதற்கும் பென்சிலையே பயன்படுத்துகிறார்கள். என்னதான், வகை வகையான பேனாக்கள் வந்து விட்டாலும் கூட இந்த பென்சிலுக்கான மவுசு இன்னும் நம்மிடையே குறையவில்லை என்றே சொல்லலாம்! வாங்க, அத்தகைய பென்சில் பிறந்த கதையைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்!

நாம் இன்று பயன்படுத்தும் பென்சிலுக்கு சுமார் 500 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. பென்சிலில் உள்ள கூர்மையான கருமையான பொருளுக்கு கிராபைட் என்ற பெயர். இது நிலக்கரியின் ஒரு மாறுபட்ட வடிவமாகும். கிபி 11ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உள்ள பரோடேல் என்ற இடத்தில் ஒரு மரம் சாய்ந்து விழுந்ததாகவும் அதன் அடிப்பகுதியில் சாம்பல் நிற உலோகம் படிந்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த உலோகம் தான் கிராபைட் என்பது யாருக்கும் தெரியவில்லையாம். அதன் பிறகு ஆங்கிலேயர்கள் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி காகிதத்தில் சுற்றி எழுத ஆரம்பித்தார்களாம். இதன் பின்பு தான் இது மெதுவாக வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.

பென்சில் என்ற பெயர் பென்சிலியம் என்ற லத்தின் வார்த்தையில் இருந்து சுருங்கி பென்சில் என்றானது. உலகில் இன்று வரை சுமார் 350க்கும் மேற்பட்ட பென்சில் வகைகள் உள்ளன. கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றின் மீது எழுதப்படும் பென்சில்களும் இதில் அடங்கும். இதைத் தாண்டி பொறியியல் துறைக்கான பிரத்தியேகமாகவும் பென்சில்கள் வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக பென்சிலில் களிமண் மற்றும் கிராபைட் இவையே மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. களிமண் அதிகமாகவும் கிராபைட் குறைவாகவும் உள்ள பென்சில் அடர்த்தி குறைவாக எழுதும் தன்மை உடையது. களிமண் குறைவாகவும் கிராபைட் அதிகமாகவும் உள்ள பென்சில் அடர்த்தி அதிகமாக எழுதும் தன்மையுடையது.

1800 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஹென்றி என்பவர் கிராபைட் மற்றும் களிமண்ணை அரைப்பதற்கான இயந்திரம், மரத்துண்டில் துளையிடும் கருவி ஆகியவற்றை கண்டுபிடித்தார். 1858 ஆம் ஆண்டுக்குப் பிறகு பென்சிலின் அடியில் ரப்பர் இணைக்கப்பட்டது. இதன் பிறகு தான் பென்சில் அதிக வரவேற்பை பெற்றதாம். ஆனால் அதற்கும் முன்னதாக 1564 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பெரும் அளவில் கிராஃபைட் கண்டுபிடிக்கப்பட்டதாம். மேலும் இத்தாலியைச் சேர்ந்த சிமோனியோ, லின்டியானா தம்பதிகள் கிராபைட் குச்சியை வைத்து எழுத ஆரம்பித்ததாகவும் அதிலிருந்து தான் பென்சில் உருவானதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பால்பாயிண்ட் பேனாவின் கதை!
history of pencil

அதற்கு பின்னர் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மென்மையான மர உருளையை இரண்டாக வெட்டி அதன் நடுவில் கிராபைட் குச்சியை வைத்து பசையால் ஒட்டி பென்சிலை உருவாக்கினார்கள் என்றும், மர உருளையின் மையப்பகுதியை குடைந்து அதன் நடுவில் கிராபைட் குச்சியை வைத்து பென்சிலை உருவாக்கினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி பென்சிலுக்கு பல கதைகள் உண்டு. மர உருளைகளை குடைந்து மையப்பகுதியில் கிராபைட் குச்சிகளை வைத்து பென்சில் தயாரிக்கும் இத்தகைய முறை தான் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.

1795 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் ஜாக் கோண்டே கிராபைட் துகளுடன் களிமண் கலவையை சேர்த்து பென்சிலை உருவாக்கினார் என்றும், கிராபைட் மற்றும் களிமண் அளவு மாறுபடும் போது எழுதும் அழுத்தத்திலும் நிறத்திலும் மாற்றம் ஏற்படுகிறது என்பதையும் கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது. பென்சில் தயாரிக்கப்படும் இந்த மர உருளை அறுங்கோணம் வடிவத்திலும் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. சாம்பல் வண்ணத்தில் இருந்து அடர் கருப்பு வண்ணம் வரை எழுத்துக்கள் கிடைக்கும்படி பல்வேறு வகைகளில் பென்சில்கள் தயாரிக்கப்படுகின்றன. நாம் வழக்கமாக பயன்படுத்தும் கிராபைட் பென்சிலை போலவே கிராபைட் இங்க் பென்சில், வண்ண பென்சில் என பல வகைகள் தற்போது வந்து விட்டன. இதில் வண்ண பென்சில்கள் மெழுகும், வண்ணமும் சேர்த்து உருவாக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
The Invention of the Crayola Crayons: A Colourful History!
history of pencil

பென்சில்களில் HB என்று போடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த HB என்பது ஐரோப்பாவில் தயாராவதை குறிக்கிறது. மேலும் இதில் உள்ள B என்பது கறுப்பையும் H என்பது கடினத் தன்மையும் குறிக்கிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பென்சில்களில் கடினத்தன்மையை குறிப்பதற்கு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பென்சிலை பயன்படுத்தி சுமார் 45 ஆயிரம் வார்த்தைகளை எழுதவும், சுமார் 35 மைல் தூரத்திற்கு கோடு போடவும் முடியும் என்று சொல்லப்படுகிறது.இவ்வளவு பெரிய பாதையை கடந்து வந்த பின்பும் கூட இன்றளவும் பென்சிலுக்கான பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com