
தீபாவளி என்று ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு, "ரொம்பத் தித்திப்பு!" என்கிறோம். அந்தத் தித்திப்பு யாரால், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
அமெரிக்காவில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு விஞ்ஞானி 1879 ஆம் ஆண்டு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். வேலை முடிந்ததும் அவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார். எதை எடுத்து வாயில் வைத்தாலும் அது தித்தித்தது; கை பட்டதெல்லாம் தித்தித்தது. முதலில் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே ஆச்சரியமாக இருந்தது.
சற்று நேரத்திற்குப் பிறகு, தித்திப்புக்குக் காரணம் தனது கைகள்தான் என்று அறிந்தார். ஓடினார் ஆராய்ச்சி சாலைக்கு! தான் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பொருள் என்னவென்று பார்த்தார். அது ஆர்தோ பென்ஸாயில் கல்பிமைடு என்னும் ஒரு ரசாயனப் பொருள்.
அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட பொருள், சர்க்கரையைப்போல 550 மடங்கு அதிகம் தித்திப்புள்ள சாக்கரீன் எனப்படும் தித்திப்புப் பொருளாகும். அதைக் கண்டுபிடித்தவர் பால் பெர்க் என்ற விஞ்ஞானி.
இருப்பினும், தித்திப்பைச் சரியானபடி அளவிட, மதிப்பிட இதுவரையிலும் எந்தவிதமான விஞ்ஞானப் பரிசோதனையும் கிடையாது. பின் எப்படி கூறுகிறார்கள் தெரியுமா?
மனிதனுடைய நாக்கின் ருசியை நம்பித்தான், "இத்தனை மடங்கு அதிக தித்திப்புள்ளது," என்று கண்டுபிடிக்கிறார்கள். நாக்கில் வைத்தால் தித்திப்பு உணர்ச்சியை உண்டாக்கக்கூடிய அவ்வளவு லேசான அளவுக்குச் சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்துக் கொள்கிறார்கள். இதை அடிப்படையான அளவாகக் கொள்கிறார்கள். பிறகு, ஒரு குறிப்பிட்ட பொருள் இதே அளவு தித்திப்பு உணர்ச்சியை உண்டாக்க எத்தனை பங்கு தண்ணீருடன் சேர்க்கப்பட வேண்டும் என்று கணக்கிடுகிறார்கள். இதிலிருந்து ஒரு பொருளின் தித்திப்பைக் கணக்கிடலாம்.