

ஒருநாள், காகம் ஒன்றைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தது கொக்கு.. காகமும் வந்தது. கொக்கு ஒரு குளக்கரையில் அமர்ந்திருந்தது. தன் நண்பன் காகம் வந்ததும், கொழுத்த மீனைப் பிடித்து விருந்து வைத்தது. விருந்துண்ட காகம், குளத்து நீரைக் குடித்துத் தாகம் தீர்த்தது. பின்னர், மறுவீட்டு விருந்துக்காகக் கொக்கைத் தன் மரக்கிளைக்கு வருமாறு அழைத்தது.
கொக்கு வந்ததும், நிறைய பழங்களையும் பக்கத்து வீடுகளில் காகத்திற்காக வைத்த சோற்றையும் பகிர்ந்து தந்தது காகம். கொக்கும் காகமும் சாப்பிட்டு முடித்ததும் நீரருந்தத் தேடின. பக்கத்தில் எங்கும் குளமோ, குட்டையோ இல்லை. கொக்குக்கு காகம் தந்த வடையின் காரம், தண்ணீர் தாகத்தை அதிகரித்தது.
காகம் பறந்து சென்று பார்க்கையில், ஒரு வீட்டின் பின்புறம் இருந்த பானை ஒன்றில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. காகம் அந்த நீரைப் பருகத் தன் அலகை உள்ளே நுழைத்தது; ஆனால், நீர் எட்டவில்லை!
'சரி, தனக்குத்தான் தண்ணீர் இல்லை, பரவாயில்லை! நண்பனுக்காவது கொடுப்போம்' என்று எண்ணிய காகம், கொக்கை அழைத்து வந்து அந்த நீரை அருந்தச் சொன்னது. கொக்கு தன் நீளமான கூர் மூக்கால் நீரை அருந்திவிட்டு நன்றி சொன்னது.
ஆனாலும், தன்னை விருந்துக்கு அழைத்த காக நண்பன் நீர் அருந்த முடியாத நிலைக்கு வருந்திய கொக்கு, “இரு வருகிறேன்!” என்று சொல்லிப் பறந்து போனது. வழியில் இளநீர் விற்பவர் கடையில், இளநீர் அருந்தியவர்கள் குடித்துவிட்டுப் போட்ட ‘ஸ்ட்ரா’ (Straw) ஒன்றினை எடுத்து வந்து காகத்திடம் கொடுத்தது.
“இதைப் பயன்படுத்தித் தண்ணீரை உறிஞ்சிக் குடி. அந்தக் காலம் மாதிரி சின்னச் சின்ன கற்களை எல்லாம் பொறுக்கிப் போட்டுக் குடிக்கலாம் என்று நினைக்காதே! காலத்திற்குத் தக்கபடி உன்னை மாற்றிக்கொள்!” என்று சொல்லிப் பறந்து போனது கொக்கு.