மாரத்தான் என்பது ஒரு நீண்ட தூர பந்தயம் ஆகும். மாரத்தான் பந்தயத்தின் வரலாறு கி.மு 490 ல் தொடங்கியது. ஏதென்சில் இருந்து 26.2 மைல் தொலைவில் உள்ள மாரத்தான் மைதானத்தில் கிரேக்க மற்றும் பாரசீக வீரர்களுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. மாரத்தான் போரில் சுமார் பத்தாயிரம் கிரேக்க வீரர்கள் ஒரு மில்லியன் பாரசீக வீரர்களைத் தோற்கடித்து தங்கள் தாயகத்தை பாதுகாத்தனர். இது ஒரு பெரிய செய்தியாக பரவியது. எனவே கிரேக்க சிப்பாய் ஃபைடிப்பிடிஸ் என்பவரை இந்த வெற்றி செய்தியை கிரேக்க குடிமக்களுக்கு தெரிவிக்க அனுப்பினார்கள்.
மாரத்தான் பந்தயம்:
கிரேக்க சிப்பாய் ஃபைடிப்பிடிஸ் மாரத்தான் போரில் இருந்து ஏதன்ஸ் வரை, வழியில் நிற்காமல், சுமார் 26.2 மைல்கள் ஓடி போரில் தனது நாட்டின் வெற்றியை தெரிவித்தார். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததால் வேகமாக ஓடுவதற்காக தனது கைகளிலும், தலையிலும் உள்ள கவசங்களையும் கழற்றினார். ஃபைடிப்பிடிஸ் போரினால் மிகவும் சோர்வாக இருந்த போதிலும் காடுகள், முட்கள், மலைகள் வழியாக ஓடி கொண்டே இருந்தார்.
அவர் ஏதன்ஸ் நகருக்குள் நுழைந்த போது அவரது கால்கள் மோசமாக சேதம் அடைந்தன. மூச்சு விட முடியாத நிலையிலும் தனது நாட்டு மக்களைப் பார்த்து, "நாங்கள் வென்று விட்டோம்" என்று கூச்சலிட்டு விட்டு அதே இடத்தில் இறந்து விட்டார்.
மாரத்தான் பந்தயத்தின் தூரம்: ஃபைடிப்பிடிஸ் என்ற சிப்பாயின் நினைவாக 1896 ல் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் பந்தயம் சேர்க்கப்பட்டது. 1921 ம் ஆண்டு வரை அதன் தூரம் நிர்ணயிக்கப்பட வில்லை. இருந்தாலும் 1896 ல் நடந்த நவீன ஒலிம்பிக் நிகழ்வுகளில் மாரத்தான் போட்டியும் ஒன்று. இந்த பந்தயத்தின் தூரம் 26.2 மைல்கள் (42.195) கி.மீ. மாரத்தானுக்கும், ஏதன்ஸுக்கும் இடையே ஆன தூரம் 26 மைல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி 1896ல் கிரீஸ் நாட்டு ஏதென்சில் முதல் முதலாக மாரத்தான் போரிலிருந்து ஓடிய ஃபைடிப்பிடிஸின் நினைவாக மாரத்தான் ஓட்டமொன்று நடத்த ஏற்பாடாயிற்று. லூயிஸ் என்ற கிரேக்க விவசாயிதான் இதை ஓடி பரிசு பெற்றார். கிரேக்கர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெண்கள் அவரது காலடியில் தமது நகைகளை வீசி எறிந்தார்கள். ஒரு ஓட்டல்காரர் ஒரு வருட காலத்திற்கு இலவச உணவை அவருக்கு அளிக்க முன் வந்தார். ஒரு சிறுவன் அவரது காலணிகளுக்கு இலவசமாக ஆயுள் முழுவதும் பாலிஷ் போட முன் வந்தான்.
முதல் பெண் மாரத்தான் பந்தயம் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடத்தப்பட்டது. அங்கு அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை ஆன ஜோன் பெனாய்ட் முதல் ஒலிம்பிக் தங்க பதக்கத்தை வென்றார்.
இக்காலத்தில் மாரத்தான் ஓட்டம் விழிப்புணர்வுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் நடத்தப்படுகிறது. பெரும்பான்மையாக நகரப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் ஓர் இடத்தில் தொடங்கி, மக்கள் அதிகம் கூடும் மற்றொரு இடத்தில் முடிவடைவதாக இருக்கும். இந்த ஓட்டத்திற்கான பாதை நகரின் முக்கியமான சாலைகளாக தான் இருக்கிறது.
மாரத்தானில் பங்கேற்பது மனதில் ஒரு விதமான உற்சாகத்தையும், மன வலிமையையும் அதிக படுத்தும் என்பதால் ஆண், பெண் என்கிற பாலின பாகுபாடின்றி போட்டிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கிறது.