

குட்டீஸ்களா! பொங்கல் என்றாலே உங்களுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது கரும்பு தானே? கரும்பை எப்படியெல்லாம் சுவைத்து மகிழ்ந்து பொங்கலை கொண்டாடுவீர்கள்! ஆனால், அந்த கரும்பு எப்படி வந்தது என உங்களுக்குத் தெரியுமா?
கரும்பை முதன்முதலில் தமிழகத்திற்கு கொண்டு வந்த பெருமை தகடூர் அதியமான் குல முன்னோர்களுக்கே உரியது. கரும்பை சக்கரத்தில் வைத்து பிழிந்து, அதன் சாற்றை எடுத்து இனிப்பு தயாரிப்பதால் அந்தப் பொருளுக்கு 'சர்க்கரை' எனப் பெயர் ஏற்பட்டது. சர்க்கரையை லத்தீன் மொழியில் 'சக்கரம்' (Saccharum) என்பர்.
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபோது, அவனது வீரர்கள் வழிநெடுக கரும்பைப் பார்த்தார்கள். விளையாட்டாக அதில் ஒன்றை உடைத்து வாயில் வைத்து கடித்தனர். இனிப்புக்காக அதற்கு முன்னர் அவர்கள் தேனையே பயன்படுத்தி இருந்ததால், கரும்பின் சுவை அவர்களைப் பெரிதும் கவர்ந்தது.
"தேன் நாணல் இது" என தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள். பின் அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது, சில கரும்பு துண்டுகளையும் எடுத்துச் சென்றனர். "தேனீக்கள் உதவியின்றி தேனைக் கொடுக்கும் செடி இந்தியாவில் விளைகிறது" எனத் தங்கள் நாட்டினரிடம் சொல்லி கரும்பை அறிமுகப்படுத்தினார்கள்.
ஏழாம் நூற்றாண்டில் கரும்பு பாரதத்திலிருந்து எகிப்துக்கும், பின் ஐரோப்பிய நாடுகளுக்கும், சீனாவுக்கும் பரவியது. கொலம்பஸ் தனது கடல் பயணத்தில் கரும்பை உபயோகப்படுத்தி இருக்கிறார். இன்று தாய்வான், தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, சிலி, மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் கரும்பு பயிராகிறது.
கரும்பின் அருமையை 15-ஆம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயர்கள் அறிந்தனர்; அதுவரை அவர்கள் தேனையே பயன்படுத்தி வந்தனர். 13-11-1800 அன்று புக்கானன் என்ற ஆங்கிலேயன் திருச்சி மாவட்டம் கரூருக்கு வந்திருந்தான்.
அவன் தன் குறிப்பில் புகளூர் சர்க்கரை உற்பத்தி பற்றி எழுதியிருந்தான். கரும்பைப் பயன்படுத்தி அதிலிருந்து வெள்ளை சர்க்கரையை ஆலைகள் மூலம் தயாரிக்கும் முறை முதன்முதலில் ஈராக்கில்தான் துவக்கப்பட்டது.
வெள்ளை சர்க்கரை ஆலைகள் மூலம் தயாராவதற்கு முன்னால், ஜாவாவைச் சேர்ந்த 'அஸ்கா' நகரிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதியானது. அதனாலேயே சர்க்கரையைத் தமிழர்கள் 'அஸ்கா' என அழைத்தனர்.
இன்று பலவிதமான நிறங்களில் கரும்பு பயிராகிறது. தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, இந்த சர்க்கரையை உணவில் பயன்படுத்த சைவர்கள் தயக்கம் காட்டினர். காரணம், அந்த காலத்தில் எலும்பை எரித்து அதிலிருந்து ஏற்படும் கரியை அழுக்கு அகற்றுவதற்காகப் பயன்படுத்தினர். ஆனால், இப்பொழுது சர்க்கரை ஆலைகளில் அழுக்கு அகற்ற அந்தக் கரியைப் பயன்படுத்துவதில்லை.
வெள்ளைக் கரும்பு கனமும் சுவையும் உடையது; ஆனால் எளிதில் செரிக்காது, கபத்தையும் சிறுநீரையும் அதிகமாக்கும். கருப்புக் கரும்பு கரிப்பும் இனிப்பும் உடையது; இதற்கு நிறைய சாறு உண்டு.
கரும்பின் வேருக்கு மேல் பகுதி இனிப்புடையது; நடுப்பகுதி மிகுந்த இனிப்புள்ளது; முனைப்பகுதி கரிப்பும் சுவையற்ற தன்மையும் உடையது. கரும்பை வெறும் வயிற்றில் உட்கொண்டால் பித்தத்தைப் போக்கும்.
கரும்பு யானைகளுக்கு மிகவும் பிரியமான உணவு. குட்டீஸ்களா! உங்களுக்கும் தான் கரும்பு மிகவும் பிரியமானது இல்லையா? பொங்கலுக்கு கரும்பு தானே முக்கியம்! நீங்களும் கரும்பு சுவைத்து அதன் இனிப்பில் மயங்கி, பொங்கலை இனிப்பாகக் கொண்டாடுங்கள். என்ன குட்டீஸ்களா! கரும்பு வாங்கத் தயாராகி விட்டீர்களா? எத்தனை கரும்பு உங்களுக்குப் பிடிக்குமோ, அத்தனை கரும்பு வாங்கிச் சாப்பிடுங்களேன்!